வாட்டர் கேட் ஊழல் ஜூன் 17, 1972 இல் வெளியானது. இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் பேசப்பட்ட ஊழல்களில் ஒன்றாகும். இந்த ஊழல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த ஊழல் எப்போது எப்படி நடந்தது எனும் கால வரிசையை இங்கே காணலாம்.
ஜூன் 16 முதல் 17, 1972 இரவு வாசிங்டனில் உள்ள வாட்டர்கேட் ஹோட்டல் மற்றும் அலுவலக வளாகத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டி தலைமையகத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
“பிளம்பர்கள்" என்று அழைக்கப்படும் அவர்கள் அறுவை சிகிச்சை கையுறைகளை அணிந்து புகைப்படம் மற்றும் குரல் பதிவு செய்யும் கருவியுடன் இருந்தார்கள்.
இதற்கு மறுநாள் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குடியரசுக் கட்சியின் அதிபர் ரிச்சர் நிக்சனின் மறு தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்தில் இந்தக் கைது நடந்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது.
பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டீன் எனும் இரண்டு இளம் பத்திரிகையாளர்கள், நிக்சனின் மறுதேர்தல் குழுவின் உறுப்பினரும் சிஐஏவின் முன்னாள் உறுப்பினருமான ஜேம்ஸ் மெக்கார்ட் போன்றோர் ஊடுருவியவர்களில் சிலர் என்று கருதப்பட்டனர். இதற்கும் வெள்ளை மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக செய்தியாளர்கள் கூறினர்.
ஜூன் 22 அன்று அதிபர் நிக்சன் இந்த விவகாரத்திற்கும் தனது நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.
’ஆழமான தொண்டை’
ஆனால் விசயங்கள் இத்தோடு முடியவில்லை. நிக்சனுக்காக பணிபுரிந்த இருவர் மற்றும் நிக்சனது சிறப்பு உதவியாளர் சார்லஸ் கால்சன் ஆகியோர் வாட்டர்கேட் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வாக்கி டாக்கிகளைப் பயன்படுத்தியதாக அந்த இரட்டை பத்திரிகையாளர்கள் கூறினர்.
அந்த பத்திரிகையாளர்களுக்கு இரகசியமாக தகவல் அளித்தவர் "ஆழமான தொண்டை" என அப்போது பிரபலமாயிருந்த ஒரு ஆபாசப் படத்தின் பெயரால் அழைக்கப்பட்டார். பல வருடங்களுக்கு பிறகு 2005 இல் அவர் மார்க் ஃபெல்ட், எஃப்பிஐயின் உதவி இயக்குநர் என்பது தெரிந்தது.
இவர் அக்டோபர் 1972 மற்றும் நவம்பர் 1973க்கு இடையில் வாஷிங்டனில் உள்ள ஒரு கார் நிறுத்தும் பகுதியில் பத்திரிகையாளர் உட்வார்டை ஆறு முறை சந்தித்தார்.
அக்டோபர் 10, 1972 அன்று இரண்டு பத்திரிகையாளர்களும் வெள்ளை மாளிகை பாரிய உளவு மற்றும் அரசியல் நாசவேலை மூலம் அதிபர் நிக்சனை தேர்ந்தெடுக்க முயல்வதாக அம்பலப்படுத்தினர். நிக்சன் பிரச்சாரத்திற்காக வந்த நூறாயிரக்கணக்கான டாலர்களிலிருந்து ஜனநாயகக் கட்சியின் முகாமை சீர்குலைக்கும் பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்டன. இத்தகைய சர்ச்சைகள் இருந்த போதும் நிக்சன் தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மெக்கவர்வனுக்கு எதிராக நவம்பர் 6 அன்று தெரிவு செய்யப்பட்டு வெற்றியடைந்தார்.
ஜனவரி 8, 1973 அன்று வாட்டர்கேட் திருடர்கள் எனும் விசாரணை துவங்கியது. பிப்ரவரி 7 அன்று செனட்டில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் அக்கட்சி ஒரு கமிட்டியை நியமித்து 1972 தேர்தல் பிரச்சாரம் குறித்து விசாரணையைத் துவங்கியது. அதன் விசாரணைகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.
அந்த விசாரணையில் சிஐஏவின் முன்னாள் உறுப்பினரான மெக்கார்டு வெள்ளை மாளிகையின் அழுத்தம் காரணமாக நீதிமன்றத்தின் முன் பொய் சொன்னதாக விரைவில் ஒப்புக் கொள்கிறார்.
இந்த விசாரணையின் விளைவாக ஏப்ரல் 30 அன்று அட்டர்னி ஜெனரல் ரிச்சர்டு மற்றும் அதிபரின் இரண்டு உதவியாளர்களான பாப் ஹால்டிமேன் மற்றும் ஜான் எகிர்லெக்மேன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். மூன்றாவது உதவியாளரான ஜான் டீன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜூன் 25 அன்று ஜான் டீன் விசாரணை கமிட்டியிடம் செப்டம்பர் 15, 1972 முதல் இந்த ஊழலை அதிபர் நிக்சன் அறிந்திருந்தார் என்று கூறுகிறார். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை அமைதியாக இருக்க வைக்க நிக்சன் ஒரு மில்லியன் டாலர் வரை செலவழிக்க தயாராக இருந்ததாக அவர் கூறினார். இதன் மூலம் அதிபரை நேரடியாக குற்றஞ்சாட்டிய முதல் சாட்சியாக அவர் திகழ்ந்தார்.
ஜூலை 16 அன்று ஒரு செய்தி பூகம்பம் போல வெளியானது. அன்று வெள்ளை மாளிகையின் ஊழியர் ஒருவர் விசாரணைக் கமிட்டியிடம் அதிபரின் ஓவல் அலுவலகம் முழுக்க இரகசியமான மைக்ரோஃபோன்களால் நிரம்பியிருந்தது என்றார். இத்தகைய இரகசிய ஒட்டுக்கேட்கும் ஏற்பாடு 1970 முதல் இயங்கி வந்ததாக அவர் கூறியது ஊழல் பற்றிய விசாரணையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
ஜூலை 23, 1973 அன்று நிக்சன் அப்படி இரகசியமாக ஒட்டுக் கேட்ட கேசட்டுகளை கமிட்டியிடம் ஒப்படைக்க மறுத்தார். தொடர் குறுக்கு விசாரணையில் அவர் அக்டோபர் 20 அன்று ஒன்பது கேசட்டுளை ஒப்படைத்தார். மேலும் இரண்டு கேசட்டுகள் காணவில்லை. நிக்சனுக்கும் அவரது உதவியாளர் டீனுக்கும் ஜூன் 20, 1972 அன்று நடந்த உரையாடல் கேசட் நாடாவிலிருந்து அழிக்கப்பட்டிருந்தது.
மே 9, 1974 அன்று பிரதிநிதிகள் சபையின் நீதித்துறைக் குழு நிக்சனை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் விசாரணையைத் துவங்கியது. ஒரு வருட காலப் போராட்டத்திற்குப் பிறகு, காணாமல் போன நாடாக்களை ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் நிக்சனுக்கு ஜூலை 24 அன்று உத்தரவிட்டது. அதை ஆகஸ்ட் 5 அன்று அதிபர் நிக்சன் ஒப்புக் கொள்கிறார்.
ஜூலை 30 அன்று, நீதித்துறை கமிட்டி அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான மூன்று காரணங்களுக்காக வாக்களித்தது. அவை நீதியைத் தடுப்பது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் காங்கிரஸை அவமதிப்பு செய்தது.
இதையடுத்து பதவி நீக்க நடவடிக்கையைத் தவிர்க்க, நிக்சன் தனது ராஜினாமாவை ஆகஸ்ட் 8 அன்று அறிவித்தார். இப்படி பதவியில் இருக்கும் ஒரு அதிபர் பதவியை ராஜினாமா செய்வது அமெரிக்காவில் முதல் முறையாகும்.
செப்டம்பர் 8, 1974 இல், அவருக்கு பிறகு அதிபரான ஜெரால்ட் ஃபோர்டு நிக்சனுக்கு முழு மன்னிப்பை வழங்கினார். இப்படி அமெரிக்க அதிபரையே ஆட்டங்காண வைத்த வாட்டர்கேட் ஊழல் அமெரிக்க வரலாற்றில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust