வீதிகளில் ஆங்காங்கே கொடூரமாக கொல்லப்பட்ட உயிர்கள், எரிந்து கிடக்கும் பீரங்கிகள், மிக மோசமாக சூறையாடப்பட்ட சாலைகள் என திரையில்கூட காண விரும்பாத காட்சிகளை உக்ரைனின் புச்சா நகரில் காண முடிந்தது.
கீயவிலிருந்து சிறு தொலைவில் இருக்கும் ஒரு புறநகர் பகுதிதான் இந்த புச்சா. அங்கிருந்து ரஷ்யப் படைகள் முழுவதுமாக விலகிக் கொண்டதால் அங்கே சாலை எங்கும் சிதறிக் கிடக்கும் போரின் கோர சாட்சிகளை காண முடிந்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் நடைபெற்றிருக்கும் ஒரு மோசமான போர்க் குற்றம் இது என்றார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி.
வீதிகள் எங்கும் சிதறிக் கிடக்கும் உடல்களை கண்ட உலக நாடுகள் கொதித்தெழுந்துள்ளன. திங்களன்று புச்சாவுக்கு பயணம் மேற்கொண்ட செலன்ஸ்கி இது ஒரு ‘இனப்படுகொலை’ என்று தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி கிட்டதட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் அங்காங்கே மக்கள்படும் துயரம் குறித்தும் இருபக்க ராணுவத்திலும் எண்ணற்ற வீரர்கள் உயிரிழப்பது குறித்தும் நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனின் புச்சா நகரில் கண்ட காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கிறது.
அங்கு பொதுமக்கள் கூட்டாக கொல்லப்பட்டுள்ளனர். சிலர் பின் புறமாக கைகள் கட்டப்பட்டு உயிரிழந்துள்ளனர். பலர் தலையில் சுடப்பட்டு இறந்துள்ளனர். இன்னும் சிலர் மோசமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கொத்து கொத்தாக உயிரிழந்த மக்களை மொத்தமாக புதைத்துள்ளனர்.
புச்சாவில் உயிர் பிழைத்தவர்கள், ரஷ்ய படைகள் பார்த்த இடங்களில் எந்த காரணமும் இன்றி சுட்டனர் என்று தெரிவித்துள்ளனர். உணவு, மின்சாரம் என எதுவும் இல்லாமல் இருட்டில் இருந்த மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல நினைத்தாலோ அல்லது ஏதேனும் கேள்வி எழுப்பினாலோ ரஷ்யப் படைகளால் சுடப்பட்டனர் என அல்ஜெசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் உயிர் தப்பிய நபர் ஒருவர். உணவுக்காக வெளியே சென்றால் உயிரோடு திரும்பவது நிச்சயமற்ற நிலையாக இருந்துள்ளது.
ஆண், பெண் குழந்தைகள் என எந்த வேறுபாடும் இன்றி கொல்லப்பட்டுள்ளனர்.
புச்சாவின் மக்கள் வெளியேற தாங்கள் அனுமதித்தாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவும் ஒரு மேற்கத்திய சதி என்றே அந்நாடு கூறுகிறது.
புச்சாவில் சாலையில் கிடக்கும் உடல்கள் ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அங்கு பொய்யாக உருவாக்கப்பட்டவை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரின் கூற்று பொய் என்கிறது பிபிசியின் செய்தி. ரஷ்யப் படைகள் வெளியேறுவதற்கு முன்பே எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் வீதிகளில் உடல்கள் இருப்பது தெரிகிறது. பின் படைகள் வெளியேறிய பின் காரில் சென்று அதே இடங்களில் அந்த உடல்களை கண்டுள்ளனர்.
இந்த கொலைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுவரை ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா, புச்சா கொலைகள் குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஐநா பொது கவுன்சிலில் பேசிய இந்தியாவுக்கான ஐ.நா.,வின் நிரந்திர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி,
“மோசமடைந்து வரும் சூழல் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலைக் கொள்கிறது. உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்திகிறோம்,”
“உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து கடந்த ஐநா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதற்கும் தற்போதைய சூழலுக்கும் எந்த மாற்றமும் இல்லை. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நிலைமை மோசமடைந்துள்ளது,” என்று தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பிறகு வன்முறையை கண்டித்து இந்தியா வெளியிடும் கடுமையான ஒரு அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.