வரும் ஆகஸ்டு 15 இந்தியாவின் 75வது சுதந்திர தினமாகும். இதற்காக மோடி தனது சமூக வலைத்தள Profile படத்தை தேசியக் கொடியாக மாற்றி மக்களையும் மாற்றச் சொன்னார். ராகுல் காந்தியோ பதிலுக்கு நேரு தேசியக் கொடியை பிடித்திருக்கும் படத்தை போட்டிருக்கிறார். எந்தப் பிரச்னைக்கும் நேரு காலத்திலிருந்து பாஜகவிற்கு காங்கிரசின் பதிலடி இது.
இந்த அரசியல் சண்டை ஒருபுறமிருக்க வரும் சுதந்திர தினத்திற்காகக் கோடிக்கணக்கான தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் புயல் வேகத்தில் நடந்து வருகின்றன.
சூரத்தில் உள்ள ஒரு ஜவுளித் தொழிற்சாலையின் உள்ளே, வெள்ளைத் துணியின் ஒரு சுருள் தொடர்ந்து உருட்டுதல், சாயமிடுதல் மற்றும் அச்சிடும் இயந்திரத்தின் மீது பாய்கிறது. வழியில், குங்குமப்பூ மற்றும் பச்சை சாயங்கள் சேர்க்கப்படுகின்றன.
பின்னர் அசோக சக்கரம் முத்திரையிடப்படுகிறது. மறுமுனையில், காத்திருப்பு தள்ளுவண்டியில் விழும் ரீம்களில் மூவர்ணக் கொடி வெளி வருகிறது. அச்சகத்தில் ஒரு நாளிதழ் தயாராவது போல தேசியக் கொடி தயாராகி வருகிறது.
உரிமையாளர் சஞ்சய் சரவாகி தனது தொழிற்சாலைக்கு ஒரு கோடி கொடிகள் ஆர்டர் கிடைத்திருப்பதாக கூறினார். “ஹர் கர் திரங்கா" (Har Ghar Thiranga) என்ற பிரச்சார இயக்கத்தை எடுத்துள்ள ஒன்றிய அரசு நாடு முழுவதும் 24 கோடி வீடுகளைத் தெரிவு செய்து ஆகஸ்டு 13 முதல் 15 வரை தேசியக் கொடிகளை பறக்கவிட இருக்கிறது. 75வது சுதந்திர தினத்தை ஒட்டித்தான் இந்த பிரம்மாண்ட இயக்கத்தை இந்திய அரசு எடுத்திருக்கிறது.
இயந்திரங்கள் மூலம் பாலியஸ்டர் (Polyester)துணிகளை வைத்து தேசியக் கொடிகளை தயாரிக்கலாம் என்று கடந்த ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு குஜராத்தின் சூரத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு அரசு மூலம் கிடைத்த மிகப்பெரிய ஆர்டர் இதுவாகும்.
சூரத்தின் பாஜக எம்.பி.யான ஜவுளி மற்றும் ரயில்வேக்கான ஒன்றிய அரசின் இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தி கூறுகையில், “நிறுவனங்கள் தங்கள் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) நிதியை இந்தக் கொடிகளுக்குப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். மேலும் கொடிகளை மக்கள் வாங்க வைக்க முயற்சிக்கிறோம். ஒரு கொடிக்கு (20”x30”) விலை ரூ.25 என வைத்துள்ளோம். இலவசமாக கொடுத்தால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால்தான் விலைக்கு விற்கிறோம்" என்றார்.
ஜர்தோஷின் கூற்றுப்படி, "சூரத் தவிர, கொடி தயாரிப்பு பெரிய அளவில் நொய்டா (உ.பி.), மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவிலும் நடக்கிறது. அதே நேரம் சூரத்தின் ஜவுளித் தொழிற்துறை பிரம்மாண்டமாக இருப்பதால் கொடி தயாரிப்பின் தேவையை அது பூர்த்தி செய்யும். நாங்கள் (ஜவுளி மற்றும் கலாச்சார அமைச்சகங்கள்) ஒரு அமைப்பை உருவாக்கி, பிரச்சாரத்திற்காக 11 கோடி கொடிகளை இலக்காகக் கொண்டுள்ளோம். இதேபோல், மாநில அரசுகள்,மற்ற அமைச்சகங்களும் இலக்குகளைப் பெற்றுள்ளன. நாட்டில் 24 கோடி வீடுகளில் கொடி சென்றடைவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
ஆதித்யா பிர்லா குழுமம் ஒரு கோடி கொடி ஆர்டரை பெற்று, வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சரவாகியின் நிறுவனத்திடம் கோரியிருக்கிறது. இதற்கென 3,000 பெண்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளதாக சரவாகி கூறுகிறார்.
“நாங்கள் ஜூலை 1ஆம் தேதி வேலையைத் தொடங்கினோம். எங்கள் தொழிலாளிகள் இரண்டு ஷிப்டில் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள். கொடிகள் தயாரிக்க தயாரிக்க அவற்றை லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகிறோம்," என்று அவர் கூறினார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் கிராசிம் இண்டஸ்ட்ரீஸின் சந்தைப்படுத்தல் தலைவர் ராஜேஷ் வதாலியாவின் கூற்றுப்படி, விற்பனையாளர்களை மத்திய ஜவுளி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. "மேகாலயா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் கொடிகளை வழங்க அமைச்சகத்திடம் இருந்து எங்களுக்கு ஆர்டர் கிடைத்தது." என்றார் அவர்.
இதற்கென ஆதித்யா குழுமம் சூரத், தில்லி, கொல்கத்தா, அகமதாபாத், பஞ்சாப் ஆகிய இடங்களில் பல நிறுவனங்களுக்கு கொடி தயாரிக்க ஆர்டர் கொடுத்து வேலைகளை துரிதப்படுத்தி வருகிறது.
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் உள்ள சில்வாசாவைச் சேர்ந்த அலோக் இண்டஸ்ட்ரீஸ் இரண்டு கோடி கொடிகளுக்கு ஆர்டர் பெற்றிருக்கிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி துளசி தேஜ்வானி கூறுகையில், “ஜூலை 15ஆம் தேதி ஆர்டரைப் பெற்றோம், ஆகஸ்ட் 8ஆம் தேதி அமைச்சகம் அளித்த காலக்கெடுவாகும். ஆர்டர் அதிகமாக இருப்பதால், சூரத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்கிறோம். மகாராஷ்டிராவில் உள்ள பீவண்டி மற்றும் மாலேகான் ஆகிய இடங்களிலிருந்தும், சூரத்திலிருந்தும் துணி பேல்களை வாங்கி, சூரத்தில் சாயமிட்டு அச்சிடுகிறோம்,” என்றார்
தேஜ்வானி கூறுகையில், “இந்த தொழிற்சாலைகளிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொடிகள் தொடங்கி, இப்போது ஒரு நாளைக்கு எட்டு லட்சம் கொடிகள் வரை தயாரிக்கிறோம்" என்றார்.
“மூவர்ணக் கொடியை வெவ்வேறு மாநிலங்களுக்கு வழங்குமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது, அந்தந்த மாநில அரசுகள் எங்களுக்குப் பணம் கொடுக்கும்,” என்றும் அவர் கூறினார்.
அகமதாபாத்தில், கொடி தயாரிக்கும் பிரிவுகள் பல வணிக நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளன. “இவ்வளவு பெரிய அளவில் ஆர்டர்கள் பெறுவது இதுவே முதல் முறை. பொதுவாக, சுதந்திர தினத்திற்கு, ஆண்டுக்கு 10-15 லட்சம் கொடிகளை உருவாக்குவோம். மதுரா (உ.பி.), சூரத் (குஜராத்) மற்றும் அகமதாபாத் (குஜராத்) ஆகிய இடங்களிலிருந்து எங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன," என்று பழைய நகரப் பகுதியைச் சேர்ந்த தையல்காரரான 40 வயதான இம்ரான் கான் கூறினார்.
இப்படி நாடு முழுவதும் கொடி தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது சமூக பொறுப்பு கடமை என்ற அம்சத்தில் இந்த கொடிகளுக்கான செலவை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கின்றன. மீதியை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இப்படி கார்ப்பரேட் மற்றும் அரசு கூட்டணியில் 75வது சுதந்திர தினத்திற்கான தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust