பட்டுக்கும், டாடா குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்தியாவில் பட்டு வளர்ப்பு பிரச்சனைக்கு ஜாம்செட்ஜி கண்ட தீர்வு என்ன? பட்டு வியாபாரத்தோடு, தன் விருந்தினர்கள் கடலில் மிதப்பது போன்ற உணர்வைக் கொடுக்க வேண்டும் என ஜாம்செட்ஜி மனதில் கட்டிய கோட்டையின் பெயர் என்ன? வாருங்கள் தொடங்குவோம்.
நாக்பூரில் எம்ப்ரஸ் மில்லை நிறுவிய பிறகும், ஜாம்செட்ஜிக்கு திருப்தி இல்லை. 1890-களில் ஜாம்ட்ஜி ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி என பல நாடுகளுக்குப் பயணித்தார். பிரான்ஸ் நாட்டுக்கு பயணித்த ஜாம்செட்ஜி, கொஞ்சம் பட்டுப் புழுக்களை இந்தியாவுக்கு பார்சல் கட்டியதாக கிரிஷ் குபேரின் The Tatas: How a family built a Business and a Nation என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது உலக அரங்கில் பட்டு வியாபாரத்தில் ஆசிய நாடுகள் கொடிகட்டிப் பறந்தன. குறிப்பாக ஜப்பான்.
"ஜப்பானியர்கள் பட்டுப் புழு முட்டைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், பட்டுப் புழுக்களிலிருந்து பட்டை எடுக்கும் ஃபிலேச்சர் (Filature) என்கிற தொழில்நுட்பத்தை இத்தாலியில் இருந்தும் இறக்குமதி செய்தனர். இதை எல்லாம் விட முக்கியமாக, பட்டுப் புழு தொழிலை உள்ளூர் தட்பவெப்பநிலைக்கும், துறைசார்ந்த தேவைக்குத் தகுந்தாற் போலும் மாற்றினர். அதை அப்படியே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யலாமென டாடா கருதியதாக" பைகான் பெங்களூரு குழுமத்தைச் சேர்ந்த கிரண் நடராஜன் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
பட்டுப் புழுக்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவது சரி, புதிய பட்டு தொழிலுக்கு தோதான இடம் எது? அதை எப்படி பராமரிப்பது, யார் வளர்ப்பது? என்கிற கேள்விக்கு ஜப்பானில் விடை கிடைத்தது. மைசூர் மற்றும் சென்னபட்டனாவில் நிலம் கிடைத்தது.
'தி ஓட்சஸ்' (The Odzus) என இன்றுவரை இந்திய பட்டு வரலாற்றில் அடையாளப்படுத்தப்படும் ஒரு ஜப்பானிய தம்பதியை இந்தியாவுக்கு அழைத்து வந்தார் ஜாம்செட்ஜி டாடா. விந்தையிலும் விந்தையான விஷயம் என்னவென்றால், அந்த ஜப்பானிய தம்பதியருக்கு ஆங்கிலம் தெரியாது.
மொழிப் பிரச்சனையைத் தீர்க்க, ஆர்.டி.டாடா ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்ததாகக் கூறியுள்ளார் நடராஜன். சரி தொழிலைத் தொடங்கலாம் என்கிற போது மைசூரு மற்றும் சென்னபட்டனத்தில் உள்ள சில உள்ளூர் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். 1896ஆம் ஆண்டு பெங்களூரில் திவான் கே சேஷாத்திரி ஐயரின் அனுமதியோடு டாடா சில்க் ஃபார்ம் தொடங்கப்பட்டது.
அன்றே 50,000 ரூபாய் முதலீட்டோடு தெற்கு பெங்களூரில் தியாகராஜநகர் பகுதியில், பட்டு தயாரிக்கப்பட எல்லாம் தயார்..
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பட்டு உற்பத்தியே இல்லையா? உலக வரலாற்றில் இந்தியாவின் பட்டுக்குகென தனி இடம் இருந்திருக்கிறதே? சிந்து சமவெளி நாகரீகத்திலேயே பட்டு உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவெல்லாம் கூறப்படுகிறதே? என கேள்வி எழலாம்.
இந்தியா உலக பட்டு வணிகத்தில் பல நூற்றாண்டுகளாக கொடிகட்டிப் பறந்தது உண்மை தான், ஆனால் 19ஆம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் பழமையான முறையிலேயே பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மொராதாபாத் போன்ற சில நகரங்களை உதாரணமாகக் கூறலாம்.
அப்படி தயாரிக்கப்படும் பட்டின் பளபளப்பிலும், தரத்திலும் ஜாம்செட்ஜி டாடாவுக்கு திருப்தி இல்லை. எனவே தான் ஜப்பானிலிருந்து ஓட்சஸ் தம்பதியினரையும், பிரான்ஸிலிருந்து பட்டுப் புழுக்களையும் கொண்டு வந்தார் டாடா. இந்தியாவுக்கு நவீன கால பட்டு மற்றும் அதன் உற்பத்தி முறையை இந்தியாவுக்கு கொண்டு வந்த பெருமை ஜாம்செட்ஜியையே சேரும்.
சரி, பட்டு உற்பத்திக்குத் திரும்புவோம். புதிதாகத் தொடங்கப்பட்ட டாடா சில்க் ஃபார்மில் பலரும் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சுமார் 3 மாதங்களுக்கு பட்டுப் புழு வளர்ப்பு தொடர்பாக இலவசமாக பயிற்சியளிக்கப்பட்டது. 1904ஆம் ஆண்டு ஜாம்செட்ஜி மரணத்துக்குப் பிறகு, அத்தொழிலிருந்து வெளியேற நினைத்தார் ஜாம்செட்ஜியின் மகன் தொராப்ஜி டாடா. நாளடைவில் பலரின் கைமாறியது அப்பட்டுப் பண்ணை. மத்திய அரசு டாடாவின் இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றி பல சொந்த பட்டுப் பண்ணைகளை இந்தியாவின் பல நகரங்களில் நிறுவியது.
ஆனால், இப்போதும் பெங்களூரு நகரத்தில் டாடாவின் பட்டுப் பண்ணை தொடங்கப்பட்ட இடம் 'டாடா சில்க் ஃபார்ம்' என்றே அறியப்படுகிறது.
ஜாம்செட்ஜி டாடாவின் வாழ்கைப் பக்கங்களில் கொஞ்சம் பக்கவாட்டில் பயணித்தால் இந்தியாவின் மேற்கு எல்லையில் எழும்பி இருக்கும் பிரமாண்ட கனவைக் குறிப்பிடாமல் மறந்ததைச் சுட்டிக் காட்டுகிறது வரலாறு.
விருந்தினர்கள் அனைவரும் மிதப்பது போன்ற உணர்வைப் பெற வேண்டும் என ஜாம்செட்ஜி தன் மனக் கண்ணில் கட்டியெழுப்பிய காஸ்ட்லி திட்டம் அரபிக் கடலின் அலையடிவாரட்தில் தாஜ் மஹால் பேலஸ் என்கிற பெயரில், நூறாண்டு கடந்து கம்பீர மெருகேறி நிற்கிறது.
(தொடரும் )
பகுதி இரண்டை படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust