மாமன்னன் திரைப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சபாநாயகராக வடிவேலு கம்பீரமாக அமரும் காட்சி அனைவருக்குமே முன்னாள் சபாநாயகரான தனபாலை நினைவுபடுத்தியிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் தனபால். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அதிமுக கொங்கு பகுதிகளில் திறமையாக செயலாற்றி வந்தவர். 1977, 1980,1984, 2001 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலிருந்தும் 2011-ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 2021-ல் அவிநாசி தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்த 1977ம் ஆண்டு சட்டமன்றத்திலேயே இளம் எம்.எல்.ஏவாக இருந்தார் தனபால்.
தனபால் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். இந்த பதவிகள் அவரை வந்தடைந்ததற்கு பின்னால் சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. இவருக்கும் மாமன்னன் படத்துக்கும் என்ன தொடர்பு?
திராவிட சிந்தனைகளால் ஊக்கம் பெற்ற தனபால் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திரையிலும் சரி நிஜத்திலும் சரி எம்.ஜி.ஆர் அவருக்கு ஹீரோவாக இருந்தார்.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் தனியாக பிரிந்த போது எம்.ஜி.ஆரின் பின்னால் ஆதிமுக சென்றார். அதிமுகவின் முதல் பேட்ச் உறுப்பினர் இவர்.
எம்.ஜி.ஆரிடமும் சரி அதன் பிறகு கட்சியில் தலைமை வகித்த ஜெயலலிதாவிடமும் சரி தனபாலுக்கு நல்ல பெயர் உண்டு. நேர்மையான, கள்ளம் கபடம் இல்லாத விசுவாசியாக அறியப்பட்டார்.
எம்.ஜி.ஆர் தனபால் மீது வைத்திருந்த அன்புக்கு அடையாளமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். தனபால் ஒரு மோசமான சாலை விபத்தை சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எம்.ஜி.ஆர் ரஷ்யாவிலிருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால் கட்சியில் உள்ள அனைவரும் அப்படி இல்லை. அதிமுகவில் வளரும் அரசியல்வாதியாக பல சிரமங்களையும் அவமானங்களையும் சந்தித்தார் தனபால்.
1989 தேர்தலில் தோல்வியைத் தழுவியப்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். அதிமுக தலைமையும் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
2001 தேர்தலில் சங்ககிரி தொகுதியில் தனபாலுக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார் தனபால். அந்த நேரத்தில் ஒருநாள் ஜெயலலிதா தன்பாலை விசாரணைக்காக அழைத்தார்.
அவரிடம் மிகுந்த கோபத்தோடு சில கேள்விகளைக் கேட்டார். 'என்ன மிஸ்டர் தனபால் தேர்தல் வேலை பார்க்கற கட்சிக்காரங்களுக்கு நீங்க சோறுகூட வாங்கித் தர்றதில்லை. கட்சிக்காரங்ககிட்ட இருந்து விலகியே இருக்கீங்கன்னு புகார் வந்திருக்கு. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?' எனக் கடுமையைக் காட்ட,
அதிர்ந்து போன தனபால், 'அம்மா என்னை மன்னிச்சிருங்க. நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். நம்ம கட்சிக்காரங்களுக்கு நான் சோறு செஞ்சு போட்டாலும் யாரும் சாப்பிட மாட்டாங்க. இதுவரைக்கும் இரண்டு தடவை என் சாப்பாடை அவங்க புறக்கணிச்சுட்டாங்க. அத்தனை சோறும் வீணாப் போச்சு. எங்கள மாதிரி அருந்ததியர் சமூகத்து வீட்ல எல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்கம்மா' எனக் கண்ணீர் வடிக்க, மிகுந்த அதிர்ச்சியோடு தனபாலைப் பார்த்தார்.
சில நிமிடத்திற்குப் பிறகு, 'இப்படியெல்லாம் நடக்குமா? பார்த்துக்கலாம். நீங்க போய் தேர்தல் வேலையைப் பாருங்க' என அனுப்பி வைத்தார்.
தேர்தலில் வென்ற தனபாலுக்கு உணவுத்துறை அமைச்சர் பதவியையும் வழங்கினார். யார் வீட்டில் சாப்பிட மாட்டோம் என அதிமுகவினர் மறுத்தனரோ அவர் கையால் இனி தமிழகமே சாப்பிட வேண்டும் என ஜெயலலிதா அந்த ’தக் லைஃப்’ சம்பவத்தை நிகழ்த்தினார்.
2011-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, முதலில் துணை சபாநாயகர் பதவியையும், பிறகு யாரும் எதிர்பாராமல் சபாநாயகர் பதவியையும் கொடுத்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் அதிமுக உடைந்தது. அப்போது சசிகலா அணிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் மோதல் நிலவிய போது தனபாலை முதல்வராக்கலாம் என சசிகலா தரப்பு கூறியதாக சொல்லப்படுகிறது.
அப்போதும் பதவியாசைக் கொள்ளாமல் எடப்பாடியின் பக்கம் நின்றார் தனபால். இவரது சாயலில் மாமன்னன் படம் உருவாகியிருப்பது குறித்து, "இப்ப இந்த ‘மாமன்னன்’ படம் என் கதையின் சாயலில் இருக்குன்னா அதை அம்மாவுக்குக் கிடைச்ச வெற்றியாத்தான் நான் பார்க்குறேன். அதுக்காக படத்தை எடுத்த அதுல நடிச்ச உதயநிதிக்கு நன்றி." எனத் தெரிவித்திருக்கிறார் தனபால்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust