2021-ல் வெளியான தமிழ் சினிமாக்கள் வருங்கால தமிழ் சினிமாவிற்கு எந்த மாதிரி எதிர் காலத்தை கொடுக்கும்,நல்ல சினிமாக்கள் தொடர்ந்து வருமா?நல்ல சினிமாக்கள் வருவதற்கேற்ற அரசியல் சூழல் இங்கே அமையுமா?
“அமெரிக்காவில் ஒருவன் 100 பேரை கொன்றால் அவன் சைக்கோ, இங்கே ஒரு இஸ்லாமியர் கொன்றால் அவர் தீவிரவாதியா?” – மாநாடு திரைப்பட உரையாடல்.
“எனக்கு முஸ்லீம்னா அப்துல் ரசாக் ஞாபகத்திற்கு வர்ல, அப்துல் கலாம்தான் ஞாபகத்திற்கு வர்றார்” – சூர்யவன்ஷி இந்தி திரைப்பட உரையாடல் வரிகள்.
மத்தியில் பாஜக ஆளும் போது பிந்தைய வசனம் இயல்பனாது. முந்தைய வசனம் இயல்புக்கு மாறானது. 2021-ல் தமிழ் சினிமாவின் பெரும் பாய்ச்சலை குறிக்கின்ற அடையாளங்களில் மாநாடு படத்தின் இந்த வசனம் ஒரு அறிகுறி. அர்ஜூன், விஜயகாந்த் தேசபக்தி படங்களில் நேரடி மலிவாகவும், மணிரத்தினம் படங்களில் நாசுக்கான மலிவாகவும் முசுலீம் தீவிரவாதிகள் வந்து போவார்கள். இன்று ஒரு படத்தின் நாயகனே முசுலீமாக வருகிறார். முசுலீம்களுக்கு வாடகை வீடு கூட கிடைப்பது சிரமம் எனும் சூழலில் மாநாடு படமோ அதற்கு எதிராக இருக்கிறது. கோவையில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றிருந்தாலம். அதே கோவையை உள்ளிட்ட தமிழகத்தல் வானதியின் அரசியல் வெற்று பெறுவது சிரமம் என்பதை மாநாடு தெரிவிக்கிறது.
ஸ்டூடியோவில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை 1970களில் தமிழ் கிராமங்களுக்கு கொண்டு சென்றார் பாரதிராஜா. எனினும் உருவம் மாறியதால் உள்ளடக்கம் மாறியதா?
தாய் பாசம், அண்ணன் தங்கை பாசம், காதல், குடும்ப மோதல் போன்ற சென்டிமெண்டுகளும், தேசபக்தி, போலீசு, பேய், போன்ற கதைக்களங்களே கோடம்பாக்கத்தில் நெடுங்காலம் மையம் கொண்டிருந்தன.
இந்த நூற்றாண்டு சென்ற நூற்றாண்டு போல இல்லை என்பதற்கு 2021-ல் வந்த திரைப்படங்களே சாட்சி!
வழக்கமாக தென்மாவட்டங்களில் இருந்து வரும் இயக்குநர்களின் கதைப்பரப்பில் ’மேல்’ சாதிக் குடும்பம் அவர்களின் கவுரவம், மனிதாபிமானம் போன்ற உணர்ச்சிகள் மேலோங்க களம் இருக்கும். ஒருக்கால் இந்த சாதி, வர்க்கம் போன்றவை இல்லையென்றாலும் குடும்ப உறவின் உணர்ச்சிகளைத் தாண்டி தெருவுக்கும், ஊருக்கும் பிறகு காலனிக்கும் கதைக்களம் நகர்வதேயில்லை.
2021-இல் வந்த கர்ணன், மாநாடு, சார்பட்டா பர்ம்பரை, ஜெய்பீம் போன்ற படங்களின் கதைக்களங்கள் ஒரு பெரிய கான்வாசில் தமிழ் வாழ்வை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் - மலைவாழ் மக்கள் - சிறுபான்மையினர் என்று நமது இயக்குநர்களின் கதை சொல்லல் அற்ப உணர்ச்சிகளிலிருந்து அதிதீவிர முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் சமூக அரசியல் தளங்களிற்கு நகர்ந்திருக்கிறது. இன்றும் பேய் படங்கள், கடி ஜோக்கு காமடி படங்கள், செண்டிமெண்ட் படங்கள் வந்தாலும் சமூக அரங்கில் அவை பேசு பொருளாக இல்லை. அதற்கு ரஜினியின் அண்ணாத்தே தோல்வி மற்றுமொரு சாட்சி.
காக்க காக்க படத்தில் சூர்யா, ஒரு போலி மோதலில் 50 ரூபாய் செலவில் தீவிரவாதியை கொல்வதை விட்டுவிட்டு கோர்ட்டு ,கேஸுன்னு காலத்தை விரயமிடுவது வேஸ்ட் என்பார். வலிமை படத்தில் என்கவுண்டரில் போட்டு விடலாம் என்பதற்கு நாம் உயிர்களை எடுப்பதற்கு உரிமை இல்லை என்பார் அஜித். இருவரும் போலீசுதான். போலி மோதல் கொலை தப்பு என்று இன்று ஒரு போலீசு அதுவும் நட்சத்திர நடிகர் பேசுவது அது வெள்ளித்திரை என்றாலும் முக்கியமானது.
2021ம் ஆண்டு கோவிட் 19 தொற்று அனைவரையும் முடக்கிப் போட்டது போல சினிமாவையும் முடக்கியது. வேறுவழியின்றி பல படங்கள் ஓடிடி (Over the top) தளத்தில் வெளியாகின. வருவாய் வெற்றி, விமர்சன வெற்றி இரண்டுமே திரையரங்குகள் போல ஓடிடி தளத்திலும் சாத்தியம் என்பதை கடந்த ஆண்டு நிரூபித்திருக்கிறது. எதிர்கால சினிமாவிற்கு ஓடிடி ஒரு முக்கியமான பங்களிப்பை செலுத்தும். தற்போதைக்கு இன்னும் நம்மை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றுதான் ஓடிடியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
தயாரிப்பாளர் நோக்கில் ஒரு திரைப்பட வருவாய் என்பது தமிழகம், தென்மாநிலங்க்கள், இந்தி டப்பிங், ஓவர் சீஸ் ரைட்ஸ், டிவி ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என்று பல வகைகளில் பெரும் வருமானத்தை கொண்டிருக்கிறது. ஓடிடிக்கு அந்த வகைகள் இல்லை. அவர்கள் கணிசமான பணத்தை தருவதாக இருந்தாலும் முந்தைய வகையினங்களின் வருவாய் அதிகம்.
தற்போது இந்திய ஓடிடி தளங்களின் வளர்ச்சி ஆண்டுக்கு 28.6% இருக்கிறது. இதன்படி 2024-ம் ஆண்டில் உலக அளவில் ஓடிடி சந்தையில் ஆறாம் இடத்தைப் பெறும் என்கிறார்கள். FICCI அறிக்கை 2021-ன் இறுதியில் ஓடிடி சந்தாதார்ர்கள் 3 முதல் மூன்றரை கோடியாக இருப்பார்கள் என்று கூறுகிறது. 2020 –ம் ஆண்டு கணக்கின் படி முதல் ஐந்து மெட்ரோ நகரங்களில் 46% பேரும், அதற்கடுத்த முதல்நிலை நகரங்களில் 35% சந்தாதாரர்களும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நகர்ப்புறம் அதிகம் உள்ள மாநிலங்களில் குறிப்பாக தென்மாநிலங்களில் இந்த சந்தை வளரும்.
ஓடிடியில் இந்திய சந்தாதாரர்கள் தமது வட்டார மொழிகளிலேயே திரைப்படங்களை அதிகம் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. அதனை ஓடிடி நிறுவனங்களும் கணக்கில் கொண்டு உலக திரைப்படங்கள், தொடர்களை தமிழில் டப் செய்து வெளியிடுவதை இந்த ஆண்டு அதிகம் செய்திருக்கின்றன.
முன்பு ஹாலிவுட்டைத் தாண்டி நாம் வெளிநாட்டுப் படங்களை பார்க்க முடியாது. இன்று கொரியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் என்று அனைத்து மொழி படைப்புகளையும் தமிழிலேயே பார்க்க முடியும். இதனால் தமிழ் ரசிகர்களின் ரசனை மேம்படுவதோடு அந்த மேம்பட்ட ரசனைக்கு நிகராக இயக்குநர்களும் படைப்புகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஓடிடி தளங்களின் சந்தை வளர்ச்சி திறன் சார்ந்த தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். டப்பிங் கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோருக்கு வேலை அதிகம் கிடைக்கும். திரையரங்கு வருவாய் குறையும் படச்த்தில் திறனற்ற தொழிலாளர் வேலை இழப்பு அதிகம் இருக்கும். திரையரங்கில் சென்று படம் பார்க்கும் அனுபவத்தையே இன்றும் இளைஞர்கள் விரும்புகின்றனர். அது அத்தனை சீக்கிரம் அழிந்து விடாது என்றாலும் கொரோனா மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி இந்த புதிய ஆண்டில் வில்லனாக இருக்கிறது.
21-ம் நூற்றாண்டில் இரண்டாவது பத்தாண்டில் சமூக ஊடகங்கள் பெரும் வளர்ச்சி பெற்றன. அதே போன்று சினிமாவின் வரவேற்பு அல்லது தோல்வியை தீர்மானிக்கும் சக்தியை சமூக ஊடகங்கள் பெற்றன. ஆரம்பத்தில் திரைப்படங்களை காத்திரமாக விமர்சித்திக் கொண்டிருந்த யூடியூப் சானல் விமர்சகர்கள் இப்போது திரைப்பட நிறுவனங்களின் பிரமோட்டர்களாக மாறிவிட்டனர். இதில் ஒரு சிலர் விதிவிலக்கு. ஆனால் இன்னமும் தனிநபர்களாக காத்திரமான முறையில் சினிமாவை விமரிசிப்போர் பலரும் இருக்கின்றனர். இவர்களின் சிலர் பிரபலமானால் நல்ல விமர்சகர்கள் நமக்கு கிடைப்பார்கள். ஒரு நல்ல படத்தை ரசிப்பதற்கு, சுமாரன படத்தை அறிவதற்கும் நல்ல விமர்சகர்கள் அவசியம்.
விமர்சகராக இருந்த புளூ சட்டைமாறன் “ஆண்டி இந்தியன்” படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படம் சாதாரண மக்களுக்கு பிடித்திருக்கிறது. மற்ற பிரிவினருக்கு பிடிக்கவில்லை. சமூக ஊடகங்களில் பிரபலமானோரும் கூட திரைப்படங்களில் கால் பதிக்கும் போக்கு இந்த புதிய ஆண்டிலும் நடக்கும்.
சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ம் ஆண்டில் மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. இதை எதிர்த்து தமிழ் உள்ளிட்டு இந்திய அளவில் திரை பிரபலங்கள் பேசியிருக்கின்றனர். எனவே வரும் ஆண்டு இத்தகைய அரசு கண்காணிப்பு படைப்பாளிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். அதற்கு மக்கள் களத்தில் இருந்து ஆதரவு வரும் பட்சத்தில் காத்திரமான சினிமாக்கள் வரும் ஆண்டில் நிறையவே வரும்!
அந்த வகையில் 2022-ம் ஆண்டில் தமிழ் சினிமா இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருக்குமென எதிர்பார்ப்போம்.
Govindh