குஜராத் பள்ளிகளில் பகவத்கீதை கற்றுத் தர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றுள்ளன. 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பகவத்கீதை பாடத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் ஜிட்டு வகானி பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சாரம், பழங்கால வரலாறு, நமது பாரம்பரியம் ஆகியவற்றைப் பறைசாற்றும் விதமாக இந்த நூல் இருப்பதால், அதைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
முதலில் பகவத்கீதை குறித்து பாடங்கள் எடுக்கப்படும். தொடர்ந்து அதிலிருக்கும் பாடல்கள், மந்திரங்கள் போன்றவை கற்றுக்கொடுக்கப்பட்டு அதை வைத்துத் தேர்வுகள், போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு கீதை படிப்பதற்கான ஆர்வம் தூண்டப்படும். இதற்காக மாணவர்கள் அனைவருக்கும் பகவத்கீதை வழங்கப்படும். என பட்ஜெட் கூட்டத்தொடரில் கூறப்பட்டது.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆழமாக பகவத்கீதை கற்றுக்கொடுக்கப்படும் என்றும் குஜராத் அரசு தெரிவித்திருக்கிறது. இதனை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்திருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் டோஷி, “முதலில் பாஜகவினர் பகவத்கீதையை படிக்க வேண்டும். குஜராத் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நிரப்பப்படாமலிருக்கும் 18,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அறிவியல் மற்றும் கணித ஆசிரியர் பற்றாக்குறையால் மூடப்படும் நிலையில் இருக்கும் 6000 கிராமப்புற கல்வி நிலையங்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் இந்த குறைபாடுகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே பாஜக பகவத்கீதை போன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது என்றும் பேசியுள்ளார்.