நீங்கள் சிறு வயதில் ரெஸ்ட்லிங் பிரியராக இருந்தால் ஜேபிஎல் உள்ளிட்ட பணக்கார வீரர்கள் நீளமான சொகுசு கார்களில் வருவதைப் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் அந்த வகை கார்கள் லிமோ கார்கள் எனப்படுகின்றன. அதிலொரு லிமோ அதன் உலகின் நீளமான கார் எனும் கின்னஸ் சாதனையையே அதுவே உடைத்திருக்கிறது. 100 அடி நீளமுள்ள அந்த லிமோ கார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ ஓர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது 1976ம் ஆண்டு மாடலான Cadillac Eldorado limousines காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஜோ ஓர்பெர்க் கார்களை மறு சீரமைக்கும் வேலையைச் செய்து வருகிறார். 1986-ல் 60 அடி நீளமும் 26 சக்கரங்களையும் கொண்ட உலகின் மிக நீண்ட காரை வடிவமைத்து கின்னஸ் சாதனை பெற்றார். தற்போது அதே காரை மறுசீரமைப்புச் செய்து 60 அடியிலிருந்து 100 அடியாக மாற்றி தன் பழைய சாதனையை முறியடித்துள்ளார். இந்தக் கார் 'அமெரிக்கரின் கனவுக் கார் (American Dream Car)' என்றழைக்கப்படுகிறது.
இதற்கு முன் பல திரைப்படங்களில் இந்த கார் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இதில் ஒரே நேரத்தில் 75 பேர் பயணிக்க முடியும் என கின்னஸ் ரெக்கார்ட் கூறுகிறது.
இந்த காரின் உருவமும் வடிவமைப்பும் மட்டுமில்லை இதிலிருக்கும் வசதிகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீளத்தில் ரயில் பெட்டிகள் போலச் சன்னல்களாகப் போய்க் கொண்டே இருக்கும் இந்த காரை ரயில் போல இரு புறமிருந்தும் இயக்கவும் முடியும். இந்த கரின் உள்ளேயே நீச்சல் குளம், சிறிய கோல்ஃப் மைதானம், ஃபிரிட்ஜ், டிவி, நீர் படுக்கை, நீச்சல் குளம் என முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் அளவு வசதிகள் உள்ளன. இதையெல்லாம் விட ஹைலைட்டாக 5 ஆயிரம் பவுண்ட் எடையைத் தாங்கும் அளவிற்கு ஹெலிகாப்டர் இறங்குதளம் இந்த காரில் இருக்கிறது.
இவ்வளவு வசதிகள் என்றால் இதன் விலை எவ்வளவு இருக்கும் எனக் கணக்குப் போடத் தொடங்க வேண்டாம். இது விற்பனைக்கு அல்ல பார்வைக்கு மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை மறுசீரமைக்க மட்டுமே 2,50,000 டாலர்கள் செலவாகியுள்ளது.
இந்த காரை சாதாரண டிரைவர்கள் ஓட்ட முடியாது. பயிற்சி பெற்றவர்கள் ஓட்ட முடியும். அதே போலச் சாதாரண சாலைகளிலும் ஓட்ட முடியாது. அதுவும் இந்தியச் சாலைகளில் சொல்லவா வேண்டும்.