தமிழ் சீரியல்களில் ரோஜா, பாரதி கண்ணம்மா, செம்பருத்தி ஆகிய தொடர்கள் இரவு 9 மணிக்கு பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இவை நான்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்கள் ஆகும். தற்போது இந்த சீரியல்களுடன் போட்டி போட ``இது சொல்ல மறந்த கதை’’ என்னும் புதிய சீரியலை களமிறக்குகிறது கலர்ஸ் தமிழ்.
பொதுவாக புதிய முகங்களை வைத்து சீரியல்களை முன்னெடுக்கும் கலர்ஸ் தமிழ் இம்முறை தமிழ் சின்னத்திரை வட்டத்தில் மிகவும் பிரபலமான முகங்களை வைத்து இந்த சீரியலை உருவாக்கியுள்ளனர்.
இது சொல்ல மறந்த கதை நெடுந்தொடர் இன்று முதல் கலர்ஸ் தமிழில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கணவனை இழந்த கைம்பெண்ணாக, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக புதிய பரிமாணத்தில், ரச்சிதா மகாலட்சுமி சாதனா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இறந்து போன தன் கணவன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் ரச்சிதா நீதிக்காக போராடுவது போல் கதைகளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் புலன் விசாரணையை மேற்கொள்கின்ற நேர்மையான ஊடகவியலாளராகவும் நாயகனாகவும் விஷ்ணு, அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
உயிரிழந்த கணவரின் நற்பெயரை சீரழித்த அந்த வழக்கில் அவர் தவறு செய்யாத நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக நாயகி சாதனா முன்னெடுக்கும் முயற்சிகளில் நண்பராக அர்ஜுன் உறுதுணையாக இருக்கிறார். இவர்களை சுற்றி கதை நகர்கிறது.
ஜீ தமிழில் சத்யா சீரியலில் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் விஷ்ணு, கலர்ஸ் தமிழ் சேனலின் சீரியலிலும் நாயகனாக கமிட் ஆகியிருப்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம்.
துணை நடிகர்கள் வெவ்வேறு சேனல்களின் சீரியலில் நடிப்பது புதிதல்ல. ஆனால் ஒரே நபர் இரண்டு வெவ்வேறு சேனல்களின் சீரியல்களில் நடிப்பது அரிதான ஒன்று. விஷ்ணு - ஆயிஷா காம்போவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், விஷ்ணு - ரச்சிதா இணையும் இந்த தொடர் ரசிகர்களின் மனங்களை வெல்லுமா, பிரைம் டைம் பந்தயத்தில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.