சமீபத்தில் தான் 2022ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியானது. அதில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி சுமார் 90.7 பில்லியன் டாலரோடு 10ஆவது இடத்திலும், கெளதம் அதானி 90 பில்லியன் டாலரோடு 11ஆவது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இன்று, இப்போதைய நிலையில் கெளதம் அதானி உலகின் டாப் 5 பில்லியனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் ரியல் டைம் பில்லியனர்ஸ் பட்டியலின் படி 123.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
உலகின் பங்குச் சந்தை பிதாமகர் எனப் பலராலும் கொண்டாடப்படும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பே 121 பில்லியன் டாலராகத் தான் இருக்கிறது. வாரன் பஃபெட்டை முந்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார் கெளதம் அதானி.
சுருக்கமாக உலகை ஆழ்வதாகக் கூறும் கூகுள் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரர்களான லாரி பேஜ், செர்கி ப்ரின், பங்குச் சந்தை முதலீடுகளால் உலகின் டாப் பில்லியனராக வலம் வரும் வாரன் பஃபெட் என அனைவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த கெளதம் அதானி.
உலக பில்லியனர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 130.2 பில்லியன் டாலராக உள்ளது. இன்னும் கொஞ்சம் அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தால், பில் கேட்ஸையே பின்னுக்குத் தள்ளி விடுவார் எனப் பங்குச் சந்தையில் பலராலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
கெளதம் அதானியின் இத்தனை பிரமாண்ட வளர்ச்சிக்கு, அதானி கிரீன் எனர்ஜி என்கிற நிறுவனம் மிக முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் பங்குச் சந்தை நிபுணர்கள் முனுமுனுக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் வரை வெகு சாதாரணமாக 100 - 200 ரூபாய்க்குள் வர்த்தகமாகி வந்த அந்நிறுவனப் பங்கின் விலை, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சரமாரியாக அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது சுமார் 2,800 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. அதோடு மிகக் குறுகிய காலத்திலேயே, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.
கெளதம் அதானி ஒரு சிறு வைர வியாபாரியாக தன் வாழ்கையைத் தொடங்கி, தற்போது இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்துள்ளார். துறைமுக சேவைகள், மின்சார உற்பத்தி, நிலக்கரி சுரங்கம், இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்களை நிர்வகிக்கும் பணி, எண்ணெய் வியாபாரம், மின் பகிர்மானம், ரியல் எஸ்டேட் எனப் பல தொழில்களில் அதானி குழுமம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
2020ஆம் ஆண்டில் சுமார் 9 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 2022ஆம் ஆண்டில் 123 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றால், அவரது வளர்ச்சி வேகத்தை நீங்களே கால்குலேட்டரில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com