சுமார் 41,000 அடி உயரத்தில் ஒரு பயணிகள் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. போய்ச் சேர வேண்டிய விமான நிலையத்திற்கு இன்னும் பாதி தூரம் இருக்கிறது. திடீரென எரிபொருள் இன்னும் சில நிமிடங்களில் தீரப்போகிறது எனத் தெரிய வந்ததும் விமானி திகைத்துப் போகிறார்.
இத்தனைக்கும் விமானம் கிளம்பும்போது, போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு தேவையானதைக் காட்டிலும் கூடுதலான எரிபொருள் நிரப்பி விட்டதாக விமான நிலைய ஊழியர்கள் உறுதிப்படுத்திய வழக்கமான நடைமுறைகளுக்குப் பின்னர்தான், பைலட் விமானத்தைக் கிளப்பினார்.
அப்படியிருக்கையில், எரிபொருள் எப்படி தீர்ந்துபோனது என விமானி திகைத்துப் போகிறார். கூட இருக்கும் துணை விமானியிடம் கேட்க, அவரும் " அதான் பாஸ் எனக்கும் புரியல" எனப் பீதியுடன் சொல்கிறார்.
அருகில் தரை இறங்குவதற்கு எந்த விமான நிலையமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அருகில் தோதாக இருக்கக்கூடிய எந்த ஒரு இடத்திலும் விமானத்தை அவசரமாக தரை இறக்கியே தீர வேண்டும்.
மேற்கொண்டு யோசிக்க அவகாசமில்லை. தலைமை விமான பணிப்பெண்ணை அவசரமாக தனது காக்பிட்டுக்குள் அழைத்த பைலட், நிலைமையை விளக்கி, எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சொல்கிறார்.
தகவலைக்கேட்ட பணிப்பெண், பீதியில் உள்ளுக்குள் உறைந்து போகிறார். ஆனாலும், முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் "எஸ்... கேப்டன்!" எனச் சொல்லியபடியே காக்பிட்டிலிருந்து அவசரமாக வெளியேறி, சக ஊழியர்களிடம் தகவலைச் சொல்லி அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை முடுக்கி விடுகிறார்.
அதே சமயம், பயணிகளிடம் விஷயத்தை முழுதாக போட்டு உடைத்து அவர்களைப் பீதியடையச் செய்துவிடக் கூடாது என்பதற்காக, " ஒரு அவசரம்... விமானம் எப்போது வேண்டுமானாலும் தரை இறங்கலாம்... எனவே இருக்கை அருகில் இருக்கும் உங்கள் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்துகொள்ளுங்கள்... தொடர்ந்து நாங்கள் சொல்லும் இன்ஸ்ட்ரக்சனை ஃபாலோ செய்யுங்கள்" எனப் பயணிகளை அலர்ட் செய்து, தயார்படுத்தத் தொடங்கினார்கள் விமானப் பணிப்பெண்கள்.
விஷயத்தைக் கேட்டதும், பயணிகள் பீதியுடன் ஒருவருக்கொருவர் " என்ன... ஏது...?'' என்று கேட்டுக்கொண்டே, குடும்பத்தினரை நினைத்துப் பார்த்து, கடவுளை வேண்டத்தொடங்கினர்.
அதே சமயம் காக்பிட்டுக்குள், விமானத்தை இயக்கியபடி மேப்பை பார்த்துக்கொண்டே விமானத்தை தரை இறக்க வேண்டிய லொகேஷனை தீவிரமாக தேடிய பைலட்டின் முகத்தில் திடீர் வெளிச்சம். ஒரு கார் பந்தய மைதானம், அருகில் இருப்பது தெரியவருகிறது
"இனி யோசிக்க வேண்டியதில்லை... விமானத்தை தரை இறக்கிவிட வேண்டியதுதான்...'' என முடிவு செய்த பைலட், அதற்கான வேலையைத் தொடங்கினார்.
அந்த சமயத்தில், நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல், உள்ளூர் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்று செய்திருந்த ஏற்பாட்டின் பேரில் நடக்க இருந்த கார் ரேஸில் கலந்துகொள்ள வந்த வீரர்களது குடும்பத்தினர் மற்றும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது அந்த மைதானம். இன்னொருபுறம் ரேஸ் வீரர்கள் ஆங்காங்கே தங்களது காரை ''உர்ரும்... உர்ரும்...'' எனத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்தாலும் வேறு வழி இல்லை என்பதுபோல் விமானத்தை தரை இறக்கினார் விமானி. ஆனால், தரை இறங்கிய விமானம் வழக்கம்போல் இறங்கவில்லை. தரையில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி இறங்க அழுத்தம் கொடுக்கும் ஹைட்ராலிக் பிரஷர் ( Hydraulic pressure) இல்லாமல் இறக்கப்பட்டதால், விமானத்தின் மூக்குப்பகுதியின் லேண்டிங் கியரை முழுமையாக தரையைத் தொட வைக்க முடியாமல் போனது. இதனால் மூக்குப்பகுதி நேராக பயங்கர சத்தத்துடன் தரையில் மோதியதில், தீப்பொறிகள் திசையெங்கும் பறந்தன. இன்னொரு பக்கம் விமானத்தின் வால் பகுதி சுமார் 3 மாடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியது போன்று காட்சியளித்தது.
இவற்றையெல்லாம் பார்த்த மைதானத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூக்குரல் எழுப்பியபடியே, அலறி அடித்து ஓடினர்.
ஆனாலும் அங்கு இருந்த ரேஸ் வீரர்கள் சுதாரித்துக்கொண்டு, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பான் கருவிகளை எடுத்து, விமானத்தின் மூக்குப்பகுதியிலிருந்து கிளம்பிய தீயை அணைத்தனர்.
அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு படை வீரர்கள், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிக்கு உதவினர். அதற்கு முன்னதாகவே விமானத்தின் பின்பக்கம் உள்ள அவசரப் பகுதி வழியாக வெளியேற்றப்பட்ட பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எல்லாம் சரி... இந்த சம்பவங்களெல்லாம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது, எந்த விமானத்தில் நடந்தது என்று சொல்லவில்லையே...?!
வேறெங்கும் இல்லீங்க... நம்ம கனடாவில்தான். கனடாவுக்குள் இருக்கும் மான்ட்ரீல் - எட்மான்டன் இடையே இயக்கப்பட்ட 'ஏர் கனடா ஃபிளைட் 143' என்ற உள்ளூர் பயணிகள் விமானத்தில்தான் இந்தக் கூத்தெல்லாம் நடந்தது. 'Gimli Glider'என அழைக்கப்பட்ட இந்த விமானம், மிக நீண்ட இறக்கைகளுடன், இன்ஜின் இல்லாமல் இயங்கும் இலகு ரக விமானம். அதனால்தான் பெரிய விபத்து எதுவும் நடக்கவில்லை.
சம்பவம் நடந்த நாள் - 1983, ஜூலை 23.
விமானம் அவசரமாக லேண்டிங் ஆன இடம், கனடாவில் உள்ள ஜிம்லி ( Gimli) என்ற இடத்தில் உள்ள கார் ரேஸ் மைதானம்.
இருக்கட்டும்... விமானத்தில் பாதியிலேயே எரிபொருள் எப்படி தீர்ந்துபோனது எப்படி, என்ன காரணம்?
சிம்பிளா சொல்லணும்னா விமானத்தில் எரிபொருள் நிரப்புவதில் நடந்த தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம்.
சம்பவம் நடந்த உடன், " எரிபொருள் அளவீட்டைக் காட்டும் fuel gauge சரிவர வேலை செய்யாமல் போனதால்தான் எரிபொருள் பாதி மட்டுமே நிரம்பிய நிலையில், முழுவதும் நிரம்பிவிட்டதாக காண்பிக்கப்பட்டிருக்கலாம்'' என நிபுணர்கள் சொன்னார்கள்.
ஆனால், அதற்கு பின்னர் நடந்த தொடர் விசாரணையில்தான் தெரியவந்தது, தவறுக்கு வேறு காரணம் என்பது. அந்த விமானத்தின் எரிபொருள் அளவு எவ்வளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் கம்ப்யூட்டர் அமைப்பு சரிவர வேலை செய்யவில்லை. இதை அறியாத விமான நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள், அந்த விமானத்துக்குத் தேவையான எரிபொருள், 1.77 பவுண்ட்ஸ்/லிட்டர் என்பதற்குப் பதிலாக, கம்ப்யூட்டர் காட்டிய அளவுக்கேற்ப 0.8 கிலோ/லிட்டர் என்ற கணக்கில் நிரப்பி விட்டனர்.
இதில் சோகம் என்னவென்றால், நடந்த இந்த தவறுக்காக எரிபொருள் நிரப்பிய விமான நிலைய ஊழியர்களுடன் சேர்த்து, விமானத்தை இயக்கிய மிக அனுபவம் வாய்ந்த பைலட் ராபர்ட் பியர்சன், 6 மாத காலத்துக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டதுதான். கூடவே துணை விமானியும் 2 வார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்து ஏறக்குறைய 39 வருடங்கள் ஆகிவிட்டப் போதிலும், எரிபொருள் விஷயத்தில் எப்படி 'அலெர்ட் ஆறுமுகமாக' இருக்க வேண்டும் என்பதில் கனடாவில் பைலட் பயிற்சி மாணவர்களுக்கு இந்த சம்பவம் இன்றும் ஒரு பாடமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust