சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் வழியில் ரத்து செய்யப்பட்டது. அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தைப் பிரதமருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் விமர்சித்து வந்தனர்.
அந்த வரிசையில் விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவால் “ஒரு நாட்டின் பிரதமருக்குப் பாதுகாப்பு இல்லை எனில், அந்த நாடு தன்னை தானே பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பஞ்சாபில் பிரதமருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்” என ட்விட் செய்திருந்தார்.
இதனை ரீ ட்விட் செய்த நடிகர் சித்தார்த் சாய்னாவைக் கேலியாகச் சாடியிருந்தார். சித்தார்த்தின் கேலி பேச்சில் ஆபாசமாகப் பொருட்படும் வார்த்தை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் உட்படப் பலர் அவரை கண்டித்துப் பதிவிடத் தொடங்கினர்.
இதன் பிறகு சித்தார்த் தான் ஆபாசமாக எதுவும் கூறவில்லை "ஒரு குறிப்பாகத் தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்" என விளக்கம் அளித்தார். சாய்னாவின் கணவரான பாருபள்ளி காசியப், “உங்கள் கருத்துக்களைச் சொல்ல நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்” என அவரது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். அத்துடன் அவரது ட்விட்டர் கணக்கையும் முடக்க வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக டிஜிபி-க்கு கோரிக்கை வைத்தனர்.
டைம்ஸ் நவ் நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சாய்னா-வின் தந்தை, “எனது மகள் பாட்மிண்டன் விளையாடி நாட்டுக்குப் பல பதக்கங்களையும் விருதுகளையும் குவித்து சாதனை புரிந்தவர். இந்த நாட்டிற்காக நடிகர் சித்தார்த் என்ன சாதனை புரிந்தார்.அவர் சினிமா படங்களில் நடிப்பதை விட வேறு என்ன சாதனை புரிந்தார்?” எனக் கேள்வி எழுப்பினார்.
தற்போது, உங்கள் ட்விட்டில் பதிவிட்ட, சரியாகப் புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சித்தார்த் ட்விட்டரில் சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் நான் பயன்படுத்திய வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. தங்களது ட்விட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் தான் என் சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.