KGF 2 vs Beast : இது தமிழருக்கு அழகல்ல - பேரரசு

கன்னட படத்தோடு தமிழ்ப் படத்தை ஒப்பிட்டு, தமிழ்ப் படத்தைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தமிழுக்கு, தமிழருக்கும் அழகல்ல என டிவிட்டரில் பொங்கியுள்ளார் இயக்குநர் பேரரசு .
பேரரசு
பேரரசுTwitter
Published on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. இந்நிலையில் சில பெரிய திரையரங்குகளில் கேஜிஎஃப் 2 படத்தை மெயின் ஸ்க்ரீனுக்கு மாற்றி பீஸ்ட் படத்தைச் சின்ன ஸ்க்ரீனுக்கு மாற்றியமைத்துள்ளனர்.

யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 படத்திற்குக் குறைவான காட்சிகளே முதலில் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கேஜிஎஃப் படத்துக்கு அதிக தியேட்டர்களும் காட்சிகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

விஜய் ரசிகர்களே கேஜிஎஃப் படம் பீஸ்ட் படத்தைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டதாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பேரரசு கன்னட படத்தோடு தமிழ்ப் படத்தை ஒப்பிட்டு, தமிழ்ப் படத்தைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல என டிவிட்டரில் பொங்கியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகாவில் அங்கே உள்ள ஒரு உச்ச நட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளியாகி, அதே நேரத்தில் நம் தமிழ் நடிகர் நடித்த தமிழ்ப்படம் வெளியாகி கன்னடப்படம் தோல்வியடைந்து, நம் தமிழ்ப்படம் வெற்றியடைந்தால் அங்கே உள்ள கன்னடர்கள் கன்னடப்படத்தை இழிவுபடுத்தி நம் தமிழ்ப்படத்தையும், நம் தமிழ் நடிகரையும் கொண்டாடுவார்களா? மேலும் இடையில் தமிழ்ப்படங்கள் அங்கே வெளியிடக்கூடாது என்று கன்னடர்கள் போராட்டங்கள் செய்தனர். கலவரம் விளைவித்தனர்.

ஒரு தமிழ்ப் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் அந்தப் படத்தைப் பற்றி மட்டும் விமர்சனத்தை வைக்கலாம் தவறில்லை.

ஆனால் அதேசமயம் ஒரு கன்னடப் படம் வெளியாகி வெற்றி அடைந்தால் பாராட்டுங்கள் ஒன்றுக்குப் பல முறை அப்படத்தைப் பாருங்கள் தவறில்லை. ஆனால் அந்தப்படத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடி, தமிழ்ப் படத்தை இழிவுபடுத்துவதும்,கன்னட படத்தோடு தமிழ்ப் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல. இங்கே நான் மொழி வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது தான் திரைப்படம்.

இந்தியத் திரையுலகிலேயே அதிக மொழி மாற்றம் செய்யப்பட்டது தமிழ்ப் படங்கள்தான். இன்றும் இந்தியாவிலேயே தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்கிறது. முன்னோடியாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஓரிரு படங்கள் சரிவர வெற்றி அடையாததால் தமிழ் சினிமாவை யாரும் தரக்குறைவாகப் பேசி விடக்கூடாது, நினைத்து விடவும் கூடாது.

சமீபத்தில் ஓரிரு தெலுங்கு படங்களும் ஓரிரு கன்னட படங்களும் வெற்றி அடைந்ததால் தமிழ்த் திரை உலகம் பின் தங்கி விட்டதாகவும் தமிழ் இயக்குனர்கள் திறமையற்றவர்களாகவும் விமர்சனம் செய்வது தமிழனைத் தமிழன் அசிங்கப்படுத்துவதாகும்.

இது நம் தமிழ்மொழியின் கௌரவப் பிரச்சனை. தமிழா நீ போற்றுவதற்கு ஒரு கன்னடப்படம்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் போற்றுவதற்கு இங்கு ஆயிரம் தமிழ்ப் படங்கள் இருக்கிறது என்பதை மறவாதே! கன்னட படம் நன்றாக இருந்தால் பார்ப்போம் போற்றுவோம்! ஆனால் அதோடு ஒப்பிட்டு தமிழ்ப் படத்தைத் தூற்றுவதைத் தவிர்ப்போம் ஒரு கன்னட நடிகரைப் பாராட்டுவோம் அதேசமயம் ஒரு தமிழ் நடிகரை, தமிழனைத் தரம் தாழ்த்தாதிருப்போம்! இது கலையையும் தாண்டி தமிழை இழிவு படுத்துவதாகும்.

தமிழ்நாட்டில் பல நடிகர்களுக்குப் பல ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் நாம் எல்லோரும் தமிழர்கள். தமிழுக்கு ரசிகர்கள். தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.

Perarasu
PerarasuTwitter
பேரரசு
ரா : இந்தியாவின் உளவு அமைப்பான RAW-ல் சேர விருப்பமா? இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்

இவரின் இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் பதிலளித்துள்ளனர். அதில் ஒருவர்,

நீங்கள் இயக்கும் படங்களை எல்லாம், மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறீர்கள், அவர்கள் படம் பார்த்த அவர்களின் பணம் மட்டும் வேண்டும் ஆனால் அவர்கள் கூட நம்ம தமிழ்ப் படம் flop ஆன உடனே கன்னட படத்தோட தமிழ்ப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாதா.? என்றார்.

தமிழில் பேர் வைக்கமாடீங்க பாட்டுல தமிழ் இருக்காது ஆனால் தமிழ் தமிழர்னு உருட்டுவார்கள் என்றார் மற்றொரு ரசிகர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பேரரசு
KGF 2 : இரும்பு பட்டறை டூ கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் - யார் இந்த ரவி பஸ்ரூர்?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com