கௌதம் அதானி : இரண்டே ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்த சொத்து மதிப்பு - எப்படி?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், லூயி விட்டன் (Louis Vuitton) நிறுவனத்தின் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட என மூன்று பேரைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கிறார் கௌதம் அதானி.
அதானி
அதானிTwitter
Published on

சம்பளம் வாங்குபவர், அடுத்த 50 ஆண்டுகளில் சம்பளம் வாங்கி பார்க்கும் விஷயங்களை, வீடு வாசல், கார், வெளிநாட்டுச் சுற்றுலா போன்ற விஷயங்களை, ஒரு நல்ல வியாபாரி ஐந்து ஆண்டுகளில் ஆண்டு அனுபவித்துவிடுவார் என ஊர் பக்கம் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.

இதை தன் சொந்த வாழ்வில் பல பணக்காரர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். அதில் சமீபத்தைய சிறந்த உதாரணம் கெளதம் அதானி.

இன்று இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தன் கல்லூரி படிப்பை கூட முழுமையாக நிறைவு செய்யாதவர். சிறுவயதிலேயே பல்வேறு தொழில்களை செய்து சில பல தோல்விகளை கண்ட கெளதம் அதானி, பின்னாளில் அதானி குழுமத்தைத் தொடங்கி... இன்று இந்தியாவின் பல முக்கியத் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கத் தொழில், பசுமை எரிசக்தி என அவர் வியாபாரம் செய்யாத துறைகள் இல்லை என்கிற அளவுக்கு இந்திய தொழிற்துறையில் தனக்கென ஒரு தனி தடத்தைப் பதித்திருக்கிறார்.

கௌதம் அதானி
கௌதம் அதானிtwitter

நான்காவது உலக பணக்காரர் அதானி

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியோடு ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்கிற முக்கிய இடத்துக்குப் போட்டிப் போட தொடங்கினார் கௌதம் அதானி. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி கௌதம் அதானியின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகரித்தது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தை கெளதம் அதானியும், 11-வது இடத்தை முகேஷ் அம்பானியும் பிடித்திருந்தனர்.


ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தரவுகள் படி 2020ஆம் ஆண்டு கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 2021ஆம் ஆண்டு 50.5 பில்லியன் டாலராகவும், தற்போது ஆகஸ்ட் 25 ஆம் தேதி நிலவரப்படி 139.6 பில்லியன் அமெரிக்க டாலராகவும் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்து, தற்போது ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், லூயி விட்டன் (Louis Vuitton) நிறுவனத்தின் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட என மூன்று பேரைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கிறார் கௌதம் அதானி.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், நிதி உலகின் பிதாமகரான வாரன் பஃபெட், கூகுள் நிறுவனர் செர்ஜி பிரைன்... ஆகியோர்கள் கூட கௌதம் அதானிக்குப் பிறகு தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இரு ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்த செல்வம்

பொதுவாகவே உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் பில்லியனர்களின் சொத்து மதிப்பு, குறிப்பிட்ட சில நிறுவனங்களில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விலை உயர்வினால் அதிகரிக்கும் அல்லது குறையும்.

அதானி குழுமத்தின் ஏழு பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதனுடைய சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்ததால் தான் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் விண்ணைத் தொட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அதிகரித்த பங்குகளின் விலை

இதே இரண்டு ஆண்டு காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 160 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் மிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருந்தும் முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகாததற்கு ஒரு முக்கிய காரணம், அவருடைய ரிலையன்ஸ் ஜியோ ப்ளாட்பார்ம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் என்கிற இரண்டு அதிக வருவாயை ஈட்டும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாதது தான் என்று கூறப்படுகிறது.

அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரித்து இருக்கின்றன.

அதானி என்டர்பிரைசஸ் பங்குகளின் விலை சுமார் 7 மடங்கும், அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளின் விலை சுமார் 5 மடங்கும் விலை அதிகரித்துள்ளன. 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்செக்ஸ் குறியீடு சுமார் 120 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.

அம்பானி - அதானி
அம்பானி - அதானிTwitter

முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும்

இத்தனையும் சாதித்த மனிதரின் வாழ்க்கை அத்தனை எளிதாக இல்லை.

இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகத் திகழும் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவருமே குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

முகேஷ் அம்பானி பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து ரசாயன தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். ஸ்டான்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிப்பை நிறைவு செய்யாமல் தன் தந்தையோடு வியாபாரத்தில் குதித்தவர். தந்தை திருபாய் அம்பானி காலமான பிறகு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைத்த பிறகு, தன்னுடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை டெலிகாம், சில்லறை வணிகம்... என பல முக்கிய துறைகளில் மிகப்பெரிதாக வளர்த்தெடுத்தவர் முகேஷ் அம்பானி.

இதற்கு அப்படியே நேர்மாறாக கௌதம் அதானி, மிக எளிமையான பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பட்டப்படிப்புக்குச் சேர்ந்தும் தன் கல்லூரி படிப்பை நிறைவு செய்ய முடியாமல், மும்பையில் வைர வியாபாரம் செய்யத் தொடங்கியவர். பின்னாளில் பிளாஸ்டிக் என சில பல தொழில்களைச் செய்யத் தொடங்கி, அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதானி
டாடா குழுமம் உருவாக்கிய இந்திய குடியரசுத் தலைவர்- ஒரு வரலாற்றுப் பதிவு

இரு பெரும் பணக்காரர்களின் ஒற்றுமை

இன்று அதானி குழுமம் நிலக்கரி, மின்சாரம், ரியல் எஸ்டேட், விவசாய பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதி சேவை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர், பசுமை எரிசக்தி என பல தளங்களில் அதானி குழுமத்தை வளர்த்தெடுத்து இருக்கிறார்.


இந்த இரு பெரும் பணக்காரர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை என்னவெனில் அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இரண்டுமே மரபுசார் எரிசக்தி துறையில் தங்கள் சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பியவர்கள். இன்று இந்த இரு பெரும் நிறுவனங்களுமே பசுமை எரிசக்தியை நோக்கி தங்கள் நிறுவனத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதானியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு, உலக அரங்கிலிருந்து பல கூட்டாளிகளை தன்னை நோக்கி ஈர்த்தது தான் ஒரு மிக முக்கிய காரணம் எனலாம்.

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதானி குழுமம் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சில நிலக்கரி சுரங்கங்களை வாங்கியது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டோட்டல் எஸ் இ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வார்பர்க் பின்கஸ் ஆகிய நிறுவனங்கள் அதானி குழுமத்தின் எரிசக்தி நிறுவனங்களில் முதலீடு செய்தன.

கடந்த மே மாதம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சாஃப்ட் பேங்க் என்கிற நிறுவனத்தோடு 3.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு தன்னுடைய மரபுசாரா எரிசக்தி வியாபாரத்தை திரும்ப வாங்கிக் கொள்ள ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.

அதானி - மோடி

கௌதம் அதானிக்கும் தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கும் ஒரு நல்ல நட்பு இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடியின் பல வணிகத் தலைவர்கள் தொடர்பான பயணங்களில் கௌதம் அதானி அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான் என பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் அல்லது வியாபாரிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக அரசின் கொள்கைகளை மாற்றுவது அல்லது அந்த குறிப்பிட்ட தொழிலதிபர் அல்லது வியாபாரிக்கு சாதகமாக நடந்து கொள்வதை Crony Capitalism என்பர்.

க்ரோனி கேப்பிட்டலிசம்

க்ரோனி கேப்பிட்டலிசத்தை இந்தியாவில் அரங்கேற்றுவதாக, அதானி குழுமத்தின் மீது வைக்கப்படும் அனைத்து கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களையும் மறுக்கிறார் கௌதம் அதானி.

பணக்காரர் பட்டியலில் யார் யார்?

ஆசியாவிலேயே கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு பிறகு சோங் சான்ஷன் (zhong Shanshan) என்கிற சீன தொழிலதிபர்தான் சுமார் 70 பில்லியன் டாலரோடு 14 வது இடத்தில் இருக்கிறார். இவர் குடிநீர் பாட்டில்கள் மற்றும் ஃபார்மா பொருட்களை விற்று உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இந்த மூவரை தவிர உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 25 இடங்களில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி உலக பணக்காரர்கள் பட்டியலில் 25 பில்லியன் டாலரோடு 47வது இடத்தையும், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார் 23.3 பில்லியன் அமெரிக்க டாலரோடு 51ஆவது இடத்தையும் படித்திருக்கிறார்கள்.


அவென்யூ சூப்பர் மார்ட் (டி மார்ட்) நிறுவனத்தின் தலைவர் மற்றும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் குருவாகக் கருதப்படும் ராதா கிஷன் தமானி 21.5 பில்லியன் டாலரோடு உலக பில்லியனர்கள் பட்டியலில் 63ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரும் தன்னுடைய கல்லூரிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் 100ஆவது இடத்தில் இரும்புத் துறையின் பிதாமகர் லக்ஷ்மி மித்தல் 16 பில்லியன் டாலரோடு வீற்றிருக்கிறார்.

அதானி
Rakesh Jhunjhunwala: இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கபட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com