உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் (David Malpass) சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், உக்ரேன் ரஷ்யா பிரச்சனையால் உலகில் ஒரு ரிசசன் ஏற்படலாம் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் காணொளிக் காட்சி வசதி மூலம், கடந்த மே 25 அன்று கலந்து கொண்ட உலக வங்கியின் தலைவர் "ஒரு ரெசசனைத் தவிர்ப்பது சிரமம்" என்று கூறியுள்ளார்.
உலக அளவில் ஜிடிபி (GDP) விவரங்களைப் பார்க்கும் போது, இப்போதைக்கு ஒரு ரிசசனை தவிர்க்க முடியாது என்று கூறியவர், குறிப்பிட்டு எந்த ஒரு தரவுகளையோ விவரங்களையோ கொடுக்கவில்லை. மின்சாரம் எரிசக்தியின் கட்டணங்கள் இரு மடங்காக அதிகரிப்பது மட்டுமே ஒரு ரிசசனைத் தூண்டி விடுவதற்குப் போதுமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு 3.2 சதவீதம் வரை மட்டுமே வளரலாம் என உலக வங்கி கடந்த மாதம் தன் கணிப்பை வெளியிட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு இப்போதும் ரஷ்யாவைத் தான் சார்ந்து இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் டேவிட் மால்பஸ்.
மேலும், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு தன் எரிவாயுவைத் துண்டிப்பது, ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கணிசமான மந்தநிலையை உண்டாக்கும் என்றும் கூறினார். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய மற்றும் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் ஜெர்மனியில், மின்சார விலை ஏற்றம் காரணமாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது என்பதையும் அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்களுக்கான தட்டுப்பாடு, உணவு, மின்சாரம், எரிசக்தி போன்ற விஷயங்களில் ஏற்படும் தட்டுப்பாடு வளரும் நாடுகளையும் பாதிப்பதாகக் கூறினார் டேவிட் மால்பஸ். வளரும் நாடுகளைக் குறித்துப் பேசும் போது சீனா குறித்தும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அந்நாட்டின் பல நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் குறித்தும் பேசினார்
சீனாவின் நிதி, தொழிற்துறை உற்பத்தி, போக்குவரத்து என பல விஷயங்களுக்கு முக்கிய நகரமாகத் திகழும் ஷாங்காய் நகரத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவுகள், ஒட்டுமொத்த சீன பொருளாதாரத்தைத் தாண்டி, உலக பொருளாதாரத்திலேயே அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகக் கூறிய டேவிட் மால்பஸ் கொரோனா ஊரடங்கு உத்தரவால், சீன பொருளாதாரம் அடி வாங்கி இருப்பதை சீனாவின் பிரீமியர் லி கெகியாங் கூட சமீபத்தில் ஆமோதித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். விரைவில் தொழிற்சாலைகள் ஊரடங்கிலிருந்து விடுபட்டுத் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் லீ.
ரிசசன் காலத்தில் என்ன நடக்கும்?
ஒரு நாட்டில் ரிசசன் நிலவுகிறது என்றால், அந்நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கும். சொல்லப் போனால் மக்கள் வேலை இழப்பர், சில்லறை விற்பனை சரியும், தொழில் நிறுவனங்கள் புதிதாக முதலீடுகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பர், மக்கள் கையில் போதிய அளவுக்கு பணப்புழக்கம் இருக்காது என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ரெசசன், ஒரு சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust