கெளதம் அதானி Vs முகேஷ் அம்பானி: இந்திய 5ஜி சந்தையை பிடிக்க நடந்த போட்டி - விரிவான தகவல்கள்

இந்தியாவில் எத்தனை விரைவாக 5ஜி பரவலாகும்... மக்கள் அதிக விலை கொடுத்து 5ஜிக்கு மாறுவார்களா? காலம் விடைசொல்லும்.
Ambani and Adani
Ambani and AdaniNewsSense
Published on

இந்தியாவில் கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று (ஆகஸ்ட் 2, செவ்வாய்க்கிழமை) ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஏலத்தில் அரசு 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொண்டு வரப்பட்டன. அதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை (அரசு ஏலம் விட்டதில் சுமார் 71 சதவீதம்) பல நிறுவனங்களால் 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளது.

40 சுற்றாக நடந்த ஏலத்தில் வென்றவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். மேலும் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ள 5ஜி அலைக்கற்றை வைத்தே ஒட்டுமொத்த நாட்டுக்கும் 5ஜி சேவையை வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டு இந்திய டெலிகாம் துறையில் அதிரடியாகக் கால் எடுத்து வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் அதிக 5ஜி அலைக்கற்றையை ஏலம் கோரியுள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிTwitter

இந்தியாவின் 22 டெலிகாம் சரகங்களில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் ஜியோ மட்டும் (700 மெகாஹெர்ட்ஸ், 800 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 3300 மெகாஹெர்ட்ஸ், 26 ஜிகாஹெர்ட்ஸ்) என 24,740Mhz அளவுக்கான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளது. அதற்கு 88,078 கோடி ரூபாயை அரசுக்குச் செலுத்த உள்ளது.

பார்தி ஏர்டெல் மொத்தம் 19,867 MHz அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது. அதற்கு அரசுக்கு 43,084 கோடி ரூபாயை செலுத்த உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பெருத்த நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளை மட்டுமே ஏலத்தில் எடுத்தது.

கெளதம் அதானி தலைமையிலான அதானி டேடா நெட்வொர்க்ஸ் வெறும் 400 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 212 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

Ambani and Adani
அம்பானி, அதானி மற்றும் ஒரு தமிழர் : இவர்கள்தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்
கெளதம் அதானி
கெளதம் அதானிTwitter

கெளதம் அதானி ஏலத்தில் எடுத்திருப்பது தனியார் அலைக்கற்றை என்றும், அது இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற சில பகுதிகளில் மட்டுமே செயல்படும் என்று பிபிசி வணிக பிரிவின் ஆசிரியர் நிகில் இனாம்தார் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமம் மிகப்பெரிய அளவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் கெளதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 112 பில்லியன் டாலரோடு பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

இப்போதைக்கு அதானி குழுமத்துக்கு தனியார் அலைக்கற்றை சந்தையைத் தவிர பொதுமக்களுக்கான அலைக்கற்றை சந்தைகளில் கால்பதிக்க விருப்பமில்லையெனக் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Ambani and Adani
கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு

எதிர்காலத்தில் வரும் 5ஜி அலைக்கற்றை ஏலங்களில் அதானி குழுமம் அலைக்கற்றைகளை வாங்கினால் அது சந்தையில் ஒரு போட்டியை ஏற்படுத்தும்... மேலும் அதானி குழுமம் சராசரி வாடிக்கையாளர் மொபைல் சேவைகளில் கால்பதிக்கவும் வழிவகுக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை இந்திய டெலிகாம் சந்தை என்பது தன்னுடைய களமெனக் கருதி வந்த அம்பானிக்கு இது ஒரு எதிர்பாராத போட்டியாக இருந்திருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் நாடு முழுக்க ஃபைபர் கட்டமைப்பு இருப்பதாலும், உலக அளவில் வலுவான தொழில்நுட்பம் சார்ந்த வணிக சூழலியல் அமைப்பு இருப்பதால் மிகக் குறைந்த காலத்துக்குள் தன் 5ஜி சேவையைத் அமல்படுத்த முழுமையாகத் தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் தரப்பிலிருந்து வெளியான செய்தியறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ambani and Adani
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி : ரிலையன்ஸ் ரீடெயிலின் தலைவராகிறாரா இவர்?

ரிலையன்ஸ் ஜியோவின் தனித்துவமான 700 மெகாஹெர்ட்ஸ் கட்டமைப்பால், அவர்களால் மட்டுமே இந்தியா முழுக்க 5ஜி சேவையை வழங்க முடியும் என மணி கண்ட்ரோல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதால், டெலிகாம் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிக்க வழிவகுக்கும். அது அவர்களின் வருவாய் அதிகரிப்பில் எதிரொலிக்கும் என நொமுரா நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

5ஜி ஏலம் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... அதிக விலை காரணமாக இந்திய சந்தையில் 5ஜி அத்தனை விரைவாக பரவலாகாமல் போகலாம். அதோடு இந்தியாவில் வெறும் 7% பேர் மட்டுமே 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் எத்தனை விரைவாக 5ஜி பரவலாகும்... மக்கள் அதிக விலை கொடுத்து 5ஜிக்கு மாறுவார்களா? காலம் விடைசொல்லும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com