கடந்த சில வருடங்களில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் புழக்கத்திலிருந்தது வலிமை அப்டேட் என்கிற சொல்லாடல்தான். அந்த அளவுக்கு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது அஜித்குமாரின் வலிமை திரைப்படம்.
போதைப்பொருள் கடத்தல் அதற்காக பைக் திருட்டு, செயின் பறிப்பு என குற்றங்களை செய்யும் கேங்கிற்கும், அதைத் தடுக்க நினைக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் `வலிமை' -யான யுத்தம்தான் வலிமை.
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக அஜித் சார்மிங்காக இருக்கிறார். தனக்குப் பிடித்தமான ஏரியா என்பதால் பைக் சேஸிங் காட்சிகளில் டாப் கியரில் கலக்கியிருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளில் அதிரடி காட்டி, சென்டிமென்ட் காட்சிகளில் கலங்கி என தன் ரசிகர்களுக்காக படம் நடித்திருக்கிறார்.
படத்தின் நாயகியாக ஹியூமா குரேஷி தனக்கான மாஸ் காட்சியில் செமத்தியாக ஸ்கோர் செய்துவிட்டார். டேட்டு வில்லனாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் கார்த்திகேயா கும்மகொண்டா நல்வரவு. எதைப் பற்றியும் கவலைப்படாத இரக்கமற்ற வில்லனாக அசத்தயிருக்கிறார். அஜித்தின் தம்பியாக நடித்திருக்கும் ராஜ் அய்யப்பா, ஐ.ஜியாக நடித்திருக்கும் ஜி.எம் குமார், காவல்துறை அதிகாரிகளான தினேஷ் பிரபாகரன், சைத்ரா ரெட்டி, பியர்ல் மேரி என படத்தில் நடித்த பலருக்கும் சிறிய கதாபாத்திரங்களே.
படத்தின் இயக்குநர்- நடிகர் காமிபினேஷுக்கு சளைக்காத இன்னொரு காம்பினேஷனாக உழைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா - சண்டைப்பயிற்சியாளர் மற்றும் திலீப் சுப்பராயன். படத்தின் பாதிக்கும் மேலாக நிறைந்திருக்கும் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் மிளிர்கிறது அவர்களின் உழைப்பு. படத்தின் இடைவேளையின்போது வரும் சண்டைக்காட்சியும், இடைவேளைக்குப் பிறகான ஹைவேஸ் சண்டைக்காட்சியும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டின. ஆக்சனுக்கு குறைவில்லாத ஒரு போலீஸ் படம் என்றாலும் அது மட்டுமே போதுமா என்ற கேள்வி இரண்டாம் பாதியில் எழுகிறது.
கிராஃபிட்டியைக் ஸ்கேன் செய்து போதைப் பொருள் கடத்தும் கேங்க், அதன் நெட்வொர்க் என விறுவிறுவென சென்ற முன்பாதி திரைப்படம் பின் பாதியில் தொய்வடைகிறது. அம்மா மகன் சென்டிமென்ட் காட்சிகளும், அஜித் பேசும் வசனங்களும் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. தன் முந்தைய படங்களில் கதைக்கும், திரைக்கதைக்கும் அதிகம் ரிசர்ச் செய்திருப்பார் இயக்குநர் வினோத். அந்த டீடெய்லிங்கும், அழுத்தமான காட்சிகளும் படத்தில் மிஸ்ஸிங். அஜித்தின் அம்மாவாக நடித்திருக்கும் சுமித்ராவுக்கும் - அஜித்துக்குமான சென்டிமென்ட் காட்சிகளும்கூட பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
படத்தின் பாடல்கள் சுமார் ரகம். படத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. ஆனால், படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜாவா, ஜிப்ரானா என்கிற சன்பென்சை படத்தின் டைட்டில் கிரெட்டிசிலுமே மெயின்டெயின் செய்திருக்கிறது படக்குழு. ( யாருதான் பாஸ் பின்னணி இசை). போதைப்பொருளுக்கு எதிராக, செயின் பறிப்புக்கு எதிராக காத்திரமாகப் பேசிய வினோத்துக்கு பாராட்டுகள். ஆனால், `இன்ஜினீயரிங் படித்தவர்கள் பிச்சைதான எடுக்கணும்!' என போகிற போக்கில் சொல்லிச் செல்வதும், போலீஸ் அதிகாரி அஜித் குற்றம் சாட்டப்பட்டவரின் கையை உடைத்துவிட்டு வள்ளலார் புத்தகம் கொடுப்பதெல்லாம் புரியவில்லை வினோத். வடமாநிலத் தொழிலாளர் குறித்த வசனங்களையும் தவிர்த்திருக்கலாம். கதைக்கு சம்பந்தமில்லாத இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்து படத்தின் காட்சிகளிலும், திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வலிமையின் `வலிமை' இன்னும் கொஞ்சம் கூடியிருக்கும்