நிறுவனத்தில் கொடுத்த வேலையை சூப்பராக செய்யும் நல்ல பிள்ளை இமேஜ், சடசடவென சில பதவி உயர்வுகள் என திருபாயின் வாழ்கை இனிதாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திருபாய் என்கிற வியாபாரியின் மூளை அம்பானியை சம்பளம் வாங்கிக் கொண்டு சும்மா இருக்கவிடவில்லை.
ஏமனில், ஒரு முறை சர்க்கரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் திருபாய் அம்பானி. கடல் நீரால் சரக்கு பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த பணத்தையும் இழந்து நடு ரோட்டில் அம்போவென நின்ற போது, ஜாம்னாதாஸ் என்கிற நண்பர்தான் பணம் கொடுத்து அம்பானியை நெருக்கடியிலிருந்து மீட்டார்.
ஏமன் நாட்டில், திருபாயின் பல அதிரடித் திட்டங்களுக்கு துணை போனவர் ஜாம்னாதாஸ். திருபாய் அம்பானி சைவ உணவு சாப்பிடக் கூடியவர் என்கிற போதும், அவர்கள் சமூக வழக்கப்படி ஆண்கள் மது அருந்தலாம். திருபாய் அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அவரைக் கட்டுப்படுத்த ஜாம்னாதாஸால்தான் முடியும்.
ஒருகட்டத்தில் அம்பானியும் ஜாம்னாதாஸும் தங்கள் அலுவலக வேலைகளைத் தாண்டி, சந்தையில் வியாபாரம் செய்யும் விஷயம் நிறுவனத்துக்குத் தெரிய வர, பழியை ஜாம்னாதாஸ் ஏற்றுக் கொண்டு அம்பானியைக் காப்பாற்றினார். ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் உருவான பின், ஜாம்னாதாஸுக்கு நல்ல வேலை போட்டுக் கொடுத்து, அவர் வேலைக்கு வந்தாலும், வரவில்லை என்றாலும் தொடர்ந்து சம்பளம் வழங்கி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார் திருபாய்.
நிறுவனத்திலேயே நல்ல பதவி உயர்வு எல்லாம் கிடைத்துவிட்டது... அப்படியே அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலோ அல்லது ஒரு துறையின் தலைவரோ ஆகி, விஸ்வாசமான ஊழியராக அந்த நிறுவனத்தின் பங்குகளை ஸ்டாக் ஆப்ஷனாகப் பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறும் நாளில் ஒரு கைக்கடிகாரத்தை வாங்கிக்கண்டு ராம... கிருஷ்ணா... என சுகவாசியாக காலத்தை ஓட்டி இருக்கலாம். இப்படி ஒரு அதீத பதவி உயர்வு எல்லாம் கிடைத்தால் இந்தியாவில் 99.99% இந்தியர்கள் சபலப்பட்டு அல்லது இருக்கும் சுகத்தை இழக்க பயந்து கொண்டு செட்டிலாகி இருப்பார்கள்.
அம்பானியோ அதுக்கும் மேல... என அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஓய்வு நேரத்தில் மற்ற பல வியாபார சமாச்சாரங்களில் ஈடுபட்டார் திருபாய். நண்பர்களுக்கு காப்பீடு தொடர்பான பிரச்சனைகளில் உதவுவது, இழப்பீடுகோரி நிறுவனங்களிடம் விண்ணப்பிக்க உதவுவது, தேவைப்பட்டால் வாதாடி உரிய கிளைம் தொகையைப் பெற்றுத்தருவது என காலம் கழிந்தது. இந்த உதவிக்கு ஒரு சிறு தொகையை கமிஷனாகவும் பெற்றுக் கொண்டார். மறுபக்கம் 1951ஆம் ஆண்டு, திருபாயின் தந்தை ஹீராசந்த் காலமானார். இன்னும் குடும்ப பொறுப்புகள் அதிகமாயின.
10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அம்பானி, மெல்ல தன் அடிப்படை ஆங்கிலத்தை வளர்த்துக் கொண்டார். தான் வாழும் ஏமன் நாட்டில் மக்கள் பேசும் அரபி மொழியையும் ஒருகட்டத்தில் சரளமாகப் பேசத் தொடங்கியதாக அம்பானி குறித்த ஓர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்கிற பெயர் அவர் காதில் விழுவதற்கும் அது ஒரு வெற்றிச் சொல்லென உணரவும் திருபாய் அம்பானி ஒரு நபரைச் சந்திக்க வேண்டி இருந்தது.
அம்பானியை போலவே ஏமன் நாட்டுக்கு பிழைக்க வந்த பிரவீன்பாய் தாக்கரோடு திருபாய் அம்பானிக்கு நட்பு ஏற்பட்டது. பிரவீன் தாக்கரின் சகோதரர் பாப்புலர் ஸ்டோர்ஸ் என்கிற பெயரில் ஏடன் துறைமுகத்துக்கு அருகில் ஒரு கடையை நடத்திக் கொண்டிருந்தார். 1953ஆம் ஆண்டு, தன் சகோதரரிடமிருந்து பிரிந்து வந்து, பிரவீன் தனியே ஒரு கடையைத் தொடங்கினார். அந்த கடையின் பெயர் என்ன தெரியுமா... ரிலையன்ஸ் ஸ்டோர்ஸ்.
'முள்ள பிடிச்சாலும் முழுசா பிடிக்கனும்டா' என்பதுபல ஒரு வியாபாரத்தை நடத்தி லாப நஷ்டங்களை எல்லாம் தானே எதிர்கொள்ள வேண்டும் என்கிற ஆசை அம்பானிக்கு இருந்தது. ஆனால் அதை வார்த்தைகளில் கோர்வையாகச் சொல்லவோ, எதார்த்தத்தில் அதை நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது. அதை அவருடைய நண்பர் பிரவீன் தாக்கர் செய்து காட்டிய போது, திருபாய் அம்பானி, தன் கனவுக்கான திறவுகோளை கண்டுணர்ந்து கொண்டார்.
ரிலையன்ஸ் என்கிற அந்தப் பெயர்... திருபாய் அம்பானியை மிகவும் ஈர்த்தது, தலைகீழாகப் போட்டுத் தாக்கியது. ஒரு வணிக ராஜாங்கத்துக்கு இதைவிட சிறந்த பெயர் இருக்குமா என பூரித்துக்கொண்டிருந்தார். சொந்தக்காலில் தனியே கடை வைத்து அற்புதமாக வாழ்க்கையில் ஜெயித்து கட்டிய பிரவீன் தாக்கரின் வளர்ச்சி, அம்பானியை அனுதினமும் உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. எப்போது தொழில் தொடங்கலாம் என்கிற கேள்வி மட்டும் அசரீரி போல திருபாய் அம்பானியை உள்ளுக்குள் அரித்துக்கண்டிருந்தது.
இதற்கிடையில் 1954-ஆம் ஆண்டு, தன் 22ஆவது வயதில் கோகிலாபென்னை திருமணம் செய்து கொண்டு, அவரையும் ஏமன் நாட்டுக்கு அழைத்து வந்தார். திருபாயின் மோத் பனியா சமூகத்தைச் சேர்ந்த கோகிலாபென்னுக்கு ஆழ்ந்த ஆன்மிக பக்தியும் மற்றும் தன் கலாச்சார, பழக்க வழக்கங்கள் மீது அதீத நம்பிக்கையும் உண்டு. இப்போது வரை, கோகிலா பென் தொடர்ந்து குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது, பிரபல இந்து கோயில்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்தியாவில் ஆணோ, பெண்ணோ... ஒருவர் வியாபாரம் செய்வதா அல்லது வேலைக்கு போவதா என்பதை தீர்மானிப்பதில் திருமணத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. திருமணம் செய்துகண்டபின் இருக்கும் வேலையை நல்லபடியாக செய்து, நிறுவனத்தில் உயர்ந்த பதவிகளை எட்டிப் பிடிப்பதற்கே இந்திய சாமானியர்கள் பலரும் விரும்புவர்.
ஆனால் அம்பானியின் மூளையில் இருந்த ரிலையன்ஸ் விதை... 'திருமணமாகிவிட்டது எப்போது தொழில் தொடங்கப் போகிறாய்' என அம்பானியை இன்னும் வேகமாக சம்பாதிக்கத் தூண்டியது. இந்த சம்பளம் வாங்கும் வாழ்கையை விட்டு, ஏமனை விட்டுச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார் திருபாய். ஆனால், எப்போது இந்தியா செல்வது? என்கிற கேள்வி தொக்கி நின்றது.
முந்தைய பகுதியை படிக்க