கடந்த ஜனவரி 17-ம் தேதி முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற இருவரின் விவாகரத்து இந்திய அளவில் பேச்சு பொருளானது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களது அறிவிப்பில் “இருவரும் ஒரு தம்பதியாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எங்களுக்குத் தனிமையைக் கொடுங்கள்’’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
விவாகரத்து குறித்த காரணங்களோ, கருத்துகளோ இதுவரை இரண்டு குடும்பத்தினரும் தெரிவிக்கவில்லை. நேற்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் கேட்ட செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா?” என உருக்கமாகப் பேசியிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை, நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை மேற்கோள் காட்டி அந்த பதிவினை வெளியிட்டுள்ளார். மேலும், “வாழ்கையை எங்குத் தொலைத்தோமோ அங்கு தான் தேட வேண்டும், டி.நகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணியில் தேடக் கூடாது” எனக் கூறிய அவர் இது அட்வைஸ் அல்ல ஒரு ரசிகனாகக் கூறுகிறேன் எனவும் கூறியிருந்தார்.
இதே போல நடிகை கஸ்தூரி சங்கர் நேற்று அவரது ட்விட்டரில், “விவாகரத்து குறித்து என் கருத்து : விவாகரத்து பெறுபவர்களுக்கு எவ்வளவு சரியானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களது குழந்தைகளுக்கு எப்போதும் தவறானது தான். "குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருத்தலில் ஏதோ ஒன்று இருக்கிறது”. குழந்தைகள் புகைப்படத்தில் வந்த பின்னர் குடும்பத்துக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
மீண்டும் இன்று, “நேற்று விவாகரத்து பற்றி நான் பகிர்ந்த பொதுவான ஒரு கருத்தை அனாவசியமாக இன்னொருவருக்குக் கூறிய அறிவுரையாகச் சித்தரிக்கவேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால், ஒரு தனிப்பட்ட பிரச்சினை பொதுவெளியில் பேசுபொருள் ஆனதே என்னைப் போன்றவர்களுக்கு வருத்தம். இதில் என்னை ஏன் சம்பந்தப்படுத்துகிறீர்கள். ஒத்துக்கொள்கிறேன் எனது பதிவு அவர்களின் விவாகரத்தால் தூண்டப்பட்டது தான். ஆனால் அதை அவர்களுக்கான அறிவுரையாக நான் கூறவில்லை. அவர்களுக்கு எனது ஆதரவும் அனுதாபமும் மட்டுமே” எனப் பதிவிட்டார்.
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து, இருவரும் தனிப்பட்ட முறையில் நீண்ட ஆலோசனைகள் செய்து, இதன் சாதக பாதகங்களை அலசிப் பார்த்து, இதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து, ஆழ்ந்த கவனத்துடன் எடுத்த முடிவாகவே இது இருக்கக்கூடும். பலமுறை பேசியும் சரிசெய்ய முடியாத கருத்துவேறுபாடுகள் இருக்கும் சூழலில், மனக்கசப்போடு வாழ்வதைவிடக் கைகுலுக்கிப் பிரிந்து நண்பர்களாக இருப்பது சரியானதென்ற தீர்மானத்துக்கு வந்திருக்கக்கூடும், எனச் சொல்லப்படுகிறது.