வியாசர்பாடி புதுநகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். சட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கொடுங்கையூர் எம்ஆர் நகர் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அப்துல் ரகீமை மறித்து, முகக்கவசம் சரியாக அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர். இதற்கு அப்துல் ரகீம் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது சைக்கிளைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நடந்தே கொடுங்கையூர் காவல் நிலையம் சென்ற அப்துல் ரகீமிடம் அபராதம் கட்ட கூறியதால் காவல்துறையினருடடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு நடந்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த காவலர்கள் மாணவரை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்துல் ரகீமின் பெற்றோர், நண்பர் தரப்பினர் காவல் நிலையம் சென்று கேட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மாணவரைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.
மாணவரை உள்ளாடையுடன் தனி அறையில் அடைத்து வைத்ததாகவும், காவலர்களின் ஷூவை சுத்தம் செய்ய வைத்ததாகவும் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் உலக மக்கள் அனைவரும் பல இழப்புகளைச் சந்தித்து வந்தனர். கொத்து கொத்தாக உயிர்கள் இறப்பதிலிருந்து தடுப்பூசிகள் நம்மைக்காத்தன. தடுப்பூசி பணிகள் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு முடிவு பெற்றது.
இந்த ஓராண்டில் 157 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது தடுப்பூசி இயக்கம். இதனை அங்கீகரிக்கும் விதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாண்டவியா அஞ்சல் தலை வெளியிட்டார். தற்போது கோவிட் ஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரவலாக செலுத்தப்பட்டு வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 15 வயதுக்கு மேலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கிச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்ட அதிமுகச் செயலாளராக உள்ள கப்பச்சி வினோத் மீது நில அபகரிப்பு புகார் அளித்துள்ளனர் அவர் உறவினரான கிருஷ்ணன் மற்றும் ரீனா தம்பதி.
“கப்பச்சி வினோத்தின் சித்தப்பாவான கிருஷ்ணன் கடந்த 8 ஆண்டுகளாகத் தனது தோட்டத்தைச் சரியாக பராமரிக்க முடியாமல் இருந்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி வினோத் அந்த சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். மேலும், அங்கு தோட்டத்தை பராமறிக்க சென்றால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” என தெரிவித்துள்ளார் ரீனா.
ஆனால், “ரீனாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதால் அவர்களுக்கு இடையில் சொத்து விஷயத்தில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் என்னைத் தேவையில்லாமல் உள்நுழைக்கிறார் ரீனா” என கூறியுள்ளார் வினோத்.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் பழங்குடியினர் காலணிகளில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பது வழக்கமாகியிருக்கிறது. பழங்குடியினர் பகுதியில் காவல்துறையினர் உரியப் பாதுகாப்பு வழங்காததால் போதை புழக்கம் அதிகமாகியிருக்கிறது. இதனால் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமையும் அதிகரித்ததால் கடந்த 2 மாதங்களில் 8 பெண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 6 பேர் இறந்துள்ளனர். அதில் இரண்டு பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இரு தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். அத்துடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியா வந்துள்ள வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தாத காரணத்தினால் இந்த போட்டியில் பங்கேற்க வந்த உலகின் நம்பர் 1 டென்னஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சினுக்கு (Novak Djokovic) அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவரின் விசாவையும் ஆஸ்திரேலியா அரசு அதிரடியாக ரத்து செய்தது.
இதனையடுத்து நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் தனக்கு உடல் ரீதியான பிரச்சனை இருப்பதாலும், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால்தான் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் நோவாக் ஜோகோவிச் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மறுபுறம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது., கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தற்போது ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பை ஜோகோவிச் மீறியுள்ளதாகவும், பொய்யான தகவலைக்காட்டி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்ததுடன் தீர்ப்பு வெளியான 30 நிமிடங்களில் தடுப்பு காவல் மையத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில் மீண்டும் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தார் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாாவ்கே. இதனால் தற்போது 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய விசாவை 2 முறை ரத்து செய்தது தொடர்பாக தற்போது நோவாக் ஜோகோவிச் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மறுபுறம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிடில் நாட்டில் அனுமதி மறுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஒபன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பரா என்பது சந்தேகமாகவே உள்ளது.