ஒவ்வொரு உலக நிகழ்வும் ஒரு பிரமாண்டாமான தயாரிப்புடன்தான் துவங்க வேண்டுமென்பதில்லை. ஒரு தேநீர்க்கடையின் வாசலில் கூட அது துவங்கலாம். மணி ஹெய்ஸ்ட்-ஐ பொருத்தவரை அந்த இடம் பனாமா கடற்கரையாக இருந்து. படைப்பாளியான அலெக்ஸ் பினா அங்கே படுத்துக் கிடந்தார். தனது அடுத்த திட்டத்தைப் பற்றி அசை போட்டுக் கொண்டிருந்தார். அந்தத் திட்டம் தனது வாழ்வையே புரட்டிப் போடுமென்பது அப்போது அவருக்குத் தெரியாது.
2016-ம் ஆண்டில்தான் அவர் விஸ் எ விஸ் எனும் பெண்கள் சிறைச்சாலையில் நடக்கும் கொடூரமான வாழ்க்கை குறித்த தொடரை முடித்திருந்தார். இனி அடுத்த திட்டம் என்ன? பினாவின் மனதில் கடலின் அலையோடு ஒத்திசைந்து கருத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தன.
அடுத்த முயற்சியானது எளிமையாக இருக்க வேண்டும், தயாரிப்பதற்கு அதிக செலவில்லாமல் இருக்க வேண்டும். அதிகம் அவுட்டோர் காட்சி இல்லாமல் ஸ்டூடியோவிற்குள்ளே நடக்குமாறு இருந்தால் நல்லது. அதே நேரம் நான்கு சுவர்களுக்குள் நடந்தாலும் நீங்கள் மறக்க முடியாத வண்ணம் அந்தக் கதை வெடிக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும். இதெல்லாம் பினாவின் முதல் கட்ட சிந்தனைகள். இவை எப்படி சாத்தியமாகும் என்றெல்லாம் யோசித்த பினாவின் சிந்னையில் பளிச்சென ஒன்று தோன்றியது.
திருட்டு என்பது அடிப்படையில் ஒரு குற்றம். ஆனால் உலகெங்கிலும் திருட்டு பற்றிய புனைவுகள் அது நாவலாக இருந்தாலும் சரி திரைப்படங்களாக இருந்தாலும் சரி அவற்றின் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. ஏன்?
வரலாற்று ரீதியாக விவசாயச் சமூகமாக இருக்கும் போது கூட திருட்டு என்பது இருந்தது. ஆனால் அப்பொது திருட்டு குறித்து இப்போது இருப்பது போல ஒரு ஒழுக்கவாதக் கண்ணோட்டம் இல்லை. ஏதுமற்ற நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அது தொழிலாக இருந்த்து. அரபுக் கொள்ளையர்கள், கரீபியன் கடற் கொள்ளையர்கள, கொள்ளையடிப்பதற்காகவே படையெடுக்கும் மங்கோலியர்கள் போன்றோரும் உண்டு.
இன்னொரு புறம் நம் தமிழ்நாட்டின் செம்புலிங்கமாக, மம்பட்டியானாக இருந்தாலும் சரி இங்கிலாந்தின் ராபின் ஹூட்டாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லாம் பணக்கார்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தனர். அமெரிக்காவில் கௌபாய் வரிசை படங்களைப் பார்த்திருப்போம். அதுவும் வாழவழியற்ற உதிரிக்கூட்டம் இரக்கமற்று துப்பாக்கி மூலம் வழிப்பறி செய்யும் வேலையைச் செய்தது.
18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி பின்னர் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்காவிற்கு சென்றது. தொழிற்துறை நகரங்கள் தோன்றின. கிராமங்களிலிருந்து விவசாயிகள் கூட்டம் கூட்டமாக நகரத்திற்கு இடம் பெயர்ந்தனர். தொழிலாளி வர்க்கம் தோன்றியது. கூடவே வேலையற்ற அல்லது கிடைத்த வேலையைச் செய்யும் உதிரிப் பாட்டாளி வர்க்கமும் தோன்றியது. நகரங்களில், இருப்போர் இல்லதோர் ஏற்றத்தாழ்வு பிரம்மாண்டமாக வளர்ந்தது.
1858-ம் ஆண்டு புகழ் பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் ஆலிவர் ட்விஸ்ட் என்ற நாவலை எழுதினார். 20-ம் நூற்றாண்டில் இந்நாவல் பலமுறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கதையில் அனாதைச் சிறுவன் நகரத்திற்கு வந்து பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு குழுவிடம் சிக்கிக் கொள்வான். படத்தில் சிறுவர்கள் நயமாகவும் நேர்த்தியாகவும் பிக்பாக்கெட் அடிப்பார்கள். இந்நாவலில் நவீன இலண்டன் மாநகரத்தின் வெளிச்சமான மற்றும் இருண்ட பக்கங்களை டிக்கன்ஸ் காட்டியிருப்பார். இன்றும் ரசிக்கக்கூடிய படமது. அதன் பிறகு வங்கி வளர்ச்சி மற்றும் தொழில்துறை அறிவியல் புரட்சி ஏற்பட்ட பிறகு திருட்டு என்பது நவீன மயமாகி விட்டது.
இன்று கணினியில் ஹேக் செய்து திருடுகிறார்கள். பங்குச்சந்தையில் விதிமுறைகைள ஏமாற்றி நடக்கும் அறிவுத் திருட்டு நடக்கிறது. அரசு அதிகாரிகள் நிறுவனங்களிடம் லஞ்சம் பெறுகிறார்கள். அகதிகள், ஏழைகள் சூப்பர் மார்க்கெட் முதல் சில்லறைக் கடைகள் வரை திருடுகிறார்கள். திருட்டில் கூட ஏழைத் திருட்டு, பணக்காரத் திருட்டு என்று பேதம் இருக்கிறது.
திருட்டு ஒரு குற்றம் என்றாலும் மக்கள் அதை ரசிப்பதற்கு காரணம் இன்றைய சமூகம் வாழ்க்கை வசதி அடிப்படையில் பெருமளவு ஏற்றத் தாழ்வாக பிரிந்திருப்பதுதான். எனவே தான் திருடக் கூடாது என்று நினைக்கும் நடுத்தர வர்க்கமும் கூட இந்த திருட்டு படங்களை ரசிக்கிறது. தன் வாழ்வில் இல்லாத ஒன்று மற்றவரிடமாவது நிறைவேறட்டுமே என்ற நப்பாசைதான். ஆகவே நாம் திருட மாட்டோம். ஆனால் திருட்டு குறித்த படங்களை ரசிப்போம்.
ஆகவே அலெக்ஸ் பினா திருட்டு குறித்த ஒரு படத்தை எடுக்க நினைத்தில் வியப்பில்லை. ஆனால் இந்த வகைப்படங்களுக்கு உலகெங்கும் போட்டி இருந்தன. அந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் மெனக்கெட வேண்டும்.
பினா மனதில் ஒரு மின்னல் கீற்று பளிச்சிட்டது. உடனே அவர் படைப்பாளிக் குழு உறுப்பினர்களுடன் உற்சாகமாக களத்தில் இறங்கினார். கதைப்படி இந்த திருட்டு ராயல் மின்ட் ஆப் ஸ்பெயின் எனப்படும் ஸ்பெயினின் அதிகாரப்பூர்வ செலவாணி நோட்டுகளை அச்சடிக்கும் இடத்தில் நடக்கிறது. அதனால் கதையை ஒரு ஸ்டுடியோவிலேயே செலவின்றி எடுத்துவிட முடியும். பணம் அச்சிடப்படும் இடத்தில் கொள்ளையர்கள் நுழைந்து அங்கே பணிபுரிவோரை பணையக் கைதிகளாக பிடித்து விட்டு பில்லியன் கணக்கிலான யூரோ பணத்தை அச்சடிப்பதுதான் கதையின் ஒன்லைன்.
சரி இதில் பாத்திரங்களில் யார்? மணிஹெயிஸ்ட் தொடரில் நீங்கள் அதிகமும் மனதைப் பறிகொடுத்த ஒரு பாத்திரம் ப்ரொஃபஸர். இந்த பேராசிரியர் மூக்குக் கண்ணாடியை அவ்வபோது சரிசெய்து கொண்டு நிதானமாக இந்த திருட்டு குறித்த திட்டங்களை ஒரு கவிதை போல காவியம் போல விவரிப்பார். அவர் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த திருடர்களை தன் குழுவில் இணைக்கிறார். அவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நகரத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இந்தப் பெயர் சூட்டல் கூட தற்செயலாக நடக்கிறது. டோக்கியோ, ரியோ, பெர்லின், மாஸ்கோ, நைரோபி, ஹெல்சிங்கி, மற்றும் டென்வர். இப்படி உலகெங்கும் உள்ள நகரங்களின் பெயர் வைத்தால் அது உலகச்சந்தைக்கு உதவியாக இருக்கும் என்பதெல்லாம் அலெக்ஸ் பினாவின் மனதில் இல்லை.
அதன்பிறகு காஸ்ட்யூம். முழு உடலையும் மறைக்கக் கூடிய கண்ணைப் பறிக்கும் சிவப்புக் கவச உடை. முகத்தில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் ஓவியரான சல்வடார் டாலியின் முகமூடி. இவை கச்சிதமாக பாத்திரங்களுக்கு பொருந்துவது மட்டுமல்ல பரந்துபட்ட ரசிகர்களை ஈரக்க கூடிய ஒன்றாகும்.
இறுதியில் லா காசா டி பாபெல் எனும் மணி ஹெய்ஸ்ட்டின் ஸ்பானிஷ் மூலம் ஆன்டெனா 3 எனும் ஸ்பெயின் டிவி-யில் 2017-ம் ஆண்டில் வெளியானது. முதல் சீசன் உண்மையிலேயே கொஞ்சம் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இரண்டாவது சீசன் தோல்வியடைந்து. தொடரின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் உடமைகளை கட்டி முடித்து வீட்டிற்கு திரும்பினர்.
அலெக்ஸ் பினாவிற்கு பெருத்த ஏமாற்றம். உலகளவில் இன்று மாபெரும் வெற்றி பெற்ற மணி ஹெயிஸ்ட், உள்ளூரில் போனியாகவில்லை. அடுத்து என்ன நடந்தது? உள்ளூரில் போனியாகாத ஒன்று உலக அளவில் ஹிட்டானது எப்படி? இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust