மஹராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு மணமகன் வரத் தாமதமானதால் சொந்தக்கார பையனுக்குப் பெண்ணை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் மணப்பெண்ணின் தந்தை.
புல்தானா மாவட்டத்திலுள்ள பங்ரா கிராமத்தைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஏப்ரல் 22ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மணப்பெண்ணும் இதர விருந்தினர்களும் காத்திருந்த நிலையில் திருமண நேரமான மாலை 4 மணி வரையிலும் மணமகன் மண்டபத்துக்கு வரவில்லை.
புஷ்பா பட அல்லு அர்ஜுன் போலக் கடைசி நேரத்தில் மணமகன் வருவார் எனக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இரவு 8 மணி வரை மணமகன் மண்டபம் இருந்த தெருவுக்குக் கூட வரவில்லை. மாறாக மணமகன் அவரது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அரட்டை அடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் மட்டும் வந்தது.
“8 மணிக்கு மேல் மண்டபத்துக்கு வந்த மணமகன் வந்ததுமே சண்டையிடத் தொடங்கினார். எங்கள் பெண்ணை வேறு பையனுக்குத் திருமணம் செய்து வைத்தோம்” என்கிறார் பெண்ணின் தாய்.
கிராமத்துப் படத்தின் பழைய கதை போல இருந்தாலும் இது நிஜமாகவே அந்த கிராமத்தில் நடந்திருக்கிறது. மணமகன் குடித்துவிட்டு ஆட்டம் போட மண்டபத்திலிருந்த மற்றொரு இளைஞருக்குத் தனது பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார் பெண்ணின் தந்தை.
“எனது பெண்ணுக்கு ஏப்ரல் 22ம் தேதி கல்யாணம் வைத்திருந்தோம். மணமகன் குடித்துவிட்டு அரட்டை அடிப்பதில் பிஸியாக இருந்தார். 4 மணி திருமணத்துக்கு 8 மணிக்கு மண்டபத்தை வந்தடைந்தார். அதனால் உறவுக்கார பையனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்தேன்” என்று கூறியிருக்கிறார் பெண்ணின் தந்தை.
திருமணத்திற்காக மணிமேடை ஏறிய மணப்பெண்ணோ அவருக்குத் தாலி கட்ட வேண்டியவர் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதால் வேறொரு நபருக்குக் கழுத்தை நீட்டியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com