2008-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக 38 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் உள்ள 21 இடங்களில் ஒரு மணி நேரத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்ததுரிதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். 56 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்துக்கு ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 13 ஆண்டுகளாகச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த சம்பவத்துக்காக 78 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 49 பேர் குற்றவாளிகள் எனக் கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 49 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியானது. அரசு தரப்பு வழக்கறிஞர் அழுத்தம் கொடுத்ததால், நீதிபதி ஏ.ஆர்.படேல் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 38 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மரணதண்டனைகளை நீக்குவது அல்லது குறைப்பது குறித்து உலக அரங்கில் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரணதண்டனை வழங்குவது அதிர்ச்சிகரமானதாக உள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டது முதல் நீதிமன்றம் மற்றும் பிற முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார். சிறப்பு நீதிமன்றத்தில் 1100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது, 28 சாட்சிகள் மட்டுமே முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டன. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு 20 ஆயிரமும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.