சிக்கன் எப்போதிலிருந்து 'சிக்கன்' ஆனது? - கோழிக்கறியின் வரலாறு!

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்ற கேள்வி நமக்கு பழக்கப்பட்டது தான். எப்படி வந்தாலும் இந்த கோழிகள் மனித வாழ்க்கையின் அங்கமானது எப்படி? எப்போதிலிருந்து நாம் அவற்றை உணவாக கொள்கிறோம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வளர்ப்புக் கோழி
வளர்ப்புக் கோழிCanva
Published on

பல தலைமுறைகளாகக் கேட்டுப் புளித்துப்போன ஒன்றாக இருந்தாலும், கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்வியை இன்னும் யாராவது எங்காவது கேட்கத்தான் செய்கிறார்கள். இப்படியான விடுகதைகளைப் புறம் தள்ளிவிட்டு, முதல் முதலாகக் கோழி எங்கிருந்து எப்படி மனிதர்களுடன் வந்து சேர்ந்தது என்கிற தீவிர ஆராய்ச்சியும் உலக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

அப்படியான இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுப் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

இதற்கு முந்தைய முடிவுகளின்படி, வீட்டுக் கோழிகள் முதல் முதலாகத் தென்னிந்தியாவிலோ வடக்கு சீனத்திலோ இருந்து உலகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவி இருக்க வேண்டும் என்றே கருதப்பட்டது.

ஆனால் புதிய ஆய்வின் முடிவுகள் அதை மறுக்கின்றன.

மொத்தம் 89 நாடுகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வின்போது தொன்மையான கோழி எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றின் தொன்மைக் காலத்தைக் கணக்கிட கார்பன் ஆய்வு செய்து பார்த்ததில், இன்றிலிருந்து 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கோழிகள் வீட்டுக்கோழிகளாக ஆகியிருக்கும் என்று தொல்லியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

“வீட்டுக்கோழி அல்லது இறைச்சிக் கோழி என்பது இப்போது எவ்வளவு சர்வ சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. காடுகளிலிருந்து கோழிகள் வீட்டுக்கோழியாக மாறுவதற்கு எவ்வளவு காலத்தை எடுத்துள்ளன, எலும்புகளின் கார்பன் கணக்கீடு 3,500 ஆண்டுகள் என்கிறது...” எனப் பரவசத்தோடு சொல்கிறார், பிரான்ஸ் நாட்டின் டோலோஸ் பல்கலைக்கழக உயிரியல் தொல்லியலாளரும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவருமான ஒபிலி லெப்ரெசர்.

கோழிப்பண்ணை
கோழிப்பண்ணைPexels

முதலில் காட்டுப் பறவைகளாக இருந்த கோழிகள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே மரத்திலிருந்து கீழே இறங்கியுள்ளன. பிறகு கணிசமான காலத்தை அடுத்தே, அவை மனிதர்களுடன் ஒட்டிக்கொண்டன என்பது இதுவரையிலுமான தொல்லியல் கருத்தாக இருந்து வருகிறது.

இந்த ஆய்வின் முடிவின்படி, இன்றைய தாய்லாந்து நாட்டின் மையப் பகுதியான பான் நான் வாட்டில் கிடைத்துள்ள கோழி எலும்புகளே மிகவும் தொன்மையானதாக இருக்கிறது. அந்த எலும்புகளின் காலம், கி.மு 1650 ஆண்டுகள் முதல் கி.மு 1250 ஆண்டுகள் வரையிலானது அதாவது இப்போதைக்கு 3,500 ஆண்டுகள் முற்பட்டது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் நெல் விவசாயமே காட்டுக் கோழிகள் வீட்டுக்கோழிகளாக மாற்றம் அடையத் தூண்டியிருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வுக் குழுவினரின் கணிப்பு. பெரும் நெல்வயல்களே கோழிகளைக் காடுகளிலிருந்து மரம், செடிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கு வரவழைத்து இருக்கவேண்டும் என இவர்கள் வலுவாக நம்புகின்றனர்.

இதற்கு முந்தைய ஆய்வுகளில், சிந்து சமவெளி நாகரிகக் கட்டத்தில்தான் அதாவது இன்றைக்கு முன்னர் 4,600 - 3,900 ஆண்டுக் காலத்திலேயே கோழிகள் வீட்டுப் பறவைகளாக ஆக்கப்பட்டன என்று பல்வேறு வல்லுநர்களும் கூறியுள்ளனர்.

ஹரப்பா நாகரிகம்
ஹரப்பா நாகரிகம்Twitter

அவர்களின் கருத்துக்கு, ஹரப்பா நாகரிகப்புதைவிடப் பகுதியில் எடுக்கப்பட்ட இரண்டு எலும்புகளும் மொகஞ்சதாரோ நாகரிகப்புதைவிடப் பகுதியில் எடுக்கப்பட்ட நான்கு எலும்புகளும் ஆதாரமாகக் கூறப்பட்டன.

புதிய ஆய்வின் ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஹரப்பா - மொகஞ்சதாரோ ஆய்வு மாதிரிகளை முன்னவர்கள் தவறுதலாகவோ மிகவும் கூடுதலாகவோ காலக் கணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பிரிட்டனைச் சேர்ந்த காடிஃப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொல்லியலாளரும் இந்த ஆய்வுக்குழு உறுப்பினருமான ஜூலியா பெஸ்ட், தி டெலிகிராப் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், இதைக் கூறியுள்ளார்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள், பசிபிக் கடலையொட்டிய ஓசியானியா வட்டாரம் ஆகியவற்றைச் சேர்ந்த நாடுகளில், சுடுகாடுகள், இடுகாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், வரலாற்று ஆவணங்கள், தொல்லியல் தரவுகள் மூலமே புதிய முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று கூறும் அவர், “ஐரோப்பாவிலும் மற்ற அனைத்து பகுதிகளிலும் எங்கள் குழுவினர் எடுத்த தொன்மையான எலும்புகள் தற்போது வரை பழைமையானதாகக் கருதப்பட்டவற்றைவிட புதியவை.” என்கிறார் அழுத்தமாக.

கோழி
கோழிCanva

முன்னதாக, சீனத்தின் வட பகுதியிலிருந்தே வீட்டுக் கோழிகள் என்பது மேற்குத் திசையை நோக்கிப் பரவி ஐரோப்பாவை அடைந்திருக்க வேண்டும் என்று அதிகமான வல்லுநர்கள் கருதி வந்தனர். ஆனால், அண்மைய இந்த ஆய்வின்படி, சீனத்தில் 3,350 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொன்மையான வீட்டுக் கோழிகள் இருந்திருக்க முடியும் என்பதற்கான சான்று இருக்கிறது.

கிழக்காசியப் பகுதிகளிலிருந்து இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் பின்னர் மத்திய தரைக்கடல் வழியாக கி.மு 800 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவுக்கும் பரவியிருக்க வேண்டும்; அதற்குக் கிரேக்க, பினீசிய கடல் வணிகர்களின் பங்களிப்பு இருந்திருக்க வேண்டும் என்பது புதிய ஆய்வு முன்வைக்கும் இன்னுமொரு முடிவு.

இந்தியாவைப் பொறுத்தவரை, தொன்மையான கோழி எலும்புகளின் காலம் கி.மு 1200 ஆண்டுகள் என்கின்றனர் புதிய ஆய்வின் குழுவினர்.

மகாராஷ்டிரத்தின் ஜோர் பண்பாட்டுடன் தொடர்பு உடையதாகக் கருதப்படும் தைமாபாத், கார்கி, இனாம்கோன், நிவேசா, துல்ஜாபூர் எனப் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை எலும்புகளின் காலம் கி.மு. 1,400 ஆண்டுகள் முதல் கி.மு. 700 ஆண்டுகள்வரை ஆகும்.

ஹரப்பா நாகரிக காலத்துக்குப் பிறகுதான் பண்ணைகள் அமைக்கப்பட்டு, கோழிகள் வளர்க்கப்பட்டு இருக்கவேண்டும் என்றும் இந்தக் குழுவினர் கருதுகின்றனர்.

கோழிப்பணை
கோழிப்பணைCanva

இது ஒரு புறம் இருக்க, ஐரோப்பாவைப் பொறுத்தவரை, இறைச்சி இல்லாமல் வாழ்க்கை உண்டா?

இதைக் குறிப்பிட்டுப் பேசும் பிரிட்டனின் எக்சிட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்குழுவின் ஆய்வாளரும் உயிரி தொல்லியலாளருமான நயோமி சைக்ஸ், "கோழி இறைச்சி உண்பது இப்போது பொதுமக்களிடம் சர்வ சாதாரணமாக உள்ளது, எந்த அளவுக்கு என்றால், அதைச் சாப்பிடாமல் இருக்கமாட்டோம் என்கிற அளவுக்கு இருக்கிறது. ஆனால், காட்டுக் கோழியை வீட்டுக் கோழியாக்கிப் பல நூறாண்டுகள் கடந்த பின்னர்தான் கோழியை இறைச்சியாக்கிச் சாப்பிடவே தொடங்கி இருக்கிறார்கள்." என்று சொல்கிறார்.

வளர்ப்புக் கோழி
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

இதை எப்படி இவர்கள் சொல்கிறார்கள்?

இவர்களின் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளுடன் புதைக்கப்பட்ட தொன்மைக் கோழி எலும்புகள் சிதைக்கப்பட்டு இருக்கவில்லை அதாவது அவை இறந்துபோன மனிதர்களுடன் சேர்ந்து உயிரோடு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே சாத்தியம். அந்த சமகாலத்தில் கண்டெடுக்கப்பட்ட தொன்மைக் கோழி எலும்புகள் அனைத்தும் இதேமாதிரியாக இருந்தன.

Chicken
ChickenCanva

மற்றவர்களைவிட ஐரோப்பியருக்கு இந்த ஆய்வின் முடிவுகள் வியப்பளிக்கக் கூடும். ஏனென்றால், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோழி உணவாகிவிட்டது எனும் ஒரு கருத்து இருக்கிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு நூறு கோடி கோழிகள் இறைச்சி ஆக்கப்படுகின்றன என்பது தி கார்டியனின் ஒரு கணக்கு. ஆனால், பண்ணை வளர்ப்புப் பிராணியாகக் கோழி ஆக்கப்பட்டது மிக அண்மையில்தான் எனக் கூறுகிறது, புதிய ஆய்வு முடிவு.

வளர்ப்புக் கோழி
வாழைப்பழங்களுக்கு அஞ்சும் ஆண் எலிகள் - ஆச்சரியப்படுத்தும் ஆய்வு தகவல்

கிழக்காசியப் பகுதியிலிருந்து கடல் வணிகர்களால் ஐரோப்பாவுக்கு கோழிகள் கொண்டு சேர்க்கப்பட்டது, கி.மு 800 ஆண்டில். அதையடுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே ஐரோப்பாவில் குறிப்பாகப் பிரிட்டனில் கோழியினம் இறைச்சியாக நிலைபெற்றுள்ளது.

தென்மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு யுரேசியா தட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட தொன்மை எலும்பு மாதிரிகள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

“முதல் முறையாகத் தொன்மைக் கோழிகளின் காலம் பற்றிய ஆய்வில் கார்பன் காலக் கணிப்பீட்டைச் செய்திருக்கிறோம். இந்த ஆய்வின் முடிவானது, உத்தேசமான தொன்மை எலும்பு மாதிரிகளை நேரடியாகக் காலக் கணக்கீடு செய்யத் தூண்டியுள்ளன. அது சாத்தியமானால் இன்னும் துல்லியமாகத் தொன்மைக் கோழி எலும்பின் காலத்தை அறிய முடியும்.” என்கிறார், காடிஃப் பல்கலைக்கழகத்தின் தொல்லியலாளர் ஜூலியா பெஸ்ட்.

வளர்ப்புக் கோழி
டைனோசர் : இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com