நாம் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோமா, அதுதான் ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. என்ன சாப்பிட்டாலும் சரி.. பீட்ரூட் சாப்பிட்டால் மறுநாள் மலம் சிவப்பாக வருவதைப் பார்க்கலாம். அதுபோலக் கீரைகள் சாப்பிட்டு இருந்தால், மலம் பச்சையாக வெளிவருவதைக் காணலாம். இதெலாம் இயல்பான விஷயம். என்ன இன்புட் தருகிறோமா அதுதான் அவுட்புட்டும்… ஆனால், மசாலா சேர்த்த உணவுகள், காரமான, எண்ணெய் மிதக்கும் ஸ்பைசியான, செயற்கை நிறம் சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் என்னவாகும்?
பொதுவாக, கீரைகள் சாப்பிட்டால் மறுநாள் சுலபமாக மலம் கழியும். பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய வேக வைக்காத பயறு வகைகளைச் சாப்பிட்டாலும் அப்படிதான். காரணம் இதில் உள்ள நார்ச்சத்துகள். இந்த நார்ச்சத்துகள் எப்படி வேலை செய்யும் என்றால், பெருங்குடலில் உள்ள மலத்தை, கழிவை வெளியே தள்ளும். அதாவது தண்ணீரில் ஜெல்லி உருண்டை போட்டால் எப்படிச் சின்னதான மணி போல் உள்ள ஜெல்லிகள் தண்ணீரை உறிஞ்சி பெரிய பெரிய ஜெல்லி உருண்டைகளாக மாறுமோ, அதைதான் நாம் மணி பிளான்ட், பாம்பூ பிளான்டில் வைக்கிறோம். அதேபோல இந்த நார்ச்சத்துகள் நம் உணவின் வழியாக வயிற்றுக்குச் சென்று, சிறுகுடல், பெருங்குடல் வழியாகப் பயணித்து வருகையில் ஊறி, பெரிதாகி மலத்தைத் தள்ளி, கழிவைத் தள்ளி வெளியேற உதவுகிறது. இது நம் பெருங்குடலை, மலக்குடலைச் சுத்தம் செய்து பாதுகாக்கிறது. அதனால், தான் மருத்துவர்களும் சரி நம் வீட்டுப் பெரியவர்களும் சரி பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
ஆனால், நாம்தான் சுவைக்கு அடிமையாகி துளிகூட நார்ச்சத்துகளே இல்லாத உருளைக் கிழங்கு வறுவல், ரொட்டி, ஷவர்மா, பனீர் கிரேவி, குல்ச்சா, பட்டர் நான், கார்லிக் நான், பரோட்டா, சிக்கன் கறி, சிக்கன் கிரேவி என எண்ணெய்யில் மிதக்கும் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்த் தூள் போன்ற அதிகம் காரம் சேர்த்த, கலர் கலராக கவர்ச்சிகரமான நிறத்தில் உணவு மாறச் செயற்கை நிறம் சேர்த்த இத்தகைய உணவுகளை விரும்பி அதிகளவில், அடிக்கடி சாப்பிடுகிறோம்.
இதன் விளைவாக மலத்தில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் இல்லாமல், அது கெட்டியாக, மாவாகவோ, கெட்டியான கழிவாகவோ, உலர்ந்து போய், கட்டி கட்டியாகப் பெருங்குடலில் நகர முடியாமல் தேங்கி இருக்கின்றன. நகரும் தன்மை அதில் இல்லை. காரணம் அதை நகர்த்தும் நார்ச்சத்தும் அதில் இல்லை. கார உணவாக இருந்தால், அதைச் செரித்தாலும் அதன் சக்கையும் அப்படியே பெருங்குடலில் காரமாக இருப்பதால் பெருங்குடல், மலக்குடல் என அந்த மலம் கடந்து வரும் பாதையெல்லாம் எரிச்சலைத் தருகிறது. புண்களை உண்டாக்குகிறது.
இறுதியில் கஷ்டப்பட்டு முக்கி முணகி எரிச்சலுடன் கணத்த உணர்வுடன் சிறிது, சிறிதாகக் கெட்டியான மலக்கழிவாக வெளியேற்றுகிறோம். வலியும் வேதனையும் எரிச்சலும் உள்ள அனுபவத்தை அனுபவித்தே மலத்தை வெளியேற்றுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அதுவும் இந்த மலம் முழுமையாக வெளியேறாமல் அங்கங்கே இடுக்குகளில், குடல் மடிப்புகளில் தேங்கவும் செய்கின்றன. பின்பு இதுபோலத் தேங்கும் கழிவுகளே நோயாக மாறும். முதலில், புண் அப்புறம் பெரிதாகும். வலி, எரிச்சல் தரும், ரத்தம் வரலாம். பின்னர் இந்தப் பழக்கமே தொடர்ந்தால் இறுதியில் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் வரைகூட செல்கிறது.
நீங்கள் சாதாரணமாக நினைக்கும் ஸ்பைஸி, காரமான, செயற்கை கலர் சேர்த்த உணவுதான் உங்களை நோயாளியாக்கும் என்ற உண்மை பலருக்கும் புரிவதில்லை. ருசி, சுவை என அடிமைப்பட்டுப் போய் இறுதியில் நோயாளியாக மாறி எவ்வளவு துயரம் அடையவேண்டியுள்ளது.
பொதுவாகச் சில நான்வெஜ் ஹோட்டல்களில், மீனோ அல்லது அசைவ துண்டுகளோ கொடுத்தால் அதைச் சுற்றி காய்கறிகளை அலங்கரித்தோ, பக்கத்தில் சாலட் வைத்தோ கொடுப்பார்கள். ஆனால், நாம் அதை பிளேட் டெக்கரேஷன் எனக் கருதி, அதைவிட்டுவிட்டு வெறும் அசைவத்தை மட்டும் ஃபுல் கட்டுக் கட்டுவோம். இப்போது சாப்பிட்ட உணவு இறுதியில் மலச்சிக்கலைத்தான் சேர்க்கும். அதாவது நார்ச்சத்து துளியும் இல்லாத வெறும் அசைவத்துண்டு. ஒருவேளை பசித்துச் சாப்பிட்டு இருந்தால், உடல் ஓரளவுக்குக் கடினப்பட்டாவது இந்தக் கழிவைத் தள்ளும். ஆனால், பசித்த பிறகு சாப்பிடும் பழக்கம் மறைந்து போய், அழிந்து போய்க் கண்களில் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடும் பழக்கத்தில் நாம் இருக்கிறோம்.
விளைவாக, மலச்சிக்கல், அமிலமாக எதுக்களித்தல், செரிமானக் கோளாறு, குடல் அல்சர், மூலம், ஆசனவாய் வெடிப்பு மற்றும் புண், கட்டி, புற்றுநோய் வரை எல்லாம் வருகின்றன. பீட்ரூட் எப்படி மலத்தில் சிவப்பாக வருகிறதோ, அதுபோலக் காரமான உணவும் அதே எரிச்சல் தன்மையுடன் மலமாக வெளியேறத்தானே செய்யும். பீட்ரூட் நிறம் இயற்கை நிறம் அது உங்களின் வயிற்றை, குடலை பாதிக்காது. ஆனால், நீங்கள் உண்ணும் பச்சை நிற தந்தூரி, சிவப்பு சிக்கன் 65, காரமான சாஸ் போட்ட செஸ்ஷ்வான் ஃப்ரைடு ரைஸ் ஆகியவை வயிற்றில், குடலில் ஓட்டி, எஞ்சியது மலத்தின் வழியாக வரும். ஏற்கெனவே ஒட்டிய நிறங்கள் புண்ணாகும். அந்த இடத்தைச் செயற்கை நிறங்கள் அரிக்கும். ரசாயனக்கழிவாக மாறும். இது தெரியாமல் செயற்கை நிறம் சேர்த்த கேக், சாக்லேட், ஸ்வீட்ஸ், எண்ணெய்யில் பொரித்தவை, தந்தூரி வகைகள், நிறம் சேர்த்த கேசரி, நிறம் சேர்த்த டசர்ட்ஸ் இன்னும் பல உங்களின் உடலில் ரசாயன கழிவாகத் தேங்கி உங்களை நோயாளியாக மாற்றும்.
செயற்கை நிறங்கள் கொண்ட எந்த இனிப்போ காரமோ துவர்ப்போ கசப்போ புளிப்போ உப்பு சுவை போன்ற உணவுகளை உண்ண வேண்டாம்.
மதியம் அசைவம் சாப்பிட திட்டமிட்டால், காலை உணவை முழுமையாகப் பழமாகச் சாப்பிட்டுவிடுங்கள். நார்ச்சத்து உடலில் இருக்கும்.
அசைவ உணவு சிக்கன், மட்டன், மாவு உணவாக பரோட்டா, சப்பாத்தி, நான், குல்சா போன்ற கெட்டியான, துளிகூட நார்ச்சத்து இல்லாத உணவுகளை உண்டால் இதனுடன் ஒரு கப் சாலட்களை சாப்பிட பழகுங்கள்.
ஒருவேளை நீங்கள் பஃப்வட்டுக்கு மதியம் செல்கிறீர்கள் என்றால் காலையில் பழம் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் உணவுக்குப் பிறகு இரவு எதுவும் சாப்பிடாதீர்கள்.இரவில் காரமான, ஸ்பைசியான, அசைவம், ஹெவியான உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கவும்.
ஹோட்டல் கிரேவிகளில் சுவைக்காகப் பச்சைமிளகாயை அரைத்துத்துதான் கிரேவியில் மிக்ஸ் செய்வார்கள். அதுபோல, மிளகாய்ப் பொடியும் தூக்கலாக இருக்கும். இந்த கிரேவிகளை குறைவான அளவில் சாப்பிடுங்கள். அல்லது வேறு அவியல் போன்ற ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுங்கள்.
காரமான உணவைச் சாப்பிட்டு அதைப் போக்க ஐஸ்கிரீம் அல்லது சில்லென கூல் டிரிங்க்ஸ் அல்லது ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த கூல் வாட்டர் குடித்தால், இன்னும் மோசமாக மாறும். உணவு செரிக்காமல் இந்த சில் தன்மை உங்கள் உணவைச் செரிக்காமல் கழிவாகத் தேங்கும். வயிறு அப்செட் ஆகும். நிலை, இன்னும் மோசமாகும்.
காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டால், 3 மணி நேரம் கழித்து நிறைய நார்ச்சத்து உள்ள பழங்களான கமலா ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, மாம்பழம், சிறுமலை வாழைப்பழம் இதில் எதாவது ஒரு வகையைச் சாப்பிடுங்கள். ஓரளவுக்கு உங்களின் வயிறும் குடலும் பாதுகாக்கப்படும்.
காரமான, ஸ்பைசியான உணவைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த வழி.
பச்சைமிளகாய், சிவப்பு மிளகாய்க்குப் பதிலாக மிளகு தூள் பயன்படுத்தவும்.
எப்போதாவது தவிர்க்க முடியாமல் சாப்பிட்டால் பரவாயில்லை. அடிக்கடி சாப்பிட்டால் பெருங்குடல், வயிறு, மலக்குடல், உணவுக்குழாய் புற்றுநோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust