இந்தியர்களைப் பொருத்தவரை கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்பது தான் பலரின் கனவு. ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தால் போதும், வாழ்கையைச் சுகவாசியாக வாழ்ந்து முடித்துவிடுவேன் என நம்மில் பலர் சொல்வர் அல்லது குறைந்தபட்சம் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.
ஆனால் இங்கு இந்தியாவின் மிகப்பெரிய FMCG - ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் கூட்ஸ்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் ஐடிசி நிறுவனம், 220 ஊழியர்கள் அல்லது ஆலோசகர்களுக்குக் கோடிக் கணக்கில் சம்பளம் அல்லது சன்மானத் தொகையை வழங்கி வருகிறது.
ஐடிசி நிறுவனத்தில் கடந்த 2020 - 21 நிதி ஆண்டில் கோடிக் கணக்கில் சம்பளம் அல்லது சன்மானத்தை வாங்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 153 பேராக இருந்தது, இந்த 2021 - 22 நிதி ஆண்டில் 220 பேராக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 44 சதவீதம் அதிகரித்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
மாதம் 8.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது ஒரு நிதி ஆண்டுக் காலத்துக்குள் ஒரு கோடி ரூபாய் சன்மானம் வாங்குபவர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஐடிசி நிறுவனத்தின் 2021 - 22 நிதியாண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐடிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்ஜீவ் பூரி 2021 - 22 நிதியாண்டில் 12.59 கோடி ரூபாயை ஒட்டுமொத்த சன்மானமாகப் பெற்றுள்ளார்.
இதில் 2.64 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம். 49.63 லட்சம் ரூபாய் இதர சலுகைகளுக்கான தொகையாகவும், 7.52 கோடி ரூபாயை செயல்பாட்டுக்கான போனஸ் தொகையாகப் பெற்றுள்ளார். கடந்த 2020 - 21 நிதி ஆண்டில் இவரின் ஒட்டுமொத்த சன்மானத் தொகை 11.95 கோடியாக இருந்தது, 2021 - 22 நிதியாண்டில் 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐடிசி நிறுவனத்தில் சராசரியாக ஒரு ஊழியருக்கு ஒரு ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என்றால், அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கு 224 ரூபாய் சம்பளம் மற்றும் சன்மானமாகக் கொடுக்கப்படுவதாக ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 - 22 நிதியாண்டில் ஐடிசி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி சுமந்த் மற்றும் ஆர் டாண்டன் ஆகியோர் தலா 5.76 கோடி ரூபாயைச் சன்மானமாக ஈட்டியுள்ளார்கள். என்.ஆனந்த் என்பவர் இதே காலகட்டத்தில் 5.60 கோடி ரூபாயைச் சம்பளம் மற்றும் சன்மானமாக ஈட்டியுள்ளார்.
2022 மார்ச் 31 நிலவரப்படி ஐடிசி நிறுவனத்தில் மொத்தம் 23,829 பேர் ஊழியர்களாக இருக்கிறார்கள். இதில் 21,568 பேர் ஆண்கள், 2,261 பேர் பெண்கள்.
கடந்த 2021 மார்ச் நிலவரப்படி இந்நிறுவனத்தில் மொத்தம் 25,513 பேர் ஊழியர்களாக இருந்தனர். ஆக, இந்த ஓராண்டுக் காலத்தில் ஐடிசி ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 8 சதவீதம் குறைந்துள்ளது.
சன் ஃபீஸ்ட் பிஸ்கெட்டுகள், கிளாஸ்மேட் நோட்டு புத்தகங்கள், சிகரெட்டுகள், ஆஷிர்வாத் ஆட்டா என இந்தியச் சந்தைகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பல பிராண்டுகள் ஐடிசிக்குச் சொந்தமானவை.
கடந்த 2022 மார்ச் 31 நிலவரப்படி ஐடிசியின் வருவாய் 59,101 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2021-ல் இந்த வருவாய் 48,151 கோடி ரூபாயாக இருந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust