பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு, உருளைக்கிழங்கு. ஆனால், அது வாயுவை உடலில் உருவாக்கும் எனப் பயந்து பலரும் இதை விரும்பினாலும்கூடச் சாப்பிடுவதில்லை. வாயு உடலில் உருவாகிறதா? அல்லது உணவில் வாயு இருக்கிறதா? வாழைக்காய் பல மருத்துவக் குணங்கள் நிறைந்தது. ஆனால், இதையும் வாயு உருவாக்கும் காய் என்கிறார்கள். உண்மையிலே உணவில் வாயு இருக்குமா? பொதுவாக உணவுகளில் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், தாதுக்கள், விட்டமின்கள் இருக்கும். ஆனால், வாயு இருப்பதை எந்த உணவியல் நிபுணர்களும் பட்டியலிடுவதில்லை.
உணவில் தனிப்பட்ட ரீதியாக வாயுக்கள் இருக்குமா என்பது பலரது சந்தேகம். உருளைக்கிழங்கை வடநாட்டினர் அதிகம் சேர்க்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் வாயு தொந்தரவு இருக்கிறதா? இல்லை. சிலருக்கோ அல்லது பாதிக்குக் பாதிப் பேருக்கோ வாயு தொந்தரவு வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதே உருளைக்கிழங்கை சாப்பிட்ட சிலருக்கு எப்படி வாயு சேராமல் இருக்கிறார்கள். உருளையில் வாயு இருந்தால் அனைவருக்கும்தானே வாயு சேர வேண்டும். ஏன் சிலருக்குச் சேர்கிறது? சிலருக்குச் சேராமல் போகிறது.
இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த உடலில் தொந்தரவுகள் உருவாகும் என்பது எந்தளவுக்கு உண்மை? உலகில் உருளைக்கிழங்கை சாப்பிட்டவர்களுக்கு எல்லாம் வாயுத் தொந்தரவு வந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி வருவதில்லை. சிலருக்கு மட்டும் வருகிறது. எப்படி விஷத்தை அருந்தினால் அது ஆபத்தோ அதுபோல உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் வாயுவை ஏற்படுத்த வேண்டும். அதுபோல எல்லோருக்கும் ஆகின்றதா என்பதே கேள்வி. எந்த ஒரு உணவிலும் வாயுவை நேரடியாக ஏற்படுத்தும் தன்மை இல்லை. அப்போ, எப்படி உருளை, பருப்புகள், வாழைக்காய், இறால் போன்றவை சாப்பிட்டால் வாயு வருகிறது? பிடித்துக்கொள்ளும் தொந்தரவு வருகிறது? வலி, குத்தல் தொந்தரவு வருகிறது?
யாருக்கு உள்ளுறுப்புகள் பலவீனமடைந்து உள்ளதோ, அவருக்குச் சில குறிப்பிட்ட உணவு வகைகளைச் சாப்பிட்டதும் அதைச் செரிக்க முடியாமல் வெளியேற்ற முயற்சி செய்கிறது உடல். உதாரணத்துக்கு, ஒருவருக்கு வயிற்றில் கழிவுகள் தேங்கி, செரிமானக் குறைபாடு இயக்கக் குறைபாடு உள்ளது. அவருக்குப் பசி இல்லாத நேரத்தில் அவர் விருப்பப்பட்டு உருளைக்கிழங்கோ பருப்புச்சாதமோ பருப்பு கலந்த உணவோ, வாழைக்காய் பஜ்ஜியோ சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம். இப்போ உடல் எப்படி ரியாக்ட் செய்யும்?
உடல், உடனே இவற்றை வெளியேற்ற முயலும். கழிவாக வெளியேற்றும். வாயுவாகவோ, மலக்கழிவாகவோ, ஏப்பமாகவோ அவரவரின் உடலுக்கு எந்த நிலையில் வெளியேற்றினால் சௌகரியம் தருமோ அந்த முறையில் கழிவை உடல் வெளியேற்றும். எதோ சில முறையில் கழிவை வெளியேற்றிவிட்டு, குறைபாட்டைச் சீராக்க முயற்சி செய்யும். பெரும்பாலானோருக்குக் கழிவு வாயுவாகவே பிரிகிறது. அதாவது காற்றுக் கழிவாக வெளியேற்றும். அந்த உணவை எவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற்றும்.
இங்கே பசி இல்லாத போது, உடலுக்குத் தேவையே இல்லாத போது நீங்கள் சாப்பிட்டதால் இப்படி உடல் ரியாக்ட் செய்கிறது. வாயு உருவாக உணவு காரணம் இல்லை. வாயு உருவாக உங்கள் உடல் காரணம். அதாவது பசி இல்லாத போது, நீங்கள் சாப்பிட்டதே காரணம். செரிமான சக்தி இல்லாத போது நீங்கள் சாப்பிட்டதே காரணம். அப்படியானல், உங்களுக்கு வாயு உருவாக உணவு காரணமா அல்லது உணவு முறை காரணமா? உணவு முறைதான் காரணம். உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்த வகை உணவாக இருந்தாலும் சரி. அதை எப்போது உண்கிறோம் என்பதுதான் உணவு முறை.
எப்போதெல்லாம் உணவை உண்ணலாம்? “பசித்துப் புசி” என்பது பழமொழி. பசிக்கும்போது மட்டுமே உண்ணுவது சரியான உணவு முறை. பசிக்காதபோது உணவை உண்ணுவது தவறான உணவு முறை. கொய்யா, மாதுளை போன்ற இயற்கை உணவுகளைப் பசிக்காத போது உண்டால், அது தவறான உணவுப் பழக்கமா என நீங்கள் கேட்கலாம். ஆம், கட்டாயமாக… உங்களுக்குப் பசி இல்லாத போது சுத்தமான, இயற்கையாக எந்த அமிர்தமாக இருந்தாலும் பசிக்காத போது உண்ணுவது தவறான உணவு முறைதான்.
நொறுங்க தின்பது சரியான உணவுப் பழக்கம். அதற்காக நீங்கள் 30-40 முறை மெல்வது எனக் கணக்கெல்லாம் வைத்திருக்கத் தேவையில்லை. நல்ல பசி வந்தவுடன் டிவி, மொபைல் போன், புத்தகங்களோ இப்படி மற்ற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் உங்கள் தட்டிலும் நீங்கள் சாப்பிடும் உணவிலும் அதை உங்கள் பற்களால் நீங்கள் அரைப்பதை கவனித்தலுமே போதுமானது. இதை ஜப்பானியர்கள் தியானமாகக் கருதுகிறார்கள். தனியாக ஒரு அறையில் கண் மூடி அமர்ந்து இருக்கும் தியானத்தைவிட ‘Mindful eating’ பெரிய பெரிய பலன்களைத் தரும். இதை அனுபவிக்க அனுபவிக்க நமக்குத் தியானத்தின் அருமை புரியும். இதனால், உங்கள் உடலுக்குத் தேவையான உணவை நீங்களே கூழ் போலவோ மாவு போலவோ தானாக அரைத்து சாப்பிடும் பழக்கத்துக்கு வந்துவிடுவீர்கள். “தியானத்தைத் தனியாகச் செய்ய நேரமெல்லாம் தேவையில்லை, எந்தச் செயலை செய்தாலும் அதைக் கவனித்துச் செய்யும் செயலே தியானம்” என்கிறார் ஓஷோ.
உணவு என்றாலே அவை உண்ணக்கூடியதுதான். ஆனால், தற்போது கிச்சனில் தயாரிக்கப்படாத பல்வேறு விஷயங்களை உணவுகள் என்று சொல்லி விற்கிறார்கள். இதெல்லாம் உணவுகளா என்பதே கேள்விகுறிதான். எளிமையான உணவையே உங்கள் உடல் எதிர்பார்க்கும். எளிமையான உணவு என்றால்? எளிதில் செரிக்கக் கூடிய அனைத்து உணவுகளும் எளிமையான உணவு. அதில் முதல் ரகம் சமைக்காத வகை உணவுகள் - அதாவது இயற்கை உணவுகள் பழங்கள், நட்ஸ், சமைக்காத காய்கறிகள். அடுத்த நிலையில், சமைத்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகள். அடுத்த நிலையில், கைக்குத்தல் அரிசி சோறு, சிறுதானியங்கள், தோல் நீக்கப்படாத அரிசி வகைகளை வேக வைத்து சாப்பிடுதல். இதனுடன் கீரையோ குழம்போ காய்கறிகளோ சேர்த்தல். இவை எளிமையான உணவுகள். அதாவது தனிச்சீர் உணவான ரசம் சாதம், குழம்பு சாதம், கீரை சாதம், காய்கறி சாதம் இப்படி ஒரு வகை அரிசி, குழம்பு, காய் எனச் சாப்பிடுவது தனிச்சீர் உணவு. ஹோட்டலில் சாப்பிடுவது போல சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, சப்பாத்தி, தயிர், மோர், கீரை, கூட்டு எனச் சாப்பிடும் சமச்சீர் உணவு உடலுக்குப் பொருத்தமானது அல்ல. இது எளிமையான உணவும் கிடையாது. இதைச் சாப்பிட்ட உடன் உடலுக்குப் பெரும் வேலை உருவாகும். அதாவது செரிக்க உடல் பாடாய்படும். எனவே, எளிமையான உணவை உங்கள் வயிற்றுக்குக் கொடுப்பதே நீங்கள் உங்களின் உடலுக்குச் செய்யும் பேருதவி.
உங்கள் சுவையின் தேவையைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். இனிப்பு சுவை தேவையென்றால் பழங்கள், ஜூஸ், ஸ்மூத்தி, தேன் சேர்த்த உணவுகள், சர்க்கரைப் பொங்கல், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எனச் சாப்பிடலாம். அதுபோலப் புளிப்பு சுவை தேவையெனில், புளிப்பான பழங்கள், காய்கறிகள், புளிப்பு சுவை தரும் சமைத்த உணவுகளை உண்ணலாம். இதுபோலத் துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம் போன்ற சுவைகளில் சாப்பிட தோன்றினால் இதேபோல இந்தச் சுவையில் உள்ள உணவுகளை உண்ணலாம். அதாவது பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள். பிடித்த சுவையில் சாப்பிடுங்கள். எனக்குப் பிடித்தது சாக்லேட், ஐஸ்கிரீம் மட்டுமே என அதையே சாப்பிட கூடாது. இனிப்பு சுவையில் எவை நல்லதோ அதைத் தேர்ந்தெடுக்கலாம். அதுபோல எல்லாச் சுவைக்கும் இந்தக் கட்டளைப் பொருந்தும். சிம்பிளாக, ஒரு நினைவூட்டல் உங்கள் கிச்சனில் தயாரிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் நல்ல, தரமான உணவுகள்தான். வெளியில் தயாரிக்கப்படும் உணவுகளில், பாதியளவுக்காவது நல்லது சேர்க்குமா என நீங்களே சிந்திக்கலாம். அதற்கு ஏற்றபடி தீர்மானியுங்கள்.
உடலின் பசிக்காக நாம் உணவை உண்கிறோம். உடலின் தேவையைப் பசியால் உடலே உணர்த்துகிறது. அப்போது பசியின் அளவை அறிந்தே உண்ணுவது சிறப்பு. உங்களுக்கு எடுக்கும் பசிதான் உங்களின் உணவுக்கான அளவு முறை. அதை நானோ மருத்துவர்களோ ஆய்வாளர்களோ வெளிநாட்டு ஆராய்ச்சிகளோ முடிவு செய்யக் கூடாது. உங்கள் பசியின் அளவை உங்களது உடல் உங்களிடம் சொல்லும். அதைப் புரிந்து உணவைக் கொடுப்பது நீங்கள் மட்டுமே.
பொதுவாக அந்தக் காலத்துப் பழமொழிகள் நமக்கு எப்போதும் சரியான வழிகாட்டியாக இருக்கும். அவ்வகையில் “பசியோடு அமர்ந்து - பசியோடு எழுங்கள்” என்ற பழமொழி சரியானது. பசியை முழுமையாக போக்கிவிடக் கூடாது. வயிறு முட்ட, கனமான உணர்வு தரும் வரை உண்ணுதல் ஆகாது. வயிறு கனமாகும் முன்பே எழுதல் நல்லது. பசி மிதமாக மாறும்போது எழலாம். போதும் என்ற உணர்வு வருகையில் எழலாம். நாம் உண்ணும் உணவின் சுவை மிதமாகக் குறையத் தொடங்கும். இதுவே பசியாறுதல். இதுவே நாம் எழ வேண்டிய நேரம். இப்படி எழுந்தால் நாம் உண்ட உணவு உடலின் சக்தி குறைவை நீக்கி புத்துணர்ச்சி பெற போதுமானதாக இருக்கும். இந்த அளவை நாம் மீறினால் வயிறு கனமாகும். புத்துணர்ச்சிக்கு பதிலாகச் சோர்வும் வரும். தூக்கமும் வரும். அளவை மீறிய உணவு உடலுக்குத் தேவையில்லாத சுமை, கழிவு. உணவை பசியிருக்கும்போது அளவாக உண்ணுவது, கழிவுகள் புதிதாகத் தேங்காது. ஏற்கெனவே தேங்கிய பல நாள், பல காலக் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற துணையாக உதவும். அளவு அறிந்து உண்பதே நாம் உடலுக்குச் செய்யும் உதவி.
பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அது திட உணவோ திரவ உணவோ. இயற்கை உணவோ சமைத்த உணவோ…
உண்ணும் போது உணவில் கவனம் தேவை. மற்ற பொருட்களில் அல்ல.
எந்த மாதிரி உணவுகள் நல்லது? எளிமையாகச் செரிக்கும் உணவுகள்.
பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள். பெரும்பாலும் நல்ல, தரமான உணவுகளைச் சாப்பிடுங்கள்.
பசியின் அளவை அறிந்து சாப்பிடுங்கள். பசியாறிய பின் புத்துணர்ச்சி வரவேண்டும். சோர்வும் தூக்கமும் வரக்கூடாது.