
பாரத ரத்னம் லதா மங்கேஷ்கர் மரணம்: வாழ்க்கை வரலாறு
NewsSense
பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கோவிட் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
லதா மங்கேஷ்கர் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதித் சம்தானி, " லதா அவர்கள் கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்ததால் இன்று காலை 8.12 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது", என்று தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக , பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த 2 நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
யார் இந்த லதா மங்கேஷ்கர்…. அவர் மரணத்திற்கு இந்தியாவே கலங்குவது ஏன்?
1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.
இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். இதுவே மெல்ல அவர் பெயராகவும் மாறிப் போனது.
இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.
NewsSense
1940ல் தொடங்கி 2014வரை ஆஷா போஸ்லே, சுரையா, ஷம்ஷாத் பேகம், உஷா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபி, முகேஷ், தலத் மஹ்மூத், மன்னா டே போன்ற பல பாடகருடன் இணைந்து டூயட் பாடியுள்ளார். 4 தலைமுறைகளை கடந்த பாடகி என்ற பெருமை லதா மங்கேஷ்கருக்கு உண்டு. கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.
NewsSense
எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.
முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் எட்டு இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
1999 - 2005 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர்.