1988 ஆம் ஆண்டு டெல்கோ நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ரத்தன் டாடா. உலக பங்குச் சந்தைகள் உட்பட பல நாட்டு பொருளாதாரங்கள் மந்தநிலையால் பீடிக்கப்பட்டிருந்த காலமது.
அந்த காலகட்டத்தில் டாடா நிறுவனத்துக்கு உள்ளேயே டெல்கோ நிறுவனத்தைக் குறித்து பெரிய அபிப்பிராயம் ஏதுமின்றி, அது லாபமீட்டாத அதிக பணத்தைக் கோரும் தொழில் என்றே கருதி வந்தனர்.
1979 காலகட்டத்திலேயே டெல்கோவின் நிதிநிலைகள் மற்றும் செயல்பாடுகள் மங்கத் தொடங்கின. டெல்கோ நிறுவனத்தின் பிதாமகரான சுமந்த் மூல்காவுகர் தன் எண்பதுகளில் பல்வேறு உடல்நலக் குறைவுகளால் தடுமாறிக் கொண்டிருந்தார். இருப்பினும் சுமந்த் மூல்காவுகரை முழுமையாக ஆதரித்தார் ரத்தன் டாட்டா.
1991ல் ரத்தன் டாடா, ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, டெல்கோ நிறுவனத்தின் நிலை தலைகீழாக மாறத் தொடங்கின. அந்த ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் 2,300 கோடி ரூபாய் டேர்ன் ஓவரை விட, டெல்கோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த டேர்னோவர் 300 கோடி ரூபாய் அதிகம்.
டெல்கோ நிறுவனத்துக்குள் ரத்தன் டாடா நுழைந்த போது, அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள், அளவுக்கு அதிகமாக பொருட்களை சப்ளை செய்யும் விநியோகஸ்தர்கள் இருந்தனர், அதுபோக டெல்கோ நிறுவனம், புதிய மாடல் வாகனங்களை வெளியிடாமல் ஒரே வாகனத்தை வைத்து வியாபாரத்தை ஓட்டிக் கொண்டிருந்தது.
முதலில் டெல்கோ நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்களை விநியோகிக்கும் சப்ளையர்களின் எண்ணிக்கையை 1,200 லிருந்து 600 ஆகக் குறைத்தார் ரத்தன் டாடா. தரத்தில் கொஞ்சம் முன் பின் இருப்பது போன்றவைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், இப்படித்தான் இருக்கவேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பின் மீது அழுத்தம் கொடுத்து தரத்தை அதிகரிக்கவும், உள்ளீட்டுப் பொருட்களின் விலையை குறைக்கவும் செய்தார். அது விநியோகஸ்தர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான போட்டி சூழலை உருவாக்கியதோடு, டெல்கோ நிறுவனத்தின் உற்பத்தி செலவைக் குறைத்தது.
பின்னர் டைம்லர் கிரிஸ்லர் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளைப் விற்று கிடைத்த பணத்தில் டெல்கோ நிறுவனத்தின் கடன்களை அடைத்தார், டெல்கோவின் முதல் கையிருப்புத் தொகையை அதிகரித்தார்.
அடுத்து, டெல்கோவில் ஓய்வு பெரும் வயதிலிருந்த ஊழியர்களுக்கு ஓரு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் குறைத்தார்.
செலவுகளைக் குறைத்த பின், டாடா சியார மற்றும் டாடா எஸ்டேட் என இரு மாடல் வாகனங்களை களமிறக்கினார் ரத்தன் டாடா. அதன் பிறகு தான் டெல்கோவின் வியாபாரம் அதிகரித்து, நிலைபெற்று லாபமீட்டத் தொடங்கியது. இதற்கிடையில் சத்தமின்றி ரத்தன் டாடா 'இந்திய கார்' என்றொரு கனவைக் கண்டு வந்தார்.
1992ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், அதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் செய்து பார்க்காத ஒரு விஷயத்தை செய்ய முனைந்தார் ரத்தன் டாடா.
டாடாவின் டெல்கோ நிறுவனத்தால் ஒரு இந்திய கார் தயாரிக்கப்பட உள்ளதாக 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆட்டோமொபைல் கண்காட்சியில் பகிரங்கமாக அறிவித்தார் ரத்தன் டாடா. மேலும் அத்திட்டத்துக்காக சுமார் 1,700 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார்.
டெல்கோ நிறுவனத்தின் ஆகச்சிறந்த பொறியாளர்கள், ஆட்டோமொபைல் வல்லுநர்கள், பொறியியல் அறிவு கொண்ட இளைஞர்களை அத்திட்டத்தில் பணியாற்ற அமர்த்தினார்.
மாருதி ஜென் போல எளிமையாகவும், அம்பாசிடர் காரை போன்ற அதிக இட வசதியோடும், மாருதி 800 மாடலின் விலையிலும் தன் இந்திய கார் தயாரிக்கப்பட வேண்டும் என உருவகப்படுத்தி இருந்தார். அது இந்தியர்கள் குடும்பத்தோடு பயணிக்கக்கூடிய ஒன்றாகவும், இந்திய சாலைகளுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.
இன்று பெரும்பாலான பொறியில் நிறுவனங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் எனப்படும் கணினியில் பொறியியல் சார் வரைபடங்களை வரையும் CAD தொழில்நுட்பத்தில் 1990களிலேயே ரத்தன் டாட்டா 120 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார்.
சுமார் 3,200 சிறிய பாகங்கள், 700க்கும் மேற்பட்ட வண்ண சாயங்கள், 4,000க்கும் மேற்பட்ட இணைப்புகள் அந்த இந்திய காரில் இடம்பெற்றிருந்தன.
டாடா எதிர்பார்க்கும் தரத்திற்கு பொருட்களை விநியோகிக்க சுமார் 600 விநியோகஸ்தர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு விரிவான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
என்னதான் அந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் காரின் இருக்கைகள், ரேடியேட்டர், கண்ணாடி போன்ற சில பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.
இப்போது இந்தியாவிலேயே ஒரு காரை தயாரிப்பதற்கான வரைபடம், உதிரிபாகங்கள், பொறியில் அறிவு எல்லாம் ரெடி... ஆனால் அதையெல்லாம் ஒன்றாக இணைக்கும் அசெம்பிளி லைன் கிடைக்கவில்லை.
அசெம்பிளி லைன் கிடைத்தவுடன் அதிக எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்ய ரத்தன் டாடா, டெல்கோ ஆலையில் சுமார் ஆறு ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். இத்தனை பெரிய இடத்தில், ஒரு நல்ல பிரமாண்ட அசெம்பிளி லைன் கிடைத்தால் நாள் ஒன்றுக்கு பல நூறு கார்களைத் தயாரிக்கலாம்.
அதுவரை இந்திய கார் என்கிற கருத்தை நிரூபிக்கத்தான் ரத்தன் டாடா இத்தனை விடாபிடியாக இருக்கிறார் என்று கருதியவர்கள் கூட, அவர் இந்திய கார் சந்தையை புரட்டிப்போட, ஒரு இந்திய காரை தயாரிக்கிறார் எனப் புரிந்து கொண்டனர். டெல்கோவின் அசெம்பிளி லைனுக்கான காத்திருப்புக்கு ஆஸ்திரேலியாவில் விடை கிடைத்தது.
முந்தைய பகுதியைப் படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust