3 ஆண்டுகள், 1.2 லட்சம் கிமீ பயணம்: உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி - நெகிழ்ச்சி கதை

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து கொஞ்சம் மண்ணை பெற்று வந்து ஓர் நினைவகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம்.
Pulwama Attack Homage
Pulwama Attack HomageTwitter
Published on

இந்தியாவில் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தால் பெரும்பாலும் நாம் என்ன செய்வோம்? இறந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவிடுவோம், அதிகபட்சம் நம் தெருவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருக்கும் இடத்தில், அவரது படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்.

அவர்கள் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும், உயிரிழந்த ராணுவ வீரரின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு வேண்டும் என அரசாங்கங்களுக்கு கோரிக்கை வைப்போம்.

ஒரு சில நாட்கள் கழித்து வீர மரணம் அடைந்தவர் யார்? என்ன என்கிற விவரங்களை கூட நாம் மறந்து விடுவோம். ஆனால் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த உமேஷ் கோபிநாத் ஜாதவ்வுக்கு அப்படி இல்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புல்வாமா என்கிற இடத்தில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி ஆர் பி எஃப்) 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த சம்பவம் பெங்களூரில் ஓர் இசைப் பள்ளியை நடத்தி வந்த உமேஷ் கோபிநாத்தின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உமேஷ் கோபிநாத் தனி ஒருவனாக கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரிலிருந்து வெறும் 2000 ரூபாயுடன் தன் பயணத்தைத் தொடங்கினார்.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து கொஞ்சம் மண்ணை பெற்று வந்து ஓர் நினைவகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம்.

முதலாம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நினைவு தினம் வருவதற்கு முன்பே உமேஷ் கோபிநாத் கிட்டத்தட்ட இந்தியாவில் சுமார் 61,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்திருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி உமேஷ் கோபிநாத்தை மத்திய ரிசர்வ் காவல் படையினர் அமைப்பின் உயர் அதிகாரிகள் அழைத்துப் பேசினர். அப்போது, அவர் சேகரித்து வைத்திருந்த வீரமரணம் அடைந்தவர்களின் மண்ணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவை அத்தனையும் தற்போது லேட்புரா கேம்பில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களை தாண்டி உமேஷ் கோபிநாத் இந்தியாவிற்காக வீர மரணம் அடைந்த மற்ற ராணுவ வீரர்கள் வாழ்ந்த இடத்திற்கும் பயணிக்க தொடங்கினார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலான இந்த பயணத்தில் இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணித்திருக்கிறார். இந்திய தாய் திருநாட்டுக்காக வீர மரணம் அடைந்த 150 பேரின் குடும்பங்களை சந்தித்து பேசி இருக்கிறார். மத்திய ரிசர்வ் காவல் படையிடம் முன்பு சேகரித்த மண்ணை எல்லாம் கொடுத்த பிறகு மேற்கொண்ட பயணங்களில் சேகரித்த மண் தற்போது இந்திய ராணுவத்திடம் சமர்ப்பிக்க விரும்புகிறார் உமேஷ் கோபிநாத்.

கடந்த ஜூலை 25ஆம் தேதி டெல்லியில் தன் பயணத்தை நிறைவு செய்த உமேஷ் கோபிநாத் அவர்களை ஆகஸ்ட் 10ஆம் தேதி தேசிய போர் நினைவகத்திற்கு வருமாறு அரசு தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அக்கூட்டத்தில் இந்திய ராணுவம் சார்பாக உயிர் தியாகம் செய்த பலரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அதுபோக வீர மரணம் அடைந்த 150 பேர் வீட்டிலிருந்து சேகரித்த மண்ணையும் ராணுவ உயர் அதிகாரிகளிடம் கொடுக்க அவர்களை சந்தித்து பேசவிருப்பதாகவும் இந்தியா டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறி இருக்கிறார் உமேஷ்.

தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த 40 பேரின் குடும்பங்களை சந்தித்து அவர்களிடம் கொஞ்சம் மண்ணை வாங்கிக் கொண்டு மூன்று மாதங்களில் தன் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

Pulwama Attack Homage
உக்ரைன் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய iPhone - எப்படி? |Viral Video

ஆனால் அப்பயனும் அத்தனை எளிதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்தை சந்தித்து பேசும் போதும் ஒவ்வொருவரின் வீட்டிலும் நான்கு முதல் ஐந்து நாட்கள் தங்கி இருந்து அவர்களோடு நேரத்தை செலவிட்டு மண்ணை சேகரித்து வர வேண்டி இருந்தது. அது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்தது எனவே மூன்று மாதங்கள் திட்டமிட்ட பயணம் மூன்று ஆண்டுகளாக நீண்டு விட்டது என்கிறார்.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தை சந்திக்கும் அதே நேரத்தில் இந்தியா தரப்பில் போரிட்ட உயிர் நீத்த பல ராணுவ குடும்பங்களையும், இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு போரிட்ட குடும்பங்கள் வரை பல ராணுவ பின்புலம் கொண்ட குடும்பங்களை சந்தித்து பேசினார் உமேஷ் கோபிநாத்.

இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்தது. எனக்கு எந்த ஒரு ராணுவ பின்புலமும் கிடையாது. ஆனால் ஒரு சாதாரண இந்திய குடிமகன்களின் பிரதிநிதியாக இதை நான் செய்ய விரும்பினேன். அது ராணுவ பணியில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.

ராணுவ பணியில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள் என்னிடம் வெறும் மண்ணை மட்டும் கொடுக்கவில்லை. சில குடும்பங்கள் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வைத்திருந்த தொப்பி, காலனி, பேனா, டைரி... என பல பொருட்களை கொடுத்து இருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வலியையும், அதை விஞ்சி தன் நாட்டுக்காக உயிர் நீத்த தங்கள் குடும்ப உறுப்பினர் குறித்த பெருமிதத்தையும் வார்த்தைகளில் அளந்து விட முடியாது. அவர்களுடைய தியாகத்துக்கு அவர்களை மதிப்பதை தவிர வேறு எதையும் நம்மால் செய்ய முடியாது என உருக்கமாக கூறுகிறார் உமேஷ் கோபிநாத்.

வெறும் 2000 ரூபாயில் தன் பயணத்தை தொடங்கிய கோபிநாத்துக்கு எதிர் பார்த்தது போலவே பல்வேறு சோதனைகள் இருந்தன. மும்பை பெரு வெள்ளத்தில் கிட்டத்தட்ட தன் காரையே இழக்கும் சூழல் ஏற்பட்டது. பெரும்பாலான பயண நேரத்தில் தன்னுடைய காரிலேயே தூங்கி எழுந்துள்ளார். பல நாட்கள் சாப்பிட ஏதும் இன்றி வெறும் ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு நாட்களைக் கடத்தி இருக்கிறார்.

இந்த பயணத்தை மேற்கொள்வதற்காக தன் இசைப் பள்ளியை மூடிய உமேஷ் கோபிநாத், அதை மீண்டும் திறக்கும் யோசனையில் இல்லை. அவர் மேற்கொண்ட பயணத்தை பார்த்து தற்போது பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இவரை விருந்தினராக அழைக்கின்றனர்.

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக இளைஞர்களை ஊக்குவிக்க இருப்பதாக கூறியுள்ளார் உமேஷ் கோபிநாத்.

தன்னுடைய இந்த நீண்ட நெடிய பயணத்தை குறித்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்கவும் ஒரு புத்தகத்தை வெளியிடவும் இருப்பதாகக் கூறியுள்ளார்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவரது மகன் தற்போது என் சி சி யில் சேர்ந்து இருக்கிறார். இந்திய ராணுவத்தில் ஓர் அதிகாரியாக வர விரும்புவதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.

Pulwama Attack Homage
ராணுவ குறியீடுடன் கரை ஒதுங்கிய உடல் : உளவாளியா? - முடிவுக்கு வரும் 70 ஆண்டு மர்மம் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com