1993 ஆம் ஆண்டு ஸ்னைப்பர் எனும் ஹாலிவுட் படம் வெளிவந்து பிரபலமாக ஓடியது பலருக்கும் நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த ஸ்னைப்பர் கதைகளை வைத்து நிறைய திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன.
ஸ்னைப்பர் வீரர் என்பவர் கடும் பயிற்சி பெற்ற ஒரு துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். அவர் மிகுந்த தொலைவிலிருந்து இலக்குகளை சுடுவதில் நிபுணத்துவம் பெற்றவர். தன்னை மறைத்துக் கொண்டு தொலைவிலிருக்கும் இலக்குகளை குறிபார்த்து சுடுவார். அப்போது தோட்டாவின் வேகம், காற்றின் வேகம், இலக்கின் துல்லியம் போன்றவற்றை கவனத்துடன் திட்டமிடுவார்.
ஸ்னைப்பர் வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நவீன தொழில்நுட்பத்தில் மேம்பட்டவை. ஒரு கிமீ தூரத்திற்கும் அதிகமான தூரத்தில் குறிபார்த்து சுடும் வல்லமை உடையவை.
இதுவரை ஸ்னைப்பர் துப்பாக்கி சுடுதலில் மிகவும் நீண்ட தூரம் என்பது 2017ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஒரு ஸ்னைப்பர் வீரர் கிட்டத்தட்ட மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை சுட்டிருக்கிறார். அதற்கு முந்தைய சாதனை என்பது கிரைக் ஹேரிசன் எனப்படும் பிரிட்டிஷ் வீரர் நவம்பர் 2009 இல் தாலிபான் போராளிகளை 2.4 கிலோ மீட்டர் தூரத்தில் சுட்டிருக்கிறார்.
இனி உக்ரேனின் தேசிய வீராங்கனையின் சாதனையைப் பார்ப்போம்.
சார்கோல் அல்லது கரி என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீராங்கனை தற்போது உக்ரைனின் தேசிய வீராங்கனையாக போற்றப்படுகிறார். "லேடி டெத்" என்ற புனைப்பெயர் கொண்ட இரண்டாம் உலகப்போரின் புகழ்பெற்ற உக்ரைனிய துப்பாக்கி சுடும் வீராங்கனையோடு அவர் ஒப்பிடப்படுகிறார்.
உக்ரேனிய ராணுவம் கரி எனும் அந்த வீராங்கனையின் அடையாளத்தை மறைக்கும் பொருட்டு முகத்தை ஓரளவு மூடி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த வீராங்கனை 2017 ஆம் ஆண்டு உக்ரைனின் ஆயுதப் படையில் சேர்ந்தார். அப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக அவர் போராடினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனால் பிப்ரவரி 24 அன்று ரஷ்யா இராணுவம் புடினின் உத்தரவின் பேரில் உக்ரைன் மீது ஆக்கிரமித்தபோது அவர் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவர் மாஸ்கோவின் படைகளை தண்டிப்பதாக சபதம் செய்தார்.
"நாங்கள் ஆக்கிரமிப்பு ரசியர்களை வெளியேற்றுவோம்" என்று அவர் கூறியதாக உக்ரேனிய ராணுவத்தின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. ஆக்கிரமித்த ரஷ்யர்கள் மனிதர்களை அல்ல. அவர்கள் பாசிஸ்டுகள் என்று கூட சொல்ல முடியாது, அவர்களை விட கேவலமானவர்கள். அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
உக்ரேனில் பிறந்த துப்பாக்கி சூடும் பெண் வீரர்களின் பெருமை மிக்க வரிசையில் கரியும் இணைகிறார்.
இதற்கு முன்பு இரண்டாம் உலகப்போரில் பிரபலமாக இருந்தவர் ஸ்னைப்பர் துப்பாக்கி சுடும் வீராங்களையான லியுட்மிலா பாவ்லிச்சென்கோ. இவர் இரண்டாம் உலகப் போரின்போது 300க்கும் மேற்பட்ட ஜெர்மனியர்கள் கொன்றதற்காக "லேடி டெத்" என்று அழைக்கப்பட்டார்.
பாவ்லிச்சென்கோ தனது துப்பாக்கியால் உக்ரைனின் துறைமுகமான ஒடெசா மற்றும் செவாஸ்டோபோல் நகரங்களை ஜெர்மன் நாஜிகளுக்கு எதிராக பாதுகாத்தார். இறுதியில் அவர் குண்டுகளால் காயப்படுவதற்கு முன்பு வரை விடாமுயற்சியுடன் போராடினார். பின்னர் இரண்டாம் உலகப் போர் முயற்சிகளுக்காக அமெரிக்க ஆதரவை பறை சாற்றும் பொருட்டு அவர் அமெரிக்கா சென்றார்.
போர்க்களத்தில் தனது வீரச் செயல்களுக்காக, பாவ்லிச்சென்கோ சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ விருதைப் பெற்றார். இது சோவியத் ஒன்றியத்தின் மிக உயர்ந்த இராணுவ விருதாகும்.
தற்போது புதிய பாவ்லிச்சென்கோவாக உருவெடுத்திருக்கிறார் உக்ரைன் வீராங்கனை கரி. அவர் மட்டுமல்ல கடந்த எட்டு ஆண்டுகளில் டான்பாஸ் பகுதியில் 40 உக்ரேனியர்களை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் ரஷ்ய சார்பு பிரிவினைவாதியான இரினா ஸ்டாரிகோவாவை மார்ச் மாத இறுதியில் உக்ரேனிய இராணுவம் கைப்பற்றியதாகக் கூறியது. இவரும் ஒரு ஸ்னைப்பர் வீராங்கனைதான். ஆனால் ஆக்கிரமிப்பு ரஷ்யாவிற்காக போராடியவர்.
தற்போது ஸ்னைப்பர் வீராங்கனையாக புகழ் பெற்றுள்ள கரியோடு இன்னொரு வீரரும் புகழ் பெற்றிருக்கிறார். உக்ரைனின் ஆயுதப் படைகள் போரின் ஆரம்ப நாட்களில் பல ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, "கோஸ்ட் ஆஃப் கிய்வ்" என்று அழைக்கப்படும் போர் விமானியின் செல்ஃபியைப் தனது செய்திக் குறிப்பில் பகிர்ந்து கொண்டது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு எதிராக உக்ரைன் தேசமே எழுந்து நிற்கும் போது இத்தகைய வீரர்கள், வீராங்கனைகள் உருவாகிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு ரஷ்யாவில் அப்படி ஒரு ஹீரோவைக் கூட ரஷ்யா இராணுவம் இதுவரை சொன்னதில்லை. சொல்லப்போனால் 7 ஜெனரல்கள் எனப்படும் உயர் தளபதிகளை ரஷ்ய இராணுவம் இழந்திருக்கிறது. நேட்டோ மதிப்பீட்டின் படி7,000 முதல் 15,000 ரஷ்ய இராணுவ வீர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 40,000 பேர் இறந்தோ, காணால் போயோ, காயம் பட்டோ, கைதாகியோ இருந்திருக்கிறார்கள்.
உக்ரைனின் கரி போன்று நிறைய வீரர்கள் இன்று தாய்நாட்டைக் காக்க போராடி வருகிறார்கள்.