தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன் படி இன்று டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார் சிலம்பரசன். அப்போது பேசிய அவர், “நான் 9 மாத குழந்தையா இருந்தது முதல் என்னை நடிக்க வைத்து, எனக்கு கற்றுக் கொடுத்து என்னை இவ்வளவு தூரம் கூட்டி வந்தது என் அப்பா அம்மா தான். அவங்களுக்குத் தான் இந்த டாக்டர் பட்டம் போய் சேரனும். எனக்கு அடுத்த ஜென்மத்துல இப்படி ஒரு அப்பா அம்மா கிடைப்பாங்களானு தெரியல, இதுக்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லிகிறேன். எல்லா குழந்தைகளுக்கு அவங்களுக்கு புடிச்சத பண்ணவைக்கிற தட்டிக்கொடுக்கிற இந்த மாதிரி அப்பா அம்மா கிடைக்கவேண்டும்” எனப் பேசினார்.
பட்டம் வழங்கப்பட்ட பிறகு சிலம்பரசனின் அம்மா உஷா ராஜேந்தரும் அப்பா டி.ராஜேந்தரும் அவரை அணைத்து முத்தமிட்டு ஆசீர்வதித்தனர்.
இந்த டாக்டர் பட்டம் சிம்பு சினிமா துறையில் தனிச்சிறப்போடு விளங்குபவர் என்பதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர், நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். எம்.ஜி ஆர் , சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜய் மற்றும் விக்ரம் வரிசையில் தற்போது சிலம்பரசன் TR-ம் இணைத்துள்ளார். வெந்துதணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.