எம் எம் கீரவாணி, மரகாதமணி, எம் எம் கரீம்... 2023 ஆம் ஆண்டில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
நீங்கள் தவறாகச் எழுதியுள்ளீர்கள், நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் வென்றது எம் எம் கீரவாணி தான், மரகதமணியோ, எம் எம் கரீமோ அல்ல.
இப்படித் தான் பெரும்பாலான இந்தியர்கள் கூறுவர். கொஞ்சம் சினிமாவை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு எம் எம் கீரவாணியும், மரகதமணியும் ஒன்று என்பதை அறிந்திருப்பார். ஆனால் எம் எம் கரீம் என்கிற பெயரும் எம் எம் கீரவாணியைத் தான் குறிக்கும் என்பது நம்மில் பலரும் அறியாத கதை.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொவ்வூரில் பிறந்த மரகதமணி கீரவாணி, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ரகத்தைச் சேர்ந்தவர். 4 - 5 வயதில் வயலின் கற்றுக் கொள்ள தொடங்கியவர், தன் தந்தை மூலம் ஹார்மோனியத்தை வாசிக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.
கீரவாணியின் தந்தை ஒரு ஓவியர், இசையமைப்பாளர், மும்பையின் சர் ஜே ஜே கலைப் பள்ளியில் படித்தவர். பத்து வயதிலேயே காக்கிநாடாவைச் சேர்ந்த பிராணலிங்கம் டிரூப்போடு கச்சேரிகளுக்காக மேடை ஏறத் தொடங்கிவிட்டார்.
தொடக்கத்தில் பல இசையமைப்பாளர்களைப் போல, மற்ற பிரபல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். அன்று தெலுங்கு மொழி சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த கீ சக்கரவர்த்தியிடமும், மலையாள உலகில் பிரபலமாக இருந்த சி ராஜாமணி அவர்களிடமும் 1987 வாக்கில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
இசையமைப்பாளருக்கு உதவியாக இருந்த காலத்தில், ஒரு ஆண்டில் சுமார் 75 - 90 படங்கள் எடுக்கப்பட்டன. அதில் சுமார் 90% படங்கள் சக்கரவர்த்தி அவர்களிடமே இசைக்கு வரிசைகட்டி நின்றன. எனவே, 365 நாளும் கீரவாணிக்கு இசையமைக்கும் பணி இருந்தது. விடுமுறை என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது அவரை ஒரு வணியாக ரீதியிலான இசையமைப்பாளராக உருவெடுக்க உதவி இருக்கலாம்.
திரும்பத் திரும்ப தெலுங்கு படங்களுக்கு இசையமைப்பது, அதுவும் ஒரே ஆண்டில் சுமார் 70 படங்களுக்கு இசையமைப்பது, ஒருவித வட்டத்துக்குள் தன்னை அடைப்பதாக கீரவாணி உணர்ந்தார். அது தான் அவரை இந்தி இசை நோக்கித் தள்ளியது.
கல்கி என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் பல்வேறு காரணங்ககளால் வெளியாகவே இல்லை. 1990 ஆம் ஆண்டு "மனசு மமதா" என்கிற தெலுnக்கு மொழிப் படம்தான் எம் எம் கீரவாணியின் முதல் படமாக அமைந்தது. தெலுங்கு மொழிப் படங்களுக்கு அவர் பெயர் எம் எம் கீரவாணி.
1991 ஆம் ஆண்டு, ராம் கோபால் வர்மா "க்ஷனா க்ஷணம்" என்கிற பெயரில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து எடுத்த படத்துக்கு எம் எம் கீரவாணி தான் இசை. அது தான் அவரை தெலுங்கு சினிமா உலகில் ஒரு பெரிய உச்சத்துக்கு கொண்டு சென்றது.
கீரவாணி ஸ்டீஃப்ன் கிங்கின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ராம் கோபால் வர்மா, அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்ததாகக் சில வலைதளங்கள் குறிப்பிடுகின்றன. "உங்களுக்கு ஸ்டீஃப்ன் கிங் பிடிக்கும் என்றால், நாம் இணைந்து வேலை பார்க்கலாம்" என ராம் கோபால் கூறினாராம்.
அதே ஸ்டீஃப்ன் கிங்கைப் பார்த்து தான், தனக்கு 3 புனைப் பெயர்களை வைத்துக் கொண்டதாகவும் ஊடகங்களிடம் கூறியுள்ளார் கீரவாணி. அதே ராம் கோபால் வர்மா தான் கண்ணில் படும் படங்களுக்கு எல்லாம் இசையமைக்க வேண்டாமென கீரவாணிக்கு அறிவுரை கூறினார்.
ஆனால், 30 பேர் கொண்ட பெரிய குடும்பம் என்பதால் அவருக்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் கீரவாணியால் தட்டிக் கழிக்க முடியவில்லை. ராஜமெளலி, அவரது தந்தை விஜேந்திர பிரசாத் என எல்லோரும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள். அத்தனை பேரின் நலனுக்காகவும், அத்தியாவசியத் தேவைக்காகவும் கிடைத்த எல்லா படங்களுக்கும் இசையமைத்தார் கீரவாணி.
1991 ஆம் ஆண்டு மம்முட்டி, பானு பிரியா, மது பாலா ஆகியோர் இணைந்து நடித்த, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அழகன்" என்கிற தமிழ் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு மரகதமணிக்கு கிடைத்தது. தெலுங்கு & கன்னட மொழிப் படங்களில் எம் எம் கீரவாணியாகப் பெயர் எடுத்தவர் தான், நம் தமிழ் & மலையாள மொழிப் படங்களில் மரகதமணியாக ஜொலித்தார்.
கீரவாணி அவர்களுக்கு இந்தி பாடல்கள் மீது, குறிப்பாக இந்தி இசையமைப்பாளர் ஆர் டி பர்மன் பாடல்கள் மீது அலாதிப் பிரியம் ஏற்பட்டது. இந்தி பாடல்களை விரும்பிக் கேட்டார். இந்தி உலகிலும் ஒரு ரவுண்ட் போய் வார விரும்பினார். காலம் அவருக்கு 1994ஆம் ஆண்டு "கிரிமினல்" என்கிற படத்தின் மூலம் வாய்ப்பு வழங்கியது.
மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், அவர் இசையைக் குறித்து பரவலாக பேச வைத்ததே தவிர, எம் எம் கரீம் என்கிற பெயரில் இசையமைத்திருந்த எம் எம் கீரவாணியைக் குறித்து பரவலாக வெளியே தெரியவில்லை.
இருப்பினும் இந்தி சினிமாவில் அவ்வப்போது வாய்ப்புகள் வந்தன. அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு 'Tu Mile Dil Khile', 'Gali Mein Chand' and 'Jaadu Hai Nasha போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்தது சாட்சாத் எம் எம் கரீமே.
எம் எம் கீரவாணி ஒரு தீவிர சிவ பக்தர். சந்தேகம் என்றால் பாகுபலி படத்தில் இடம்பெற்ற "சிவ சிவாய போற்றியே.." பாடலை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள்.
வாழ்க்கையில் புதிய உச்சங்களைத் தொட, அல்பாயிஸில் மரணத்தைத் தழுவாமல் இருக்க, குறைந்தது 1.5 ஆண்டு காலமாவது சந்நியாசியைப் போல் வாழ, கீரவாணியின் குரு அறிவுறுத்தினார். அதை சிரமேற்கொண்டு அடுத்த பல மாதங்களுக்கு ஒரு சாமியாரைப் போலவே வாழ்ந்தார்.
உணவு, தூக்கம், பயம், சுற்றித் திரிவது, உடலுறவு போன்ற அடிப்படை விஷயங்கள் தான், மனிதர்களுக்கும் மிருக்கங்களுக்கும் இருக்கும் ஒத்த பண்புகள். அது போன்ற விஷயங்களுக்கு நான் கட்டுண்டவன் என அவரே கூறியதாக பிலிம் கம்பெனியன் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமோஜி ராவைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ இவருடைய ராமோஜி பிலிம் சிட்டி தான். ராமோஜிக்கு கீரவாணியின் இசை மிகவும் பிடித்ததால், தான் தயாரித்த பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
காலப்போக்கில், ஒரு படத்தின் இயக்குநருக்கும், கீரவாணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் படத்திலிருந்து விலக விரும்பினார். இது ராமோஜியை வருத்தமடையைச் செய்தது. கீரவாணி செய்தது தொழில் ரீதியில் சரியல்ல என்றும் கருதினார் ராமோஜி.
எனவே, எம் எம் கீரவாணியைப் போல, புதுவகையான இசையமைக்கும் எம் எம் கரீம் என்பவரை, எம் எம் கீரவாணிக்கு பதில் அழைக்க இருந்ததாகவும், ராமோஜியின் உதவியாளர், இருவரும் ஒரே நபர் தான் என விளக்கியதாகவும் சில கதைகள் உலவுகின்றன.
அதே போல பாடலாசிரியர் நிதா ஃபஸ்லி எம் எம் கரிமோடு பணியாற்றியவர். அவர் சென்னைக்கு வந்து கரீமை சந்தித்துவிட்டார், ஆனால் அவரால் கீரவாணியைச் சந்திக்க முடியவில்லை. பிறகுதான் இருவரும் ஒரே நபர் என்பதை தெரிந்து கொண்டார்.
2015 ஆம் ஆண்டு இந்தியத் திறையுலகமே ஒரு படத்தை மட்டும் உற்றுப் பார்த்தது. அந்தப் படத்துக்காக செய்யப்பட்ட பொருட் செலவு, நடிக்கும் நடிகர்கள், கதைக் களம், வெளியிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை என எல்லாமே தலைப்புச் செய்திகளாயின. அப்படத்தின் பெயர் பாகுபலி.
எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்த எம் எம் கீரவாணி என்பவர் யார்? அவர் எப்படி இருப்பார் என, அவரை கூகுள் செய்து ஒரு தலைமுறை தேடியது. முதல் பாகத்தில் வெளியான பாகுபலியின் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் எல்லமே நம்மை மகிழ்மதிக்குள் அழைத்துச் செல்லும் ரகம்.
இப்போது நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். இனி, இந்திய இசை என்றால், கருப்பு உடையணிந்து, முகம் முழுக்க சிரிப்போடு, கண்ணில் மின்னும் ஒளியோடு இருக்கும் எம் எம் கீரவாணி (எ) மரகாதமணி (எ)எம் எம் கரிமை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust