உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் ஒரு தீபகற்பமாகக் கடலோரம் இருக்கும் பகுதி கிரிமியா. 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா முறைகேடாகக் கைப்பற்றி பிறகு அங்கே ஒரு போலியான மக்கள் வாக்கெடுப்பை நடத்தி இணைத்துக் கொண்டது. அதே வழியில் தற்போது உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை சேர்ப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவே கூறாவிட்டாலும் அதுதான் உண்மை.
அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டி, அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யா ஏற்கனவே இணைப்புக்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது என்றார்.
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் மாதத்திற்குள் ரஷ்யாவுடன் இணைவதற்கான "போலியான" வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
2014 ஆம் ஆண்டு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அரசை எதிர்த்து மக்கள் இலட்சக்கணக்கில் அணி திரண்டு போராடினர். இதனால் ஆத்திரமுற்ற ரஷ்யா ஏற்கனவே திட்டமிட்டது போல அந்த ஆண்டில் கிரிமியாவிற்கு பதிலி இராணுவத்தை அனுப்பிக் கைப்பற்றியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இது குறித்து ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்டபோது கிரிமியாவில் ரஷ்ய ராணுவமே இல்லை என்று முழு பூசணிக்காயை மறைத்து பேசினார்.
உலகை நம்ப வைப்பதற்காக கிரிமியாவில் ஒரு போலி வாக்கெடுப்பையும் நடத்தினார். அப்போது உலக நாடுகள் இதைக் கண்டித்ததோடு கிரிமிய இணைப்பையும், வாக்கெடுப்பையும் ஏற்கவில்லை. அங்கீகரிக்கவில்லை.
இப்போது உக்ரைனை சுக்கு நூறாக்கி நாசப்படுத்தி வரும் ரஷ்யா அதே முறையில் கிழக்கு உக்ரைன் மற்றும் ஆக்கிரமிக்கும் இதர பகுதிகளையும் இணைக்க விரும்புகிறது.
"நாங்கள் இதை அமெரிக்க மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்," என்று திரு கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார். "யாரும் புடினின் நாடகத்தைக் கண்டு ஏமாறவில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2014-ல் இருந்து தனது போலி நாடகத்தைத் தூசி தட்டுகிறார்," என்று அவர் கூறினார்.
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதற்கும், ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறுவதற்கான வாக்கெடுப்பை ஏற்பாடு செய்யும் நோக்கத்துடன், ரஷ்யா சட்ட விரோதமாக ரஷ்ய சார்பு அதிகாரிகளைக் கிழக்கு உக்ரைனில் நியமிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
வாக்குகளின் (போலி) முடிவுகள், ரஷ்யாவால் இறையாண்மை கொண்ட உக்ரேனிய பிரதேசத்தை இணைப்பதற்கான முயற்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று திரு கிர்பி கூறினார்.
ரஷ்யா ஏற்கனவே தனது சொந்த பிராந்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகளை உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் நிறுவியுள்ளது. அங்கிருக்கும் மக்களையும் பலவந்தமாக ரஷ்யப் பகுதிக்கு அகதிகளாகக் கொண்டு சென்றிருக்கிறது.
2014 இல் கிரிமியா இணைப்பின் போது ரஷ்யா நடத்திய வாக்கெடுப்பைப் பல உக்ரைனிய மக்கள் புறக்கணித்தனர். அந்த வாக்கெடுப்பு சுதந்திரமாகவோ அல்லது நியமாகவோ நடத்தப்படவில்லை. ஆனால் வாக்கெடுப்பு முடிவுகள் என்னவோ கிரிமிய மக்கள் ரஷ்யாவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்ததாக வந்தது. இதை உக்ரைன் நாடோ, உலக நாடுகளோ ஏற்கவில்லை.
தற்போது உக்ரைனின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்படும் இதே போன்ற வாக்கெடுப்புகள், ரஷ்யாவுடன் இணைவதற்கான எந்தவொரு எதிர்ப்பும் பெருமளவில் ஒடுக்கப்பட்ட நிலையில், கிரிமியாவிற்கு நடந்த சூழ்நிலையை நிச்சயமாகக் காட்டுகிறது. ஒரு பகுதியைக் குண்டு வீசி நாசமாக்கி மக்களைப் பணையக் கைதிகளாக மாற்றி அதில் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் வேண்டும்? திரு கிர்பி ரஷ்ய திட்டங்களை விரிவாக விளக்கினார்.
எந்தவொரு இணைப்பும் சட்ட விரோதமானது என்பதை உலகம் அறிந்திருக்கிறது என்றார். மேலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து இதற்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
ரஷ்யா இணைப்பிற்கு திட்டமிட்ட பகுதிகள் கேர்சன், ஸாபோரிஸியா, டொனெட்ஸ்க், லூகான்ஸ்க் Kherson, Zaporizhzia, Donetsk Luhansk ஆகிய பகுதிகள் அடங்கும் என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 24 இல் துவங்கிய ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் நாட்டையே நாசமாக்கிப் பல நூறு மக்களையும் கொன்றிருக்கிறது. தொடர்ந்து ஏவுகணைகள் உக்ரைன் நாடு முழுவதும் ஏவப்பட்டு வருகிறது. அதில் கணிசமானவை மக்கள் குடியிருப்பில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கிட்டத்தட்ட 5 மாதங்களாக நடக்கும் இந்த ஆக்கிரமிப்பு போரை முடிந்த அளவு உக்ரைன் மக்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வந்து முடிந்த அளவு உக்ரைன் பகுதிகளை இணைப்பதே ரஷ்யாவின் திட்டம் என்பதை அமெரிக்கா கூறுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust