பிப்ரவரி மாதம் 5ம் தேதி காஷ்மீர் விடுதலைக்காகக் காஷ்மீர் தினமாகப் பாகிஸ்தானில் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான் டீலரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டது. நெட்டிசன்கள் #BoycottHyundai என ட்ரெண்ட் செய்தனர். இதனையடுத்து ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோரியது. ஹூண்டாய் நிறுவனத்தைத் தொடர்ந்து கேஎஃப்சி-யும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ளது.
துரித உணவகங்களை நடத்தி வரும் நிறுவனமான கேஎஃப்சி-யின் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கு, “உங்கள் எண்ணங்களை விட்டுவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், வரும் ஆண்டுகள் உங்களுக்கு அமைதியைக் கொண்டுவரும்” எனத் தலைப்பிடப்பட்ட “காஷ்மீர் காஷ்மீரியர்களுக்கே” என்ற புகைப்படத்தைப் பகிர்ந்தது.
இதனைத்தொடர்ந்து #BoycottKFC என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக, அந்த பதிவு நீக்கப்பட்டது. எனினும் அதன் ஸ்க்ரீன்ஷாட்டை நெட்டிசன்கள் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.
இதனால் கேஎஃப்சி நிறுவனம் மன்னிப்பு கேட்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டது. அந்த பதிவில், “வெளிநாட்டில் கணக்கில் பதிவிடப்பட்ட கருத்துக்கு நாங்கள் ஆழ்ந்த மன்னிப்புகோருகிறோம். நாங்கள் இந்தியாவை மதிக்கிறோம் மேலும் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையுடன் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது. எனினும் நெட்டிசன்கள் தொடர்ந்து பெரு நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.