கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜெயமோகன் சேர்ந்து சுட்ட வடையில் பருப்பு "வெந்ததா" என்றால் சிம்பு வேகவைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தென்தமிழகத்தில் இருந்து பம்பாய்க்கு பிழைப்புத் தேடி செல்லும் பல இளைஞர்களில் ஒருவனாக செல்கிறான் முத்து வீரன். யாரையும் எதிர்த்து நிற்கும், எப்போதும் சுதந்திரமாக வாழ நினைக்கும் அவனைச் சென்ற இடமும் சிறையில் அடைக்கிறது. அங்கிருந்து விடுதலை பெற்றானா? இல்லையா? என்பது தான் கதை.
சிம்புவுக்கு பெரிய அளவில் மாஸ், பில்டப் காட்சிகள் இல்லை என்றாலும், அனைத்து ஃப்ரேம்களிலும் தனது ப்ரசன்ஸில் ரசிக்க வைத்திருந்தார். கிராமத்து பையனாக, காதலனாக, ஹீரோவாக, டானாக இதற்கு முன்னும் சிம்புவைப் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் தனித்துவமான வித்தைகளை எடுத்து விட்டிருக்கிறார்.
இளைஞனான முத்துவின் வைராக்கியமிக்க பாத்திரம் நம்மை பிரதிபலிப்பது பெரிய பலம். வயதுக்கும் வேலை செய்யும் இடத்துக்கும் ஏற்றவாரு உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் பெரும் உழைப்பை வழங்கியுள்ள சிம்புவை பாடிலாங்குவேஜிலும் நேடிவ் ஸ்லாங்கிலும் மாற்றாமல் விட்ட அஜாக்கிரதை அப்பட்டமாக தெரிகிறது.
ஜிவிஎம் பட நாயகிகளின் ஸ்பெஷலான மேஜிக்கை சித்தி இத்னானி செய்யவில்லை என்றாலும், அவரது காட்சிகளில் மிக சிறப்பாக நடித்திருந்தார். மலையாள இறக்குமதியான நீரஜ் மாதவ் சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் மிளிர்கிறார். பெரிய டானாக நடிக்க வைக்கப்பட்டிருக்கும் நடிகர்கள் தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
மெதுவான திரைக்கதைக்கு ஆயத்தப்படுத்தியே அழைத்து வந்திருந்தார் இயக்குநர். எவ்வளவு மெதுவாக இருந்தாலும் அதற்கென எந்த நோக்கமும் இல்லாதது இரண்டாம் பாதியில் பெரும் குறை. "இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்" என்ற மனநிலை வருவதை திரையரங்கிலிருந்த யாராலுமே தவிர்க்க முடியவில்லை.
ஜெயமோகனின் வசனங்கள் புதுமையாக இருந்தாலும் படத்துடன் ஒட்டவில்லை. இலக்கியத்தனம் ஓங்கிய வசனங்களில் பாதிக்கு பாதி கூட ஒர்க் ஆகவில்லை. இலக்கியமும் சினிமாவும் கலை என்ற புள்ளியிலேயே இணைகின்றன. வெந்து தணிந்தது காடு கதை அந்த கலைநயத்தை பாதியில் தவறவிட்டுவிட்டது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அசத்தல். பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும் பின்னணி இசையில் சர்பிரைஸ் செய்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக் காட்சியில் வரும் மலையாள rap. சில காட்சிகளில் இசையின் ஆளுமையே மேலோங்கியிருக்கிறது.
ஆகச் சிறந்த பாடல்களை ஆகப் பழைய காட்சிகளால் ரசிக்க விடாமல் செய்து பார்வையாளர்களுக்கு வில்லனாகிறார் ஜிவிஎம்.
கேங்ஸ்டர் கதை எடுக்க கிளம்பிய ஜெயமோகனும் ஜிவிஎம்மும் அரசியல் கள ஆய்வுகள் எதுவுமே செய்யவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இரண்டு கேங்குகள் எதற்காக போட்டிப் போடுகிறார்கள்? எதற்காக சண்டையிடுகிறார்கள் என்பது சில கதாப்பாத்திரங்களுக்கு தெரியாமல் இருப்பது கதையின் சுவாரஸ்யம் என்றாலும் கடைசி வரை அதனை நம்மிடம் இருந்தும் மறைத்து பாதுகாக்க நினைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
மும்பையில் இந்திகாரர்களின் அதிகாரம் என்ன? அங்குள்ள மக்கள் யார் என எதுவுமே கதையில் சொல்லப்படவில்லை. அரசியலில் இருந்து கதை விலகியிருப்பது ஓரளவுக்கு தான் சாத்தியம் என்பதை புரிந்துகொண்டிருக்க வேண்டும். படத்தின் முதல் பாதியில் ஒரே ஒரு காட்சியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளைப் பார்க்க முடிந்தது.
படம் முழுவதுமே சிறப்பான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார் சித்தார்த்தா. குறிப்பாக சண்டைக் காட்சிகள். இடைவேளைக் காட்சியில் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் உச்சத்தை தொட்டிருந்தது. கடைசிகட்ட சண்டைக் காட்சிகளில் சிம்பு ரசிகர்களை விட ஜாஃபர் சாதிக் ரசிகர்கள் அதிகம் எஞ்சாய் செய்தனர்.
பரோட்டா கடையில் வேலை செய்பவர்கள் கட்டும் சாரம், பெரிய தாதா அணியும் சிலுக்கு சட்டைகள் ஆடை வடிவமைப்பில் ஓகே ரகம்.
படத்தின் டைட்டில் கார்டில் இருந்த சுவாரஸ்யம் முதல் காட்சியிலிருந்தே காணாமல் போனது. சின்ன சின்ன காட்சிகள் கைப்பிடித்து கதைக்குள் அழைத்துச் சென்று இடைவேளைக் காட்சியில் வெடித்து கத்த வைத்தது. அங்கேயே முடித்திருந்தாலும், அதிக டீடைல்களுடன் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்கியிருந்தாலும் படம் நாயகன், தளபதி போன்ற படங்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கும்.
படம் கேங்ஸ்டர்களின் மனநிலையை பேசியவகையில் வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும் முத்துவின் மனமாற்றம் கேமிராவால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் முத்துவைச் சுற்றிதான் கதை நகர்ந்தது. வாழ்க்கை முறையை காட்சிபடுத்துவது என்ற முறையிலும் தோற்று நிற்கும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் சிம்பு. அவரின் உழைப்புக்காகவும் ரஹ்மானின் இசைக்காகவும் நிச்சயம் திரையரங்குகளில் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust