காய்களில் நிறைய வகைகள் உள்ளன. நமக்கெல்லாம் பிடித்தது, பிடிக்காதது எனப் பெரிய லிஸ்ட் இருக்கும். இந்தப் பெரிய பட்டியலில் எது சிறந்தவை என நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதை எப்படிச் சமைத்தால் சத்துகள் அப்படியே கிடைக்கும் என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
காய்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு வகை, மண்ணுக்கு அடியில் விளைந்தவை. இரண்டாவது, மண்ணுக்கு மேலே விளைந்தவை. மூன்றாவது, மண்ணுக்கு மேலே வளர்ந்து சில மாதங்களிலே மடிபவை. நான்காவது, மண்ணுக்கு மேலே அதிக உயரத்தில் பல ஆண்டுகளாக வளர்ப்பவை. இந்த நான்கில் எது பெஸ்ட்?
மண்ணுக்கு அடியில் வளரும் கிழங்குகள், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், வெங்காயம், நிலக்கடலை ஆகியவற்றுக்குச் சில மாதங்களே வாழ்க்கை. பருவமும் சமைக்கும் பக்குவமும் அதிகம் தேவை. பக்குவமாகச் சமைக்காவிடில் உடலில் செரிமானத்தில் தொந்தரவுகளைத் தரும். கழிவுகளை உடலில் சேர்க்கும்.
புல், பூண்டு, கீரைகள், மூலிகைகள் ஆகியவற்றைச் சமைக்கப் பக்குவம் சிறிதளவு இருந்தால் போதும்.
தானியம், பருப்புகள், காய்கள், சில உயரம் வளரக்கூடிய கீரைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை சமைக்க பக்குவம் அவசியம் தேவை. பக்குவமாகச் சமைக்காவிடில் உடலில் கெட்ட வாயுக்கள் கழிவுகளாகத் தங்கும்.
அதிக ஆண்டுகள் வாழ்பவை. அதிகப் பலம் தருபவை. மழையை, பனியை, காற்றை, வெப்பத்தைத் தாங்கி வளர்ப்பவை. இதன் வேர்கள் வெகு ஆழம் வரை நீளம் சென்று வாழும். இவைதான் மரங்கள். இவை தரும் பழங்கள்தான். உலகின் மிக சிறந்த உணவு. செரிமானம் மிகச் சுலபம். அனைத்து சத்துகளும் உடையது.
முதல் மூன்று வகைகள் எல்லாம் காய்களும் கீரைகளும் மூலிகைகளும்தான். இவற்றை மனித உடல் செரிமானம் செய்வது சற்றுக் கடினம்தான். இந்த மூன்று வகைகளில் தானியங்களும் பருப்பு வகைகளும் செரிமானம் செய்வது கடின வேலையாக இருக்கும். இதனால்தான் இதைத் தீயில் சமைத்து எடுக்கிறோம். இப்படித் தீயில் சமைப்பதால் அதிகமாகச் சாப்பிட முடிகிறது. இதனால் உடலில் அமிலம் மிகுந்து உடல் நலிவாகிறது. தீயில் சமைத்த உணவுகளும் சீக்கிரம் கெட்டுப்போகும். அதுபோல் வெகுநேரம் செரிமானம் ஆக வயிற்றுக்கு நேரம் எடுப்பதால், வயிற்றில் உள்ள உணவிலும் அமிலம் சேரும். கெடும். நஞ்சாகும். வாடையாகும். வாயுவாகும். கழிவாகும். கழிவுகள் அதிகம் சேரும். இதனால்தான் பழங்கள் சாப்பிடுவோருக்கு மலக்கழிவு குறைவாக வெளியேறும். சமைத்த உணவுகளைச் சாப்பிடுவோருக்கு, மலக்கழிவு அதிகமாக வெளியேற காரணம்.
கொடிக்காய், செடிக்காய், வெப்பப்பகுதி காய், குளிர்ப்பகுதி காய்கள், நாட்டு காய்கள், மலைக்காய்கள், நீர் மிகுந்தவை மற்றும் குறைந்தவை, அமிலம் உள்ளவை மற்றும் இல்லாதவை. சமைக்காமல் சாப்பிடுபவை. சமைத்தே சாப்பிட வேண்டும் என்ற வகை. உணவாக இருப்பவை. மருந்தாக இருப்பவை.
கொடிக்காய் - பூசணீ, பரங்கி, சுரை, பீர்க்கு, புடலங்காய், வெள்ளரிக்காய், அவரைக்காய், சௌ சௌ, பாகற்காய்
செடிக்காய் - கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், கொத்தவரை, பீன்ஸ்
குளிர்ப்பகுதி மலைக்காய் - கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், பீன்ஸ், டர்னிப், உருளைக்கிழங்கு, நூல்கோல்
மரத்தில் வருபவை - முருங்கைக்காய், மாங்காய். மரத்தின் ஆயுள் பல ஆண்டுகள். ஆதலால் சவை மிகுந்தவை
நீர்க்காய் - வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, தக்காளி, சுரைக்காய், சௌ சௌ ஆகியன
நீர் குறைந்தவை - கேரட், பீட்ரூட், பீன்ஸ், அவரை, கத்திரி, வெண்டைக்காய்
அமிலம் உள்ளவை - தக்காளி, வெங்காயம், மிளகாய், சேனை, கருணை, பூண்டு
சமைக்காமல் சாப்பிடுபவை - கேரட், வெள்ளரி, தக்காளி, வெண்டைக்காய்
கடினப்பட்டுச் சமைக்காமல் சாப்பிடுபவை - புடலங்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், தண்டு
மிளகாய், வெங்காயம், பாகற்காய், முள்ளங்கி, சேனை, டர்னிப், நூல்கோல், கொத்தவரை, இஞ்சி, அவரை, கத்திரிக்காய் ஆகியவற்றைச் சமைக்காமல் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் நமக்கு உடலில் தொந்தரவுகள் வரும். நோய்கள் வரும்.
பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், மேராக்காய், வெண்டைக்காய் ஆகியன சமைத்து உண்ணலாம். மெண்மையான சுவை தரும். மன அமைதி கிடைக்கும். நலம் தரும். அடிக்கடி சாப்பிடலாம்
கேரட், பீட்ரூட், கிழங்குகள், அவரை, கத்திரி, முட்டைக்கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய் போன்றவை கெட்டியான காய்கள். தாமச குணம் தரும். மந்தம் தரும். சோம்பேறியாக உட்கார வைக்கும். சுறுசுறுப்பு குறையும். ஆதலால், இவற்றை அளவாக மட்டும் சாப்பிடலாம்.
வெங்காயம், மிளகாய், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி போன்ற புளிப்பானவையும் காரமானவையும் ரஜோ குணத்தைத் தரும். கோபம், எரிச்சல் மனநிலையில் இருக்க வைக்கும். மன ஊசலாட்டம் அதிகமாகும். எனவே, இந்தக் காய்களை மிகக் குறைவாகச் சாப்பிட வேண்டும். மருந்து போல எடுத்துகொள்ள வேண்டும்.
சாத்வீக குணம் தரும் காய்களை அடிக்கடி சாப்பிடலாம். மற்றவை குறைத்துக் கொள்ளலாம். சுமார் 50 கிலோ இருப்பவர், தினமும் குறைந்தபட்சம் 350-500 கிராம் காய்களாவது சாப்பிட வேண்டும். அப்போதுதான் குடல் சுத்தமாகும். ஒரு கண்டிஷன், நீங்கள் உண்ணும் காய்களுக்கு அரிசி உணவை தொட்டுகொள்ள வேண்டும்.
சிறந்த காய் எனச் சொல்ல சில குணங்கள் அவற்றுக்கு இருந்தால்தான், அது சிறந்த காய். என்னென்ன பாராமீட்டர்கள் உண்டு எனப் பார்க்கலாம்.
"பெரிதாக இருக்க வேண்டும்
தோல் பாதுகாப்பாகக் கெட்டியாக அதிக நாள் கெடாமல் இருக்க வேண்டும்
நீர்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும்
சாத்வீக குணம் இருக்க வேண்டும்
சூரிய ஒளியும் வெப்பமும் செடிக்கும் இலைக்கும் காய்க்கும் அதிகம் கிடைக்க வேண்டும்
செடியின் வேருக்கும் காய்க்கும் இடையே அதிகபட்ச தூரம் இருக்க வேண்டும். நீரை வடிகட்டும் திறன் இருக்க வேண்டும்.
கை நிறைய எடுக்கலாம். வாய் நிறையச் சுவைக்கலாம். வயிறு நிறையச் சாப்பிடலாம். மனம் நிறைவடைய வேண்டும். எந்தக் கெடுதலும் உடம்புக்கோ உறுப்புகளுக்கோ உயிருக்கோ வரக்கூடாது.
இனிப்பு பலகாரத்திலும் இடம் பிடித்திருக்க வேண்டும்.
இவ்வளவு கண்டிஷன்களையும் பார்த்தால் அது 'வெண்பூசணி' எனும் 'சாம்பல் பூசணிதான் சிறந்த காய்' என்று பெயர் பெறுகிறது" என்கிறார் இயற்கை மருத்துவர், சுப்பிரமணியன்.
இதற்கு அடுத்து மருத்துவர் பட்டியலிடுவது, சுரைக்காய், மேராக்காய், பீர்க்கங்காய், புடலங்காய். இது போன்ற சிறந்த காய்களை எவ்வாறு சமைத்தால் சத்துகளை அப்படியே பெறலாம் என வழிகாட்டுகிறார் 40 ஆண்டுகால அனுபவமுள்ள இயற்கை மருத்துவர், சுப்பிரமணியன்.
நன்றாகக் கழுவி, பெரிய துண்டுகளாக வெட்டவும். ஒரு அங்குல கன சதுரத்தில் அல்லது இரண்டு அங்குல நீளத்தில் வெட்ட வேண்டும்
காய்கள் பாதி மூழ்குமளவுக்குத் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு மிளகாய், சிறிது சீரகம் சேர்க்கலாம்
வேகும்போதே நல்ல மணம் வரும். முக்கால் வேக்காடு அல்லது அரை வேக்காடு வெந்தவுடன் இறக்கி வைத்து தேங்காய் துருவல், மல்லி இலை இரண்டும் தாராளமாகப் போட்டு கலக்கி மூடி வைக்கவும்.
கால் மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். நீர் அதிகமாக இருந்தால் சூப்பாக சாப்பிடலாம். சாப்பிடும்போது உப்பு, மிளகு சேர்க்கலாம்.
முதலிலே உப்பு போட்டால் காய்களின் நீர்ச்சத்து வெளியே வந்துவிடும். காய்களின் உண்மை சுவை நீங்கிவிடும். தாளித்தல் கூடாது.
இதுபோல எல்லா வகைக் கீரைகளையும் செய்து சாப்பிடலாம்.