

Rahul Bajaj
NewsSense
ஆட்டோ மொபைல் துறையில் பஜாஜ் நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக உயர்த்திய ராகுல் பஜாஜ் காலமானார்.
இவர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
NewsSense
ராகுல் பஜாஜ் 1938 ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி பிறந்தார்.
பொருளாதாரம் மற்றும் சட்டம் பயின்ற அவர், 1965 ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
அதன்பின் பஜாஜ் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதால், பஜாஜ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது.
அவர் பஜாஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுபேற்கும்போது, இந்த பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ராகுல் பஜாஜ், வியாபார யுக்தியினால் மார்கெட்டில் பஜாஜின் பெயரை உச்சம் தொட வைத்தார்.
இவரது நிர்வாக திறமையால் 1960-களில் சுமார் 3 கோடி ரூபாயாக இருந்த ஆண்டு வருவாய் ஏறத்தாழ 35 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.
வயது மூப்பின் காரணமாக ராகுல் பஜாஜ் 2021 ஆம் ஆண்டு சேர்மன் பதவியில் இருந்து விலகினார்.
பின்னர், நீரஜ் பஜாஜிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இவரின் தொழில் பங்களிப்புக்காக 2001 ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
2019ஆம் ஆண்டு எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகத்துக்கு நேரே விமர்சித்தார் ராகுல் பஜாஜ்.
இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் பஜாஜ்,"எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இந்த சூழலை என் தொழில்துறை நண்பர்களும் அறிவார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்வதில்லை. நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்," என்றார்.
"ஐக்கிய முற்போக்கு அரசின் இரண்டாவது ஆட்சியின் போது, நாங்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். அது வேறு. நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். மறுக்கவில்லை. ஆனால், உங்களை விமர்சிக்க எங்களுக்கு ஒருவித அச்சம் இருக்கிறது. உங்களை விமர்சித்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள். அது சரியாக எடுத்துக் கொள்ளப்படுமா என்ற அச்சம் அது" என்றார்.
அதே ஆண்டு, "வளர்ச்சி என்ன வானத்திலிருந்தா வரும்?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
அப்போது அவர், "ஆட்டோமொபைல் துறை மிக மோசமான சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்திக்கு ஏற்ப சந்தையில் நுகர்வு இல்லை. தனியார் துறையில் பெரியளவில் முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் வளர்ச்சி எங்கிருந்து வரும். வானத்திலிருந்தா வளர்ச்சி வரும்?" என்று கூறி இருந்தார்.