WWE உச்சம் எட்டிய மக் மான் எழுச்சியும், வீழ்ச்சியும் - விரிவான கதை

அமெரிக்காவில், ஒரு வட்டார அளவிலிருந்துவந்த மல்யுத்தப் பொழுதுபோக்கு நிறுவனத்தை உலக அளவிலான புகழுக்குக் கொண்டுசென்றவர், வின்ஸ் மக்மான்
Vince McMahon
Vince McMahonTwitter
Published on

மல்யுத்தம் எனப்படும் மற்போரை பொழுதுபோக்காக- பொது கேளிக்கை நிறுவனமாக ஆக்கி உலக அளவில் கவனத்தை ஈர்த்து பேசவைத்தவரே இன்று பேசுபொருளாக மாறியிருப்பதை எண்ணி இருப்பாரோ தெரியவில்லை!

நீங்கள் கணிப்பது டபிள்யூ. டபிள்யூ. இ.தான் என்றால், அது மிகச் சரியானது!

அமெரிக்காவில், ஒரு வட்டார அளவிலிருந்துவந்த மல்யுத்தப் பொழுதுபோக்கு நிறுவனத்தை உலக அளவிலான புகழுக்குக் கொண்டுசென்றவர், வின்ஸ் மக்மான். டபிள்யூ. டபிள்யூ. இ. (World Wrestling Entertainment - WWE) ஊடக நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் மக்மான், பல பத்தாண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். பல சமயங்களில் அவரே மல்யுத்தக்காரர் அவதாரம் எடுப்பதும் உண்டு.

எழுபத்தேழு வயதாகும் மக் மானுக்கு இப்போது மீண்டும் இறங்குமுகம்...!

ஆம், இது இரண்டாவது சறுக்கல்.

டபிள்யூ. டபிள்யூ. இ. என இப்போது அறியப்படுவதன் பழைய பெயர், டபிள்யூ. டபிள்யூ. எஃப்.(WWF). அதாவது, உலக மல்யுத்தக் கேளிக்கைக் கூட்டமைப்பு. டபிள்யூ. டபிள்யூ. எஃப். எனும் தொலைக்காட்சியின் திங்கள் இரவு நிகழ்ச்சியாக பிரபலமான மல்யுத்தப் பொழுதுபோக்குப் போட்டிதான் இந்த நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு. இதன் போட்டி நிறுவனமாக இருந்த உலக மல்யுத்த சாம்பியன்சிப் World Championship Wrestling (WCW) நிகழ்ச்சியுடன் இவர்கள் கடுமையாகப் போட்டிபோட்டு வந்தனர். கடைசிவரை அதை மக் மானின் நிறுவனத்தால் வெல்ல முடியவில்லை.

அந்த நிறுவனத்துக்காக வேலைசெய்த மல்யுத்தக்காரர்களைப் பிடித்துப்போட்டது, கேபிள் தொலைக்காட்சிகளை மாற்றுவது, நிகழ்ச்சி நாளை மாற்றுவது என்பன மக் மானின் சளைக்காத முயற்சிகளாகத் தொடர்ந்தபடி இருந்தன. ஆனாலும் டபிள்யூசிடபிள்யூ (WCW) தரப்புக்கு ஈடுகொடுக்க முடியாமலேயே பின்னடைவிலிருந்தது, மக் மானின் நிறுவனம்.

ஒரு கட்டத்தில் நிறுவனங்களின் பங்கு கைமாறலின் ஒரு அங்கமாக, போட்டி நிறுவனத்தின் பங்குகள் முழுவதையும் வாங்கினார், மக் மான். அதிலிருந்து அவருடைய நிறுவனத்துக்கு ஏற்றம் எனலாம். ஆனாலும், டபிள்யூ. டபிள்யூ. எஃப். (WWF) என்கிற வணிகப்பெயருக்கு சிக்கல் உருவானது. உலக அளவிலான இயற்கைக்கான நிதியம் என்கிற அமைப்பும் டபிள்யூ. டபிள்யூ. எஃப்.(WWF) எனும் பெயரில் நீண்ட காலமாகப் புழங்கிவந்த நிலையில், அதன் சார்பில் உரிமைப் பிரச்னை எழுப்பப்பட்டது. அதனால், டபிள்யூ. டபிள்யூ. இ. (World Wrestling Entertainment - WWE) என மாற்றம் செய்யப்பட்டது.

1982இல் தன் தந்தையிடமிருந்து அவர் பங்கு வாங்கி, ஒருவழியாக போட்டியைச் சமாளித்து காலூன்றுவதற்கே இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன, மக் மானுக்கு.


அடுத்த இருபது ஆண்டுகள் மல்யுத்தப் பொழுதுபோக்கு உலகில் கோலோச்சிய மக் மான், பாலியல் வன்முரை புகாரால் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அவருடைய மகள் ஸ்டீஃபானி இடைக்காலத் தலைவராகவும் இணை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக் மான், அவரிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்பது குற்றச்சாட்டு. அதற்காக அவருக்கு மக் மான் 3 மில்லியன் டாலர் நிவாரணமாகத் தருவது என்று உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி மக் மான் முதல் கட்டமாக ஒரு மில்லியன் டாலரைத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மீதமுள்ள தொகையை அவர், நிறுவனத்தின் சார்பில் அல்ல, தன்னளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கடந்த மாதம் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது.

Vince McMahon
பிரிட்டன் : பாலியல் குற்றச்சாட்டு - முக்கிய அமைச்சர்கள் ராஜினாமாவை | கவிழுமா போரிஸ் அரசு?

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, முதலில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் மான் தொடர்வார் என்று கூறப்பட்டது.

ஆனால், பாலினச்சிக்கலில் பலே ஆசாமியாக மக் மான் இருந்திருப்பதும் வேறு நான்கு பெண்களுக்கு இப்படியான விவகாரங்களில் 12 மில்லியன் டாலர்களை அவர் எடுத்துக்கொடுத்ததும் நிறுவனத்தின் இயக்குநர் குழுவை கோபமுறச் செய்தது. அதையடுத்து மக் மான் மீது விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே மானைப் பதவியிலிருந்து விலக்கி, தலைமை நிர்வாக அதிகாரியான அவருடைய மகளை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மக் மான் மீது முன்னர் புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியர்களும் அவருடனான உறவைப் பற்றி வெளியில் விவாதிக்கக்கூடாது என ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதற்காக அவர்களை வாயை அடைப்பதற்காக ஏராளமாக பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் உலக மல்யுத்தக் கூட்டமைப்பை தன் தந்தையிடமிருந்து மக் மான் வாங்கியபோது, சின்ன சின்ன இடங்களில்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது. உள்ளூர் அளவிலான கேபிள் தொலைக்காட்சிகளில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால், அதையே 180 நாடுகள், 30 மொழிகளில் ஒளிபரப்பக்கூடிய அளவுக்கு மாற்றிக்காட்டியது, மக் மானின் சாதனை என்று உறுதியாகக் கூறமுடியும்.

மக் மானின் கையில் வந்தபிறகு விதவிதமான நிகழ்ச்சிகளும் விடாப்பிடியான முயற்சிகளுமாக நிறுவனத்தை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. மல்யுத்த மேனியா என்றே ஒரு நிகழ்ச்சிக்கு மான் வைத்த பெயர் சக்கைபோடு போட்டது. கடந்த ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக ஒரு பில்லியன் டாலரைத் தாண்டியது.

பிரபலமான காட்சிப் போட்டிகளில் மக் மானே அனைவரையும் ஈர்க்கும் புள்ளியாக இருந்தார். ஸ்டோன்கோல்டு ஸ்டீவ் ஆஸ்தின், ஹல்க் கோகன் முதலியவர்களுடன் அவர் தோன்றிய நிகழ்ச்சிகள், இன்னும் குறிப்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பால் மக் மான் வீழ்த்தப்பட்ட நிகழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லமுடியும்.

இப்படி உயர உயரப் பறந்துகொண்டிருந்த மக் மானுக்கு அதேபாணியில் வீழ்ச்சியும் வந்துசேர்ந்தது.

Vince McMahon
பாலியல் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க் - குற்றத்தை மறைக்க பணம் கொடுத்தாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com