ஏன் இந்தக் காலத்தில் இவ்வளவு உடல்நலக்கோளாறுகள்? உணவு விஷயத்தில் இவ்வளவு பிரச்சனைகள். எதை முக்கியமாக மறந்தோம்? ஏன் உடல்நலம் அனைவருக்குமே கெடுகிற நிலைக்கு வந்தோம்? உணவு விஷயத்தில் அப்படி என்ன தவறுகளைச் செய்கிறோம். ஒரு தவறா, பல தவறா… சிறியவர்களுக்குகூட மலச்சிக்கல், அல்சர், அசிடிட்டி… இளம் வயதினருக்கே இதய நோய், சர்க்கரை நோய்… 60 வயதை தாண்டுவதே போராட்டமாகிறது பெரியவர்களுக்கு… நாம் தவறவிட்ட மறந்துவிட்ட பழக்கங்கள் என்னென்ன? எல்லோருக்குமே தற்போது மருத்துவர் சொல்லும் ஆலோசனைகள் பொருத்தமானதாக இருக்குமா…
‘மென்றுண்ணல் நன்றுண்ணல்’ என்கிறது பழமொழி. அதென்ன மென்றுண்ணல்… நன்றாக மென்று சாப்பிடுவது என்று புரிந்து கொள்ளலாமா. ஆம், ஆனால் அது பாதி உண்மைதான். எளிதில் மெல்லும் உணவுகளே மென்று உண்ண முடியும். அப்படிப் பார்த்தால் பரோட்டா, பீசா உங்களால் எளிதில் மெல்ல முடியுமா? முடியாது. பரோட்டாவை எவ்வளவு கடினப்பட்டு நீங்கள் மென்று விழுங்கினாலும் அது நல்லுணவு ஆகிவிடாது. பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவை எளிதில் மெல்லக்கூடியவை. இதைப் பெரும்பாலும் சாப்பிடுவதே மென்றுண்ணல் நன்றுண்ணல். மெல்லப்படுவதற்கும் மெல்லுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. நீங்களாக முயற்சி செய்வது மெல்லுவது, பரோட்டாவை. எளிதில் மெல்ல முடிவது பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை… இதைத்தான் மென்றுண்ணல் நன்றுண்ணல் என்கிறார்கள்…
பலரும் கடிகாரம் பார்த்து சாப்பிடுவார்கள். பசி இருக்கோ இல்லையோ காலை 8 மணி டிபன், மதியம் 2 மணி லஞ்ச், இரவு 8 மணி டின்னர். உண்மையில் இத்தனை வேளை பசிக்கிறதா, நேரம் பார்த்து சாப்பிடாமல்… பசியைக் கவனித்துச் சாப்பிடுவதே… சரியான உணவுப் பழக்கம். பொதுவாக மனித இனத்துக்கு இருவேளை உணவே போதுமானது. இருவேளைக்கு மேல் பசிக்காது. உடலுழைப்புச் சுத்தமாக இல்லாதவருக்கு ஒரு வேளைக்கு மேல் பசிக்காது. பசியை முதலில் கவனியுங்க…
அவசரத்தில் உண்ணாதே… கோபத்தில், கவலையில், துக்கத்தில் உண்ணாதே என்கிறார்கள்… காரணம் என்ன? இந்தச் சமயங்களில் உண்டால் அஜீரணம் உண்டாகும் என்பதற்காகவே…
நல்ல தூக்கம் இருக்கும்போது உண்ண கூடாது. உணவு செரிமானம் ஆகாது. வயிறும் செரிக்காது. அதுவும் தூங்கிவிடும்.
பசி இல்லாமல் சாப்பிட்டால் என்ன ஆகும்? அப்படி மீறி உண்டால் உணவு ருசிக்காது. அதாவது உங்களுக்கு ருசி தெரியாது. தேவையில்லாமல் உடலுக்கு வேலை தருவீங்க. உடல் செய்ய வேண்டிய வேலையை விட்டுவிட்டு உணவை செரிக்க ஆற்றலை செலவழிக்கும். பசி உணர்வு மீண்டும் வர தாமதமாகும். பசிக்காமல் சாப்பிட்டு சாப்பிட்டுச் செரிமானம் பிரச்சனையும் மலச்சிக்கலும் வரும். பசியின்மை தொடரும்.
சிலருக்குச் சோர்வு இருந்தால், களைப்பு இருந்தால் ‘சோர்வை போக்குகிறேன்’ எனச் சாப்பிடுகிறார்கள். சோர்வோ களைப்போ இருந்தால் உங்களுக்குத் தேவையானது ஓய்வுதானே தவிர உணவு அல்ல. ஓய்வும் உறக்கமும்தான் தேவை.
எப்போது சாப்பிட கூடாது? பரபரப்பான சூழ்நிலையில், உடலில் காய்ச்சல் வந்து பசி இல்லாமல் இருந்தால், உடலில் ஏதேனும் நோய் வந்தோ மாற்றம் வந்தோ பசி இல்லாமல் இருந்தால், பேதி வந்து பசி இல்லாமல் இருந்தால்.. இப்படி எந்த மாற்றம் உடலில் நிகழ்ந்து பசி இல்லாமல் இருந்தால் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடல் உணவை வேண்டாம் எனக் கெஞ்சுகிறது. பசி எப்போ வருமோ தெரியாது எனப் பசிக்காமல் சாப்பிட்டால், மீண்டும் பசிக்கத் தாமதமாகும். பசி வந்து சாப்பிடுவதே உடலுக்கு உணவும் மருந்தும். பசியில்லாமல் சாப்பிடுவது உடலுக்கு விஷம். உணவே மருந்தாகட்டும் மருந்தே உணவாகட்டும் என்றார் நவீன மருத்துவத் தந்தை ஹிப்போக்ரடிஸ். ஆனால், இன்று அலோபதியை பின்பற்றுவர்கள் நேரத்துக்குச் சாப்பிடு என்கிறார்கள். அலோபதி சிஸ்டத்தின் தந்தை சொன்னதை மறந்துவிட்டனர்.
ஒரு வேளைக்கு ஒரே வகை உணவு உண்பதன் பெயர் மோனோ ஃபுட். இப்படிச் சாப்பிடுவதே உடலுக்குத் தேவையான ஆற்றலை எடுக்க உதவியாக இருக்கும். அதிகபட்சம் இரண்டு வகை சாப்பிடலாம். சமச்சீர் போல 5-6 வகை உண்ண கூடாது.
ஏன் ரகம் ரகமா சாப்பிட கூடாது? ரகங்களும் வகைகளும் அதிகம் ஆக ஆக உணவின் அளவும் கட்டுபாட்டுக்கு அடங்காமல் கூடிக்கொண்டே போகும். உங்களை அதிக அளவில் சாப்பிட வைக்க ரகங்கள் தூண்டும். விளைவாக, வயிற்றின் அளவும் பெருகும். மலக்குடலின் அளவும் பெருகும். நோயில் வந்து நிற்கும்.
ஏன் பலரால் உமிழ்நீர் கலந்து ருசிக்க முடியவில்லை? நன்றாக மென்று உமிழ்நீர் கலந்து ருசித்து, அனுபவித்து உண்பதே உணவு. இப்படி எல்லா வேளையும் நீங்கள் சாப்பிடுகிறீர்களா? இல்லை… உணவு இன்பத்தை முழுமையாக நீங்கள் பெறவில்லை என்பதால்தான் அடிக்கடி சாப்பிடுகிறீர்கள். 3 வேளை, 4 வேளை எனச் சாப்பிடும் பழக்கத்துக்கு வருகிறீர்கள். அடிக்கடி சாப்பிடுவது, அதிகம் சாப்பிடுவது எனத் தொடங்கிச் சாப்பிட முடியாத நிலைக்கு நோயில் வந்து நிற்கிறது.
உணவு உண்ணும்போது குறைவாக, அளவாக உண்… அதிகம் உண்ணாதே… அளவுக்கு மிஞ்சுகையில் எல்லாமே நஞ்சாகும். பசியை முழுமையாகப் போக்கிவிடாமல் கொஞ்சம் மிச்சம் வையுங்க. அப்போதுதான் அடுத்த வேளை பசி உணர்வு வரும்.
உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு மட்டுமல்ல, யாவருக்கும் அழகு. முக்கியமாக, ஆரோக்கியமும்.
வாழ்வதற்காகச் சாப்பிடுவது. உண்பதற்காக உண்ணுவது. ஆனால், உண்பதற்காகவே வாழ்வது. பிரச்சனைதான். நான் ஒரு ஃபுட்டீ என்பதில் பெருமை அல்ல. அது நோய். பின்னால் உண்ணவும் முடியாது வாழவும் முடியாது. நோயாளியாக மாறுவர்.
உடலுக்கும் உள்ளத்துக்கும் சாப்பிடுவது சரி. கண், மூக்கு, நாக்கு, காது, கை முதலிய புலன்களுக்காகச் சாப்பிட கூடாது. பார்க்க அழகா இருக்கு. நாக்குக்கு ருசியா இருக்கு. வாசனை செம்மயா இருக்கு. தொட்டால் பஞ்சு போல இருக்கு. கறுக் முறுக்குன்னு கிரிஸ்பியா இருக்கு. இப்படி மற்ற புலன்களுக்காகச் சாப்பிடுவதால் வயிற்றில் செரிமானம் நடை பெறாது. பசித்து உண்டால் மட்டுமே செரிமானம் நடக்கும். பசிக்காமல் உண்டால் செரிமானப் பிரச்சனை வருவது இதனால்தான். மலச்சிக்கலும் வருகிறது.