யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராமில் கருப்பு டி-சர்ட் மற்றும் லுங்கியுடன் பகிர்ந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் “Dark Dravidian • Proud Tamizhan ” எனத் தலைப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் மோடி மற்றும் அம்பேத்கர் குறித்து இளையராஜா கூறிய கருத்து வைரலான நிலையில் யுவனின் இந்த புகைப்படத்தை அதனுடன் தொடர்புப் படுத்தி கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில்,
சமூக நீதி என்று வரும்பட்சத்தில், பல சட்டங்களைக் கொண்டு வந்தது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு நரேந்திர மோடி சட்டப்பாதுகாப்பை வழங்கியுள்ளார்.
ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு மோடி அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகளில் படித்தேன். இதனால் பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிப்பைத் தொடர முடியும்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சிந்திக்கும் போது, இலவச எரிவாயு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சமூகத்திற்கு அவர் வழங்கியுள்ள செய்திகள் தான் நியாபகத்திற்கு வரும்.
ஆளுமைகளாக, அம்பேத்கரும் நரேந்திர மோடியும் ஒன்றுபடும் இடங்களையும் இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. இருவரும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்ததுடன் அதை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர்கள்.
இருவரும் இந்தியா பற்றி பெரிதாகக் கனவு கண்டவர்கள். செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.
உள்ளிட்ட கருத்துக்களை இளையராஜா எழுதியுள்ளார்.
சமீபத்தில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இளையராஜா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என என்னிடம் தெரிவித்தார். எல்லாரையும் போலவே நானும் கருத்து கூறினேன். அது என்னுடைய சொந்த கருத்து. மோடியையும் பிடிக்கும் அம்பேத்கரையும் பிடிக்கும் அதனால் இருவரையும் ஒப்பிட்டுக் கூறினேன்” என இளையாராஜா அவரிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் யுவன் தன்னுடைய அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
முன்னதாக ‘இந்தி தெரியாது போடா’ டி-சர்ட் போன்ற டிரவிடியன் ஸ்டாக் ட்ர்களில் யுவனின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.