சமீபத்தில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை விலை கொடுத்து வாங்குவதாகக் கூறினார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்.
ட்விட்டர் டீலுக்கான அதற்கான பணத்தை எலான் மஸ்கால் ஏற்பாடு செய்ய முடியுமா? அப்படியே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டால் ட்விட்டர் நிறுவன பங்குதாரர்கள் மகிழ்ச்சி கொள்வார்களா? எலான் மஸ்கின் வருகைக்குப் பிறகு ட்விட்டர் தளத்தின் நிலை என்ன ஆகும்? உண்மையில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க நினைப்பது ஏன்?
ஏற்கனவே எலான் மஸ்க் சுமார் $3 பில்லியன் செலவழித்து ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தின் தனிப்பெரும் பங்குதாரராக உருவெடுத்துள்ளார். தற்போது மேற்கொண்டு அந்நிறுவனப் பங்குகளை வாங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற மற்ற எந்த ஒரு சமூக வலைத்தளத்தை விடவும் ட்விட்டர் பணத்தளவிலோ, மதிப்பளவிலோ சிறியது தான் என்றாலும், மற்றவற்றை விட மதிப்பு மிக்கதாகவும், ட்விட்டர் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக இருப்பது தான் எலான் மஸ்க் போன்ற ஒரு உலக பணக்காரர் தன் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து அந்நிறுவனத்தை வாங்க விரும்புவதற்கான முதல் காரணம் என வாக்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களின் கருத்தையும், தங்கள் பிம்பத்தையும் கட்டமைக்க உதவும் முக்கிய தளமாக இன்று வரை ட்விட்டர் இருந்து வருகிறது.
கருத்துச் சுதந்திரத்தின் தளமாக ட்விட்டர் தன் முழு திறனை வெளிப்படுத்தவில்லை. எனக்கு ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லை. மனித நாகரிகத்தின் எதிர்காலத்துக்கு, முழுமையாக நம்பக் கூடிய, அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு பொதுத் தளம் இருக்க வேண்டும் என்பது அவசியம் என்கிற நோக்கில் தான் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார் எலான் மஸ்க்.
மேலும் தான் உறுதியாகக் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கக் கூடியவன் என்றும் கூறினார்.
இதற்கு முன், தன்னோடு முரண்பட்ட கருத்து கொண்ட சிலரை எலான் மஸ்க் ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் கருப்பின ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தில் நிலவும் இன ரீதியிலான பாகுபாடுகள் குறித்துப் பேசியதற்கு, அவர்களிடம் டெஸ்லா நிறுவனம் கடுமையாக நடந்து கொண்ட விஷயங்களை அந்நாட்டு நெறிமுறையாளர்களே குற்றம்சாட்டியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
உலக சமூகத்தில், குறிப்பாக அமெரிக்கச் சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் போன்ற முக்கிய அரசியல்வாதிகளே ட்விட்டரில் தங்கள் கருத்தை அப்பட்டமாகத் தெரிவித்துப் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் பார்த்தோம். டிரம்ப் உட்பட பல்வேறு பிரபலங்கள் தவறான அல்லது ட்விட்டர் தளத்தின் விதிகளை மீறிய கருத்துக்களைப் பதிவிட்டதால், அத்தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மற்ற பல தளங்களுக்கு மாறினர். ஆனால் ட்விட்டர் மூலம் அவர்களால் ஏற்படுத்த முடிந்த தாக்கத்தை மற்ற தளங்களின் வாயிலாக ஏற்படுத்த முடியவில்லை என வாக்ஸ் பத்திரிகையில் ஷிரின் கஃப்ரே என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
TED 2022 மாநாட்டில், ட்விட்டரை வாங்குவதற்கு தன்னிடம் போதுமான சொத்துக்கள் இருப்பதாகக் கூறினார் எலான் மஸ்க்.
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் $265 பில்லியன் டாலர். அதில் பெரும்பாலானவை டெஸ்லா நிறுவனப் பங்குகளாக உள்ளன. அதை விற்று ட்விட்டரை வாங்குவதற்கான பணத்தைத் திரட்டலாம்.
அப்படிச் செய்தால், அந்நடவடிக்கை டெஸ்லா நிறுவனப் பங்கு விலையைக் கடுமையாகப் பாதிக்கலாம். அது போக, ஏற்கனவே எலான் மஸ்க் தன் கணிசமான பங்குகளைக் கடன்களுக்கான சொத்துக்களாகப் பணயம் வைத்துள்ளார் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன பங்குகளை, ஒரு பங்குக்கு $54.20 டாலர் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்த பின், இதுவரை அந்த அளவுக்கு விலை அதிகரிக்கவில்லை. அதிகபட்சமாக 50.98 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. கடந்த 52 வாரத்தில் ட்விட்டர் பங்கின் அதிகபட்ச விலை 73.34 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்கின் திட்டத்தை ட்விட்டர் பரிசீலிக்கும் என்று மட்டுமே ட்விட்டர் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக இருக்கும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டார்ஸி எலான் மஸ்கின் திட்டத்தைக் குறித்து இதுவரை தன் கருத்தை வெளிப்படுத்தவில்லை.
ட்விட்டர் தளத்தில் பதிவிடப்படும் செய்திகளை நிர்வகிக்கும் மாடரேஷன் திட்டங்களிலிருந்து பின் வாங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல போலி ட்விட்டர் கணக்குகள் களையப்பட வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியது, கூடுதலாக ட்விட்டர் பயனர் கணக்குகள் நிர்வகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதை நினைவூட்டுகிறது.
மறுபக்கம், ட்விட்டர் தளத்திலிருந்து விளம்பரங்கள் விலக்கப்படும் என்று கூறினார் மஸ்க். ஆனால் ட்விட்டர் இயங்குவது விளம்பர வருமானத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்களை எடிட் செய்வதற்கான வசதியையும் எலான் மஸ்க் குறிப்பிட்டதை இங்கு மறக்கமுடியாது.
ட்விட்டர் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்குவதால், அந்நாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியுள்ளது என எலான் மஸ்க் கூறியதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட ட்விட் பதிவுகள் மட்டும் அதிகம் பரவுவதும், ஒரு குறிப்பிட்ட ட்விட்கள் அத்தனை சிறப்பாகப் பரவலாகப் பகிரப்படாமல் இருப்பது, பிளாக் பாக்ச் அல்காரிதம் இருப்பது மிகவும் ஆபத்தானது என எலான் மஸ்க் ஒரு பேட்டியில் கூறியதும் இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com