இந்திய சரித்திரத்தில் மக்களும் மன்னர்களும் என்ன உண்டார்கள்? அவர்களுக்குப் புதுப்புது நோய்கள் வந்தது இல்லை. குழந்தையின்மையோ குழந்தை உருவாகுவதில் தாமதமோ சிக்கல்களோ இல்லை. ஏன் இக்காலத்தில் மட்டும் குழந்தை உருவாகத் தாமதமாகிறது; உடலில் அத்தனை நோய்கள் வருகின்றன. மருந்துகள் இல்லாமல் வாழ முடியவில்லை நம்மால்… உடல் ரீதியான அவ்வளவு பிரச்சனைகள் தோன்றுகிறது. பல லட்சம் ப்ரீமியம் கட்டி லோன் போட்டு குழந்தை உண்டாகச் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நோக்கி பயணிப்பது ஏன்? சர்க்கரை நோயும் பிபி இல்லாத 40 வயதினரையும் பார்க்க முடிவதில்லை. வீட்டுக்கு ஒரு இதய நோயாளியும் இருப்பது ஏன்?
வாழ்வியல், உணவு, பசி, தூக்கத்தைக் கெடுத்தவர்களுக்குத்தான் இவ்வித பிரச்சனைகள் வருகின்றன. பசியும் தூக்கமும் தான் எல்லாமுமே… பசி அறியாமல் சாப்பிடுவதால் உடல் கழிவுகளை நீக்கும் பணி தாமதமாகிறது. கழிவுகள் சேர்ந்த உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்காது. கழிவுகள் உள்ள உடலில் குழந்தை உருவாகாது. உடல் சிக்கல்கள் இருப்பதால் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலின் அனைத்து நோய்களுக்கும் காரணம் கழிவுகளே என்கிறது இயற்கை மருத்துவமும் மரபு வழி மருத்துவமும்.
மனிதனைத் தவிர எந்த உயிரினமும் உப்பைத் தின்பதில்லை. உப்பு விஷம்; அமிலம்; அரிக்கும் பொருள்; எரிச்சலூட்டும் ரசாயனம். கடலுக்குள் உப்பு உண்டு ஆனால் மீன்களின் உடலுக்குள் உப்பு இல்லை. அதிசயம், விசித்திரம்; அதிக உப்புக்கள் கலந்த உணவுகளை உண்பது கழிவுகளை உடலில் சேர்க்கிறது.
அதுபோல வெள்ளை சர்க்கரைக்கு, சுத்தமான ரசாயன உணவு என்பதற்கான முதலிடம். அனைத்து பேக்கரி பொருட்கள், ரெடிமேட் உணவுகள், பாக்கிங் உணவுகள், பதப்படுத்திய உணவுகளில் உப்புகளும் சர்க்கரையும் ஏராளம். நாம் உண்ண வேண்டியது சமைக்காத உணவுகள், உப்பு, சர்க்கரை என்கிற ரசாயனம் இல்லாத உணவுகள். சமைக்காமல் சாப்பிடக் கூடிய காய்களை அடிக்கடி உட்கொள்வது. பழங்களைத் தினசரி ஒரு வேளை உணவாகச் சாப்பிடுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
இட்லி, தோசை, பொங்கல் பூரி, உப்புமா போன்ற அனைத்திலும் அதிகமான மாவுதான் உள்ளது. இந்த மாவுகள் உடலில் என்ன செய்யும் தெரியுமா? அமிலமாக்கும். அசிடிட்டி, எரிச்சல், ஏப்பம் தொடர்ந்து வருவது... வாயு உற்பத்தி செய்யும், வயிற்றில் கடமுட சத்தம், ஆசன வாயில் அடிக்கடி காற்று வெளியேறுவது, மந்தத்தன்மையை உருவாக்கும். மாவு உணவுகள் அனைத்துமே பசைத்தன்மை என்பதால் மலச்சிக்கல் வருகிறது. இது தூக்கப் பிரச்சனை, சோர்வு, சத்துக் குறைபாட்டுக்குக் கொண்டு செல்லும். இதன் சுவையால் அடிக்கடி சாப்பிடத் தோன்றும். அடிக்கடி சாப்பிடும் பழக்கம் ஏற்படும். அதாவது நேரத்துக்குச் சாப்பிடும் பழக்கம். பசிக்கு சாப்பிடுவது கிடையாது. நேரத்துக்குச் சாப்பிடும்படி நம்மை உருவாக்கும். பசிக்குச் சாப்பிட வேண்டுமா? நேரத்துக்காகச் சாப்பிட வேண்டுமா என்று சிந்தியுங்கள். காலை நேரம் பெரும்பாலும் பசிக்காது. காலை உணவு அவசியமில்லை. காலையில் பசிக்கின்ற நிலை உங்களுக்கு இருந்தால் பழங்கள், ஜூஸ், நீராகாரம், கஞ்சி, கூழ் சாப்பிடுங்கள். திட உணவுகள் சாப்பிடும் பழக்கம் தற்போது 40 ஆண்டுக் காலமாக மட்டுமே நம்மிடம் தொடர்ந்து வருகிறது.
முன்பு காலை வேளை பசித்தால் திரவ உணவுகளையே உண்டனர். வயலில் வேலை செய்வோரும், உடலுழைப்போரும் சரி. உடலுழைப்பு எதுவும் இல்லாத நமக்குத் திட உணவான மாவு உணவுகள் அவசியமே கிடையாது. இட்லி, தோசையெல்லாம் பண்டிகை கால உணவுகளாக அக்காலத்திலிருந்தது. தற்போது, தினசரி உணவாயிற்று. முதல் முறையாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘கார்ன் ஃபிளேக்ஸ்’ காலை உணவாக அறிமுகம் செய்தது நம் வீட்டு டிவி விளம்பரங்கள். மேற்கத்திய ஸ்டைல் அது. இதுவும் தவறு தான். நம் ஊர் உணவு முறைகளான திரவ உணவுகளே சிறந்தது. ஆக, டிபன் தேவையில்லை, ஜூஸ்களே போதும்.
மதியத்தில் ஹோட்டல்களில் ‘மீல்ஸ்’ தருகிறார்கள். சாதம், காய் வகைகள், அப்புளம், சாம்பார், கூட்டு, கீரை, வத்தக்குழம்பு, தயிர், மோர், ரசம். இதெல்லாம் சின்னச் சின்ன கப்பில் சோறு மட்டும் அதிகளவில். இதை ‘சமச்சீர் உணவு’ என்று சொல்கின்றனர். இதிலும் மாவுச்சத்தே பிரதானம், காய்கறிகள் குறைவுதான். சாதம் மாவுப்பொருள், மாவைத் தவிர ஒரு சத்தும் இல்லை. சாம்பாரில், பருப்பும் இரண்டு துண்டும் காயும். ஏதோ ஒரு வகைக் காய்கறி தொட்டுக்கொள்ள… இதுவரை சாப்பிடுவது ‘மோனோ டயட்’. ஒரு வகைக் குழம்பு, ஒரு வகைக் காய், கொஞ்சம் சாதம். இந்த எளிமை உணவே போதுமானது. ஆனால், இதற்கடுத்துக் கொஞ்சம் வத்தக்குழம்பு, ரசம், மோர் எனத் தொடர்ந்து சாப்பிடுகிறோம். வயிற்றில் சாதம் பருப்புக் கொஞ்சம் காய்கள் ரசம் புளிப்பு சேர்ந்தது… இது எல்லாமே கலந்து வயிற்றுக்குள் வருகிறது. பின்னர், பால் பொருட்களான தயிர் மோரும் சேருகிறது.
இப்போது ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் இந்தச் சமச்சீர் உணவுகள் எல்லாவற்றையும் கொட்டி விடுங்கள். மிக்ஸியில் அரைத்து அப்படியே விட்டுவிடுங்கள். மறுநாள் காலை அந்த மிக்ஸி ஜாரை திறந்து பாருங்கள். நுரைத்துப் போய் அமிலம் உண்டாகி துர்நாற்றம் அடித்து எப்படி இருக்குமோ அப்படித்தான் உங்கள் வயிறும் இருக்கும். இது தான் ‘சமச்சீர் உணவு’ என்று சொல்லி 40 ஆண்டுக் கால நம் பழக்கத்திலிருந்து வருகிறது. முன்பு நாம் சாப்பிட்டது ‘தனிச்சீர் உணவு’ ஏதோ ஒரு அரிசி வகைச் சிறுதானியமோ மாப்பிள்ளை சம்பாவோ கவுனி அரிசியோ கேழ்வரகோ கம்போ அதில் தொட்டுக்கொள்ள ஒரு காய் ஒரு வகைக் குழம்பு இருந்தது. அவ்வளவுதான். இந்த உணவு வகையே மோனோ டயட்டாக நாம் பின்பற்றி வந்தோம். இதுவே சரியான உணவு. செரிப்பதற்கும் எளிது. வயிற்றில் புளிக்காது; அமிலம் உண்டாகாது; துர்நாற்றம் வராது. இந்த எளிய உணவு நீங்கள் இரவு உணவு சாப்பிடுவதற்குள் செரித்து விடும். இரவு நீங்கள் எதாவது சாப்பிட்டால் அது வெறும் வயிற்றில் போய் விழும். எனவே வயிற்றில் மேலும் மேலும் அமிலம் உண்டாகாது. ஆனால், சமச்சீர் உணவைச் சாப்பிட்டால் செரிக்கத் தாமதமாகும். வயிற்றில் கெட்டுப் புளிக்கும். இரவு உணவு அதன் மேல் விழும். சத்துக்களை உடல் கிரகிக்க முடியாது. கழிவுகள் தான் அதிகளவில் தேங்கும். கழிவுகளே அனைத்து நோய்க்கும் காரணம்.
பலருக்கும் இரவில்தான் நேரம் அதிகம் கிடைப்பதால் ‘ஃபுல் கட்டு’ கட்டுகிறார்கள். ஃபாஸ்ட் புட், பரோட்டா, அது இது எனப் பெரிய பட்டியல். பசிக்குதோ பசிக்கலையோ சாப்பிட்டு விடுவது 11 மணியானாலும் சரி. இரவில்தான் அதிக உணவகங்கள் திறந்து கிடக்கின்றன. எப்படி மற்ற உயிரினங்களுக்கு 6 மணிக்கு மேல் பசிக்காதோ அதுபோலச் சூரியன் மறைந்த பின்னர் மனிதனுக்கும் பசிக்காது. ஆனால், நாம் தான் ஃபுல்லாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளைச் செரிக்கவே 4-5 மணி நேரம் ஆகும். 10 மணிக்கு இரவு சாப்பிட்டு விட்டு 11.30 அல்லது 12 மணிக்கு மேல் தூங்குகிறோம். இரவில் தேவைப்படுகிற ‘மெலொட்டோனின் ஹார்மோன்’ சுரக்க முடியாமல் செய்து நோயாளியாக மாறுகிறோம்.
மேலும் உடலில் உள்ள நாளாமில்லா சுரப்பிகளுக்கு மருந்தே தூக்கம்தான். ஆனால் அந்தத் தூக்கத்தை இரவில் தூங்கினால் மட்டுமே பலன். காலை 8 மணி வரை தூங்குவதால் பலன் இல்லை. மறுநாள் மலம் கழிக்கவும் உடல் தயார் நிலையில் இருக்காது. காரணம் பசி இல்லாத போது சாப்பிட்டது. காலை, மதியம், இரவு என்று… மூன்று வேளையும் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டது. காலை இட்லி, தோசை, மதியம் சமச்சீர் உணவு, இரவு பரோட்டா, சப்பாத்தி போன்ற அனைத்தும் மாவு, பசை, அமிலம். மிக்ஸி ஜாரில் அரைத்த கதைத்தான். மலச்சிக்கலில் வந்து நிற்கும். ஒட்டு மொத்த மாவையும் புளிப்பையும் கெட்ட வாடையும் துர்நாற்றமாக ஆசன வாய் மூலம் வெளியேறுகிறது தினமும். இது பலருக்கும் நடக்கும் சம்பவங்கள்.
8 மணிக்குக் காலையில் எழுந்திருப்பவருக்கு 9.30 மணிக்கு பசிக்குமா? பசிக்காது. 6 மணிக்கு எழுந்திருந்தால் 9.30க்கு பசிக்க வாய்ப்பு உள்ளது. பசிக்காமல் சாப்பிடுகிறோம் காலையிலே. அதைபோல மதியம் 2 மணிக்குப் பசிக்கலாம். ஆனால், நாம் சாப்பிடுவது சமச்சீர் உணவு. அதனால் பாதி உணவு வயிற்றில் கெட்டுத்தான் போகும். மாலை, காபி, டீ, பஜ்ஜி, போண்டா, வடை, சாட் உணவுகள் சாப்பிடுகிறோம் பசிக்காமலே… இரவும் இதே கதைதான். உண்மையில் பசி 3-4 வேளைக்கு வருமா? கண்டிப்பாக வராது. பசி என்பது ஒரு நாளைக்கு 1-2 முறை மட்டுமே வரும். அதிகமான, மிக அதிகமான உடலுழைப்பு இருப்பவர்களுக்கு மட்டும் 3 வேளை பசி வரலாம். நொறுக்குத் தீனி - பசி எல்லாம் எடுக்க வாய்ப்பே கிடையாது. காலையில் குடிக்கும் காபி தொடங்கி நாம் ஒருநாளைக்கு 5-6 முறை உணவை வயிற்றில் நிரப்புகிறோம். அதுவும் பசி இல்லாமல்… பசிக்குச் சாப்பிடுவதா அல்லது நேரத்துக்கு வயிற்றை நிரப்புவதா எனச் சிந்தியுங்கள்.
தூக்கம் பார்த்தோம், பசி பார்த்தோம். இப்போது தண்ணீர். பசிக்காமல் உண்ட உணவே ஐந்து வேளை. இதனுடன் 2-3 லிட்டர் தண்ணீர். யூடியூப்பிலும் பத்திரிக்கையிலும் இன்னும் பிற செய்திகளில் ஒரு மனிதனுக்கான தண்ணீர் தேவை 2-3 லிட்டர் எனச் சொல்லப்படுகிறது. அதிலும் பல பிரபலங்கள் “என் சரும அழகுக்குக் காரணம், அடிக்கடி தண்ணீர் குடிப்பது” என்கின்றனர். உடலில் ஏற்கெனவே ஐந்து வேளை உணவு இதனுடன் 2-3 லிட்டர் தண்ணீரும். இப்போது நினைத்துப் பாருங்கள் வயிற்றின் நிலைமையை நம் உடலின் நிலைமையை… உடல் செரிக்குமா? உடல் கழிவை நீக்குமா? உடல் தன் செல்களை புதுப்பிக்குமா? உடல் என்ன செய்ய வேண்டும்? உடல் எந்த வேலையைச் செய்யும்? எல்லாமே பாதிப் பாதித்தான் செய்யும்.
உணவு வயிற்றில் விழுந்ததும் செரிக்கச் சென்றுவிடும். கழிவு நீக்குவதை அந்த நேரத்தில் நிறுத்தும். பின்னர், செரித்த பிறகு கழிவு நீக்கம் தொடரும். உடனே நாம் பசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். மீண்டும் உடல் செரிக்க வேண்டும். இப்போது கழிவு நீக்கத்துக்குத் தடை… இதே கதை தொடர தொடர, அப்போது கழிவுகள் அதிகளவில் சேரும். உணவு செரிக்கவே உடலில் ஆயுள் பாதியாகிறது. உடலின் ஆற்றல் செலவாகிவிடுகிறது. கழிவு நீக்கத்துக்கு நாம் நேரமே கொடுப்பது இல்லை. செரிமானம், செரிமானம், செரிமானம்… இதற்கே உடல் நேரம் செலவிட்டால்… கழிவு நீக்கத்துக்கு எப்போது? இதன் விளைவுதான் “நோய்கள்’. சர்க்கரை முதல் புற்றுநோய் வரை எல்லாமும். சீரற்ற வாழ்வியலும் தவறு; உணவுகளும் தவறு… மருந்துகளுக்கும் மருத்துவர்களுக்கு மட்டுமே நம் பணம் செலவாகி நம் வாழ்நாள் கழிகிறது. தண்ணீர் எப்போது தேவையோ, அதைத் தாகத்தால் உடல் வெளிப்படுத்தும். அப்போது மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். ஒவ்வொரு உடலின் தேவை பொறுத்துத் தண்ணீர் அளவு மாறுப்படும். எல்லோருக்கு 2-3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது. தாகத்தைப் பின்பற்றினாலே போதும், உடலுக்குத் தேவையான தண்ணீரை உடலே எடுத்துக்கொள்ளும்.
பசி, தாகம் இவற்றைக் கவனித்துச் சாப்பிடுங்கள்; குடியுங்கள். பசிக்காமல் சாப்பிடக்கூடாது. மிகை உணவு ஆபத்து! குறை உணவு வாழ்வில் நாம் இல்லை; மிகை உணவு வாழ்வியலில்தான் புதையுண்டு கிடக்கிறோம். தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. ‘மோனோ டயட்’ சிறந்தது. அதாவது எளிமையான தனிச்சீர் உணவு. இதைப் பின்பற்றுவதே சரி. இரவில் தூக்கத்துக்கு மட்டுமே அனுமதி. மொபைல் போன்களுக்கு அல்ல… தினசரி நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொண்டாலே நோய்கள் இல்லாமல் வாழ முடியும்.