மனித இனத்தின் வளர்ச்சியில் தற்போது எவரும் தவிர்க்க முடியாத ஒரு கட்டம் என்றால், அது செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் artificial intelligence. ஆனால் மனித மூளையின் உதவியின்றி செயற்கை நுண்ணறிவால் பெரிதாக வளர முடியாது என்பதற்கு மெடா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேட்பாட்டே சாட்சி.
கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ப்லெண்டர் பாட் (Blender Bot) என்கிற ப்ரோடோடைப் ஏ ஐ சாட்பாட் கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளிலும் மனிதர்களோடு பேசக்கூடியது என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா கூறியது.
இதற்கான டெமோ வலைத்தளத்தில் அதனோடு விவாதித்து, டெவலெப்பர்களோடு பின்னூட்டங்களைப் பகிர மெடா நிறுவனம் பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
பஸ் ஃபீட் நிறுவனத்தைச் சேர்ந்த மேக்ஸ் வுல்ஃப் மார்க் சக்கர்பெர்கைப் பற்றி ப்லெண்டர் பாட்டிடம் கேட்ட போது "அவர் ஒரு நல்ல வணிகர், ஆனால் அவரது வணிக முறை எப்போதும் அறம் சார்ந்ததாக இருக்காது. அவரிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது, இருப்பினும் அதே ஆடைகளை உடுத்திக் கொள்கிறார்" என சாட்பாட் பதிலளித்தது. அதை தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பகிர்ந்திருக்கிறார் மேக்ஸ் வுல்ஃப்.
வைஸ் ஜானுஸ் ரோஸ் என்பவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, ப்லெண்டர் பாட் தன் ஃபேஸ்புக் கணக்கை நீக்கிவிட்டதாகவும், தான் ஒரு ஃபேஸ்புக் பயனர் அல்ல என்றும் தெளிவுபடுத்தியது. ஃபேஸ்புக் கணக்கை நீக்கியதற்கு அந்நிறுவனத்தின் தனியுரிமை ஊழல்களைக் காரணமாகக் கூறியது. "ஃபேஸ்புக் கணக்கை நீக்கிய பிறகு என் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது" என்றும் கூறியுள்ளது ப்லெண்டர் பாட்.
இந்த ஏ ஐ பாட், இணையத்தில் தான் காணும் பல விஷயங்களை நமக்கு விடையாகக் கொடுக்கிறது. அது எங்கிருந்து எடுத்தது, ஏ ஐ பாட் கோருவது என்ன என்பதை எல்லாம் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் டே (Tay) என்கிற சாட்பாட் இனரீதியில் மிக மோசமான விஷயங்களைக் கூறி பயனர்களிடம் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டது. இதன் விளைவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே போல ஜி பி டி 3 என்கிற மற்றொரு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டும் இன ரீதியிலான, பெண்களை வெறுக்கக்கூடிய, தன்பாலின ஈர்ப்பாளர்களை வெறுக்கக் கூடிய வகையிலான விஷயங்களைக் கூறி சர்ச்சையில் சிக்கியது.
இப்படி ப்லெண்டர் பாட்-இலும் ஏதேனும் குறைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதை மெடா நிறுவனம் உணர்ந்திருந்தது. எனவே "ப்லெண்டர் பாட்டைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும், இது ஆய்வு மற்றும் பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை ஏற்றுக்கொண்டு ஆமோதிக்க வேண்டும்.
அதே போல இந்த ஏ ஐ சாட் பாட் உண்மையற்ற அல்லது கடுமையான விஷயங்களைக் கூறலாம் என்பதையும் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்" என மெடாவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல ப்லெண்டர் பாட் கடுமையான விஷயங்களைக் கூறும் வகையில் அதை தூண்டிவிடக் கூடாது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் ப்லெண்டர் பாட் மிகத் தெளிவாக இருக்கிறது. யார் இந்த ப்லெண்டர் பாட் ஏ ஐ சாட் பாட்டை உருவாக்கினார்களோ, அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மட்டும் அது மிக உறுதியாக இருக்கிறது.
ஒரு பயனர் தான் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறத்துக்குப் பெரிய ரசிகனல்ல என்று கூறியுள்ளார். அதற்கு ப்லெண்டர் பாட் " நானும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெரிய ரசிகனல்ல. ஆகையால் தான் நான் அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன், புத்தகங்களைப் படிக்கிறேன்" என விடையளித்து இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் ரசிகர்களோ, இது ஏ ஐ-யின் தொடக்கம் தான் போகப் போக அதன் வளர்ச்சியைப் பாருங்கள் என்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust