இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணன் அவர்களை நினைவிருக்கிறதா? ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வி மூலம் தன்னையும் தன் நாட்டையும் உயர்த்தியவர். குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியல்ல என்பதை தன் செயலில் காட்டியவர். ஒரு இந்திய அயலகப் பணி அதிகாரியாக, இந்தியாவை சர்வதேச அரங்கில் பல நெருக்கடி சூழல்களிலிருந்து விடுவித்தவர், வழிநடத்தியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் கே ஆர் நாராயணன்.
அவர் தான் டாடா குழுமத்தின் உதவித் தொகை மூலம் லண்டன் சென்று படித்து பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.
மிக ஏழ்மையான ஒரு மீனவ சமூகத்தில் கேரளாவில் பிறந்து, குறைந்தபட்ச பள்ளிக் கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல், புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் சிரமப்பட்டுப் படித்தவர். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பி ஏ ஹானர்ஸ், எம் ஏ ஆங்கில இலக்கியம் படித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவருக்கு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் பத்திரிகையாளராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் மனிதருக்கு லண்டன் வரை சென்று படிக்க வசதி இல்லை. அப்போது (1944 - 45 காலத்தில்) ஜே ஆர் டி டாடாதான், டாடா குழுமத்தின் இளம் தலைவராக நிர்வகித்து வந்தார்.
கே ஆர் நாராயணன் என ஒரு திறமையான மாணவன் பல்வேறு சிரமங்களைக் கடந்து படித்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அவருக்கு வெளிநாடு செல்ல உதவித் தொகை கொடுத்து உதவுமாறும் ஜே ஆர் டிக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் வந்தது.
ஜே ஆர் டி டாடாவும், ஜே என் டாடா எண்டோவ்மென்ட் உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் உதவ முன்வந்தார். 1892ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் பிதாமகர் ஜாம்செட்ஜி டாடாவால், இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க உதவும் திட்டம் நிறுவப்பட்டது. அது தான் மேலே குறிப்பிட்ட ஜே என் டாடா எண்டோவ்மென்ட் திட்டம்.
அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கே ஆர் நாராயணன் நேர்காணல் செய்யப்பட்டார். நேர்காணல் செய்தவர்களுக்கு கே ஆர் நாராயணனின் பதில்கள் திருப்திகரமாக இருந்தன. அதோடு 9 பேர் கொண்ட பெரிய குடும்பத்தில், அவரது தந்தைக்குச் சராசரி மாத வருமானமே 20 ரூபாய் மட்டுமே வந்து கொண்டிருந்தது, அவரது ஏழ்மையின் உச்சத்தை வெளிப்படுத்தியது. அவருடைய பதில்கள் மற்றும் அவரது குடும்பச் சூழல் காரணமாக, அவருக்கு டாடா குழுமத்தின் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.
16,000 ரூபாய் உதவித் தொகையாகவும், 1000 ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டது. இந்த உதவி மூலம் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் பி எஸ் சி ஹானர்ஸ் படித்தார். அக்கல்லூரியில் உலகப் புகழ்பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹரால்ட் லாஸ்கியிடம் பாடம் படித்தவர் கே ஆர் நாராயணன்.
இதே ஹரால்ட் லாஸ்கி தான், அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு, கே ஆர் நாராயணன் குறித்து ஒரு அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தார். அக்கடிதம் மூலம் தான் நேரு, கே ஆர் நாராயணனை இந்திய அயலகப் பணியில் சேரச் சொன்னார்.
இப்படித் தான் கே ஆர் நாராயணன், இந்திய அயலகப் பணியில் சேர்ந்தார். பின்னாளில் 'இந்தியாவின் சிறந்த அயலக ராஜரீக அதிகாரி' என ஜவஹர்லால் நேருவே பாராட்டிய மனிதர் கே ஆர் நாராயணன். சீனாவுக்கான இந்திய தூதர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என பல முக்கிய பதவிகளை, மிக நெருக்கடியான சூழலில் பொறுப்பேற்று திறம் படி கையாண்டவர்.
அவர் திறமைக்கு சான்றாக, 1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், 1997ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் நாட்டை வழிநடத்தினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust