கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிசம்பர் 29-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் அதிமுக வில் ஏற்பட்ட உட்கட்சி அரசியலால், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதுதொடர்பான அறிவிப்பு முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. இதன்பிறகு
சசிகலா தரப்பில் ' மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டிய பொதுக்குழு கூட்டமும், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறி மனு அனுப்பப்ட்டது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் அந்த மனுவை நிராகரித்தனர். இதன் மூலம் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 16 -ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியையொட்டி வைகை அணையில் தண்ணீர் திறப்பது வழக்கம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது.
இந்த அணையில் நேற்றைய நீர்மட்டம் 68.54 அடி இருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற 16-ம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான துறை ரீதியான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. நேற்று பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில அறிவிப்புகளை வெளியிட்டார். 2022-23-ம் கல்வி ஆண்டில் ரூ.100 கோடி மதிப்பில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியை சரளமாகப் பயன்படுத்த வழிவகை செய்ய 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சென்னையில் ரூ.7 கோடி மதிப்பில் சீர்மிகு பள்ளி அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய பிரதமராக ஷபாஷ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றார். இந்நிலையில், ' உடனடியாக தேர்தல் நடத்த நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். முன்னேற்றம் காண அதுவே ஒரே வழி. பிரதமராக யார் வர வேண்டும் என்பதை நேர்மையான தேர்தல் மூலம் மக்கள் முடிவு செய்யட்டும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் பதிவிட்டிருக்கிறார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றனர். அமெரிக்க ராணுவ, வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். அதையொட்டி, வாஷிங்டனில் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ நிறுவனம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான ‘ரேதியான்’ ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தியாவில் நடைமுறையில் உள்ள கொள்கைகளை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதிலிருந்து ‘உலகத்துக்காகத் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை நோக்கி நடைபோடுமாறு அந்த நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில், ஐதராபாத் சன் ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.