காலி பால் பாக்கெட் கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடி - எங்கே?
இந்தியாவில் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மற்ற அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துவிட்டன அல்லது மேலும் அதிகரித்து வருகின்றன.
இப்படி ஒரு சூழலில் இந்தியாவில் ஒரு பெட்ரோல் பங்கில் மட்டும் நாம் பயன்படுத்திய பால் பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பொருட்களைக் கொடுத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் தள்ளுபடி கொடுத்து வருகிறது. எந்த பெட்ரோல் பங்க்? யார் கொடுக்கிறார்கள் வாருங்கள் பார்ப்போம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா நகரத்தில் உள்ள அசோக் குமார் முந்த்ரா என்பவருக்கு சொந்தமான சகன்லால் பக்தவர்மாள் (Chhaganlal Bagtawarmal) பெட்ரோல் பங்க் சித்தூர் சாலையில் அமைந்திருக்கிறது.
இந்த பெட்ரோல் பங்கில் தான் பால் பொருட்கள் பாக்கெட்டுகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவே அவர் இந்த யோசனையை கொண்டு வந்திருப்பதாகக் கூறுகிறார்.
"நான் பில்வாரா நகரம் ஒரு பிளாஸ்டிக் இல்லாத, பாலித்தின் பொருட்கள் இல்லாத நகரமாக வேண்டும் என விரும்புகிறேன். பிளாஸ்டிக் மற்றும் பாலத்தின் போன்ற பொருட்கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி சாலையில் தெரியும் விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, குறிப்பாக பசுக்கள் பாதிக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளார் அசோக் குமார் முந்த்ரா.
இந்தத் திட்டம் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஒரு லிட்டர் பால் தயிர் பாக்கெட் அல்லது இரண்டு அரை லிட்டர் பால் தயிர் பாக்கெட்டுகளை கொண்டு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும் ஒரு லிட்டர் டீசலுக்கு 50 பைசாவும் தள்ளுபடி வழங்கி வருகிறார்.
இப்படி சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சராஸ் டைரி (Saras Dairy) என்கிற நிறுவனத்தின் மூலம் முறையாக அப்புறப்படுத்துவதாகவும் அசோக் குமார் முந்த்ரா இந்தியா டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
சராஸ் டைரி தரப்பிலும் அசோக் குமார் முந்த்ராவின் பெட்ரோல் பங்கில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அசோக் குமார் முந்திராவின் இந்த திட்டத்திற்கு சராஸ் டைரி என்கிற உள்ளூர் பால் நிறுவனம் மட்டுமின்றி, பில்வாரா மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இதை விரிவுபடுத்த, ஒருபடி மேலே சென்று சராஸ் நிறுவனத்துக்கு இருக்கும் பால் பூத்களில், பால் பொருட்கள் தொடர்பான காலி பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளவும், அதற்கு பதிலாக ஒரு கூப்பனைப் பெற்றுக் கொண்டு பெட்ரோல், டீசலுக்கு தள்ளுபடி வழங்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார் அசோக் குமார் முந்த்ரா.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 700 பால் பாக்கெட்டுகள் சேகரித்து இருப்பதாக கூறியுள்ளார் அசோக்.
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பருவமழை காலம் என்பதால், பெட்ரோல் பங்குக்கு எரிபொருள் நிரப்ப வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், ஆகையால் தான் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார் அசோக் குமார் முந்த்ரா.
அடுத்த ஆறு மாத காலத்துக்கு இந்த பிளாஸ்டிக் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10,000 பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் கூறியுள்ளார் அசோக் குமார் முந்த்ரா.
இதே போல கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மாணவ மாணவிகள் தங்கள் வீட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து பள்ளியில் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு கிலோவுக்கு 75 ரூபாய் வழங்கப்படும் என அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்தால் உணவு குப்பன்களை கொடுக்கும் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust