கரூர் மாவட்டம் ராமேஸ்வரம் பட்டி தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊர். விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் தன்னுடைய பள்ளி படிப்பு முடித்தார்.
அதன் பிறகு கரூர் அரசு கலைக் கல்லுரியில் மேற்படிப்புக்காக சேர்ந்தார். அந்த வயதில் அரசியல் ஆசை எட்டி பார்க்க படிப்பை அப்படியே விட்டுவிட்டு அரசியலில் இறங்கினார் செந்தில் பாலாஜி.
முதலில் மாதிமுகவில் செயல்பட்டுவந்த செந்தில் பாலாஜி 1996ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பிறகு கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார். அந்த நேரத்தில் திமுக ஆட்சியில் இருந்தாலும் கூட திமுகவிலிருந்து இவரால் பெரிய அளவில் ஜொலிக்கமுடியவில்லை.
இதனால் 2000 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் முக்கிய அதிமுக பிரமுகராக இருந்த முன்னிலையில் இருந்த சின்னசாமி என்பவர் மூலமாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
என்னதான் சின்னசாமி அவர்கள் மூலமா அதிமுகல இணைந்தாலும் சின்னசாமி அவர்களுக்கே செந்தில் பாலாஜி வேட்டுவச்ச கதையெல்லாம் பின்னால் வருகிறது.
இந்த காலக்கட்டத்தில் தான் செந்தில் குமார் என்ற தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். அதற்கு பிறகு தான் இவருடைய அரசியல் பிரவேசமே ஆரம்பித்தது.
அதிமுகவில் ஆறு மாசத்திலேயே மாநில மாணவரணி செயலாளராக இருக்கக்கூடிய விபி கலைராஜன் அவர்களுடைய அறிமுகம் கிடைக்க, அவருடன் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் செந்தில் பாலாஜி.
கலைராஜனின் உதவியால் 2004 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட மாணவர் அணி பொறுப்பும் செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது.
விபி கலைராஜன் சசிகலா அவர்களுடைய குடும்பத்துடன் அதிக நெருக்கமானவர். ஒரு வகையில உறவினரும் கூட.
விபி கலைராஜனிடம் செந்தில் பாலாஜி காட்டிய விசுவாசம் தான் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக உயர காரணமாக இருந்தது.
எம்.எல்.ஏ ஆன பிறகு வாக்களித்த மக்கள் பக்கம் இல்லாமல் சீட்டு கொடுத்த ஜெயலலிதா பக்கம் தான் செந்தில் பாலாஜியின் கவனம் இருந்தது. செந்தில் பாலாஜி மட்டுமல்ல அதிமுகவினர் அனைவருமே ஜெயலலிதாவிடம் நற்பெயர் வாங்குவதில் தான் முனைப்புக் காட்டிவந்தனர். அப்படி நடந்துகொண்டால் மட்டும் தான் அரசியல் வாழ்க்கையை தக்கவைக்க முடியும்.
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிக்காலத்தில் மணல் கொள்ளை சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. அதற்கு எதிராக போராட்டம் பண்ண காளமிறங்கினார் செந்தி பாலாஜி.
அந்த காலக்கட்டத்தில் திமுகவுக்கு எதிரான பலத்த அரசியல் ஆயுதமாக ஜெயலலிதா பயன்படுத்தியதும் மணல் கொள்ளைதான்.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருந்த கே.சி.பழனிசாமி செய்த மணல் கொள்ளையை மேடைகளில் உக்கிரமாக பேசிவந்த ஜெயலலிதாவின் கவனத்தை செந்தில் பாலாஜியின் செயல்கள் ஈர்த்தன.
கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் பதவி செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது. அடுத்த 10வது நாளே கரூர் மாவட்ட செயளாலர் பதவி கிடைத்தது. இப்படியாக ஆதிமுகவில் முக்கிய பிரமுகராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி.
2011ம் ஆண்டு மறுபடியும் தேர்தல் வருது ஜெயலலிதாவுக்கு அபார வெற்றி கிடைக்குது. 2வது முறையாக அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்குது.
அப்போதில இருந்து பொருளாதார தேவைகளுக்கு ஜவுளி தொழிலை நம்பியிருக்கும் நிலை செந்தில் பாலாஜிக்கு மாறியது. அமைச்சரா அவருக்கு பல சோதனைகள் வந்தது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் நிலைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டாம். யார் அதிகமா குனியிறாங்குற போட்டி வைக்கலாம். அந்த அளவு ஜெ'க்கு விசுவாசத்தைக் காட்ட அமைச்சர்கள் போட்டிப்போட்டாங்க.
எந்த அமைச்சர் சக அமைச்சர காட்டிக்கொடுத்து நல்ல பெயர் வாங்குறாங்க என்பது தாம்ன் போட்டியே. அமைச்சர்கள் பலமுறை இலாக்காக்கள் மாற்றப்பட்டனர். பலர் கொஞ்ச நாள்லயே அமைச்சர் பதவியை இழந்தனர்.
ஆனால் சசிகலா குடும்பத்துக்கும் விசுவாசமா இருந்ததால 4 ஆண்டுகள் தன்னுடைய போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை தக்கவச்சுகிட்டார் செந்தில் பாலாஜி.
இன்னொரு பக்கம் கரூர் மாவட்ட அதிமுக-வை தனது கைக்குள் கொண்டு வந்தார் செந்தில் பாலாஜி. இப்போதுப் எப்படி கரூர் மாவட்ட திமுகவை வைத்திருக்கிறாரோ அப்படித் தான்!
தனக்கு எதிராக செயல்பட வாய்ப்பிருந்த யாவரையும் ஒதுக்கி ஓரங்கட்டினார். கட்சியில் சீனியர் என சீன் போட்டவர்களை அடக்கினார். இவரது உள்கட்சி அரசியல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தான் இவரை அதிமுகவில் சேர்த்துவிட்ட சின்னசாமி திமுக-வுக்கு தாவினார்.
அமைச்சராவும் ஸ்கோர் பண்ண தவறல செந்தில் பாலாஜி. சென்னைக்குள் மினி பஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். அந்த பஸ்களில் இரட்டை இலை சின்னத்தையும் வரைந்து அதகளம் செய்தார்.
அரசு பேருந்தில் கட்சி சின்னமா என எதிர்கட்சிகள் பொங்கியபோது, "வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு உணவு தரப் படைப்பது, வாழை இலை. உணவில் வாசத்தை ஏற்படுத்துவது, கருவேப்பிலை. உணவாகவே சமைக்கப்படுவது, கீரை இலை. சாப்பிட்ட பிறகு போடுவது, வெற்றிலை. வீட்டு வாசலில் அலங்கரிப்பது, மாவிலை. மனிதனின் நோய் போக்குவது, துளசி இலை. இப்படி தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த இலைகளின் அடையாளம் இது" என வித்தியாசமாக உருட்டி ஜெயலலிதாவின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டார்.
மற்றொரு திட்டம் அம்மா குடிநீர் திட்டம். போக்குவரத்து துறையில் ஒரு குடிநீர் திட்டம்னு புதுசா யோசிச்சு அங்கயும் ஸ்கோர் செய்தார் செந்தில் பாலாஜி. இது ஜெயலலிதாவை ரொம்பவுமே கவர்ந்தது.
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றபோது கோவில் கோவிலாக ஏறி இறங்கி பூஜைகள் செய்தார் செந்தில் பாலாஜி. ஹைலைட்டாக அம்மன் கோவில் ஒன்றில் தீச்சட்டி, காவடி என எடுத்த கையோடு அங்கப்பிரதட்சனம் செய்து ஜெ'வின் உண்மை விசுவாசியாக காட்டிக்கொண்டார்.
ஜெயலலிதா விடுதலையானதும் 5000 பேருடன் சென்று மொட்டையும் போட்டுக்கொண்டார். செந்தில் பாலாஜியுடைய அரசியல் ஆயுதமே விசுவாசத்தைக் காட்டும் விதவிதமான டெக்னிக்குகாள் தான்.
ஆனால் ஜெயலலிதாவிடம் செந்தில் பாலாஜியின் விசுவாச வர்ணனைகள் வேலைக்காகவில்லை. போக்குவரத்து துறையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் வாட்டர், இரட்டை இலையுடன் மினிபஸ் எல்லாம் வந்தாலும் குற்றச்சாட்டுகளும், சீர்கேடுகளும் ஜெயலலிதா கவனத்துக்கு வந்தன.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பிரச்னை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அது செந்தில் பாலாஜியின் நிர்வாகத் திறமையின்மைக்கு உதாரணமாக அமைந்துவிட்டது. புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் கொஞ்ச நாள்களிலேயே கடகடத்துபோயின. கரூரில் கட்டப்பட்ட பேருந்துகள் தகர டப்பாவாகவே வளம் வந்தன. ஏகப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
போக்குவரத்துக் கழகங்களுக்கு டிக்கெட் வழங்க கையடக்க இயந்திரம் வாங்கப்பட்டதில் முறைகேடு என புயல் வீசியது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டிரைவர், கண்டக்டர் தேர்வு செய்யும் பணியில் ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் தான் இப்போது கைதும் செய்யப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.
நேரடியாக போக்குவரத்து துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் போராடினர். இந்த நேரத்தில் திமுகவினர் போக்குவரத்து துறை அமைச்சரைக் கண்டுபிடித்தால் 10 லட்சம் பரிசு என போஸ்டர் ஒட்டி நெருக்கடியை அதிகப்படுத்தினர்.
ஜெயலலிதாவுக்காக அங்கபிரதேக்ஷனம் செய்யும் போதே அடுத்த முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தவும் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
நில அபகரிப்பு புகாரில் திமுக எம்.எல்.ஏக்களை ஜெயலலிதா அரசு வளைக்க அதிலும் அக்யூஸ்டாக அடிப்பட்டது செந்தில் பாலாஜியின் பெயர்.
கரூர் கோட்டையில் செந்தில் பாலாஜிக்கு முக்கிய தளபதியாக இருப்பவர் தம்பி அசோக். கரூரில் நடக்கு ஒவ்வொரு அசைவையும் ஸ்கேன் செய்துவந்தார். அதுமட்டும் அல்லாமல் போக்குவரத்து துறையிலும் மூக்கை நுழைத்தார். செந்தில் பாலாஜிக்கு திமுக ஆட்சியில் மதுவிலக்கு துறை கொடுக்கப்பட்டபோது அசோக் கைக்காட்டும் நபருக்குத் தான் காண்டிராக்ட் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டி எழுந்ததுன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேர்தலுக்கு முன்னர் மணல் கொள்ளை போராட்டத்தை கையில் எடுத்து ஜே.சி.பி முன்னெல்லாம் விழுந்து புறண்ட செந்தில் பாலாஜி. தேர்தலின் போது கேசி பழனிசாமிக்கு எதிரா வாய் திறக்கல.
அரவக்குறிச்சி தொகுதியில் கேசி பழனிசாமியை எதிர்த்து நின்ற அதிமுக பிரமுகர் செந்தில்நாதன் வெற்றி பெற்றால் தனது அமைச்சர் பதவிக்கு போட்டியாக இருக்கும் என எண்ணி தேர்தலில் சொந்த கட்சியைச் சேர்ந்த செந்தில்நாதனை தோற்கடிக்க செந்தில் பாலாஜி வேலைகள் பார்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து அவரது பதவியை பறித்தது.
சசிகலா, இளவரசி குடும்ப ஆதரவின் பெயரில் மீண்டும் எம்.எல்.ஏ சீட்டை பிடிக்கிறார் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓபிஎஸ்-யிடம் நெருக்கமான உறவு இல்லாததால் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் ஆட்சிக்கு எதிராக இருந்த எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால பதவியை இழந்தார் செந்திபாலாஜி.
அடுத்ததாக அமமுகவில் தினகரனுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 24 டிசம்பர் 2018ல் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் செந்தில் பாலாஜி.
இதே கரூர்ல மேடை போட்டு செந்தில் பாலாஜி ஊழல் தண்டவாளங்கள் பட்டியல்போட்டு கிழ்ச்சிட்டு இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் அவர் திமுக-வுக்கு வந்தப்போ, “ லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிங்க. நல்ல உழைங்க. உழைச்சா நிச்சயம் பலன் கிடைக்கும்னு” சொன்னாரு. அடுத்த 47-வது நாளே கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்குது. செபாவின் தொல்ல தாங்காம திமுக வந்த சின்னசாமிய திரும்பவும் அதிமுக-வுக்கு ஓடவச்சாரு.
கரூர் திமுக செந்தில் பாலாஜி கைக்குள்ள வந்தது. அவருக்கு எதிராக அரசியல் செஞ்ச எல்லாரையும் ஓரமா உக்காரவச்சாரு. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஜோதிமணி வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்தார்.
செந்தில் பாலாஜி ஆதிக்கத்தால கடந்த 3 தேர்தல்கள்லயும் கரூர்ல தோற்கடிக்கப்பட்ட திமுக 2021 தேர்தலில் ஜெயிச்சு காட்டியது. பரம்பரை திமுக உறுப்பினர்களுக்கு கிடைக்காத படி 3 முக்கிய துறைகளில் அமைச்சர் பதவி செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது.
என்னதான் செந்தில்பாலாஜியுடைய வளர்ச்சி திமுக காரங்ககிட்ட புகைச்சல ஏற்படுத்தினாலும் கட்சி தலைமையுடனும் அவர்களுடைய குடும்பத்தினருடையும் நெருக்கமா இருக்கிறதால எந்த பொல்லாப்பும் இல்லை செந்தில் பாலாஜிக்கு.
எப்பப்ப விசுவாசத்தைக் காட்டணும் எப்ப யாரைக் கவுக்கணும் எல்லாம் தெரிஞ்வர் செந்தில் பாலாஜி. தன்னுடைய பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர். இப்போது அவர் சிக்கியிருக்கும் புதிய பிரச்னையையும் சமாளித்து வருவாரா? அல்லது இது அவரது கடைசி அத்தியாயமாக இருக்குமா எனப் பொருந்த்திருந்து பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust