ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் `ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ இரண்டாம் பாகத்தில் இருந்து புவி விலகிவிட்டதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். தற்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையில் அவருக்கு மிகப்பெரிய திரைப்பட வாய்ப்பு ஒன்று தட்டி போய்விட்டதாக வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார் புவி.
ஜீ தமிழின் பிரபல நெடுந்தொடர்கள் ``ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’’, ``அழகிய தமிழ் மகள்`` ஆகியவற்றில் நாயகனாக நடித்தவர் புவியரசு. மானாட மயிலாட, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிரபலமானவர். கோவையை பூர்வீகமாக கொண்ட புவி தடகள போட்டிகளிலும் ஆர்வம் கொண்டவர். தன் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட புவி, தான் 23 நாட்களில் 15 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.இந்த பதிவில்,``23 நாட்களில் 81 கிலோவிலிருந்து 66 கிலோவாக எடை குறைத்துள்ளேன்... நான் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக, 23 நாட்களில் 15 கிலோ எடை குறைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு தட்டி போய்விட்டது.. இருந்தாலும் பரவாயில்லை, எடை குறைந்து ஃபிட்டாக இருப்பதில் எனக்கு முழு திருப்திதான். இந்த கடுமையான உடற்பயிற்சி நாட்களில், எடை குறைப்புக்காக என் பொறுமை , சகிப்புத்தன்மை , கோபம் , விரக்தி போன்ற குணநலன்களில் மாற்றங்களை கண்டேன். என் உடலும் மனமும் புத்துயிர் பெற முடிந்தது , ஒரு நாளைக்கு 18 கி மீ நடைபயிற்சி .... எந்த சூழ்நிலையிலும் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கடந்த சில நாட்களில் நான் கற்றுக்கொண்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.. சினிமா வாய்ப்பு தட்டி போனதில் அப்சட்டில் இருந்த புவிக்கு மீண்டும் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
வித்யா நம்பர் 1 தொடரில், யூ டியூபர் இனியனுக்கு பதில் புவி நாயகனாக நடிக்கவுள்ளார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது மிகப் ;பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இனியனுக்கு காலில் அடிபட்டதால் சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இனியன் 5 நாட்கள் முன்னர் கூட நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். ஆரம்பம் முதலே வித்யா நம்பர் 1 தொடரில் இனியனின் நடிப்பு சுமாராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். புவி-க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், டி.ஆர்.பி-யில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் வித்யா நம்பர் 1 தொடரின் ரேட்டிங் இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.