தேவாலயத்தில் மணி அடிக்கும் இஸ்லாமிய சேவகர் - கேரளாவில் இன்றும் தொடரும் ஆச்சரியம்

"நான் பிறப்பால் ஓர் இஸ்லாமியன் என்றாலும், இத்தனை ஆண்டு காலமாக நான் பள்ளியில் தான் பணியாற்றி வருகிறேன். இதுநாள்வரை என்னை யாரும் மத ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. என் சமூகத்தவரோ, கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்தவரோ எவரும் என்னை பணியிலிருந்து வெளியேறுமாறு கூறியதில்லை.
church in kerala
church in keralaTwitte
Published on

ராம நவமியை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் உண்டானதையும், இஸ்லாமியர்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவதையும் நாம் செய்திகளில் படித்து வருகிறோம்.

ஆனால் இந்த சம்பவங்களுக்கு நேர் மாறாக, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாமியர் ஒருவர், கிறிஸ்தவ தேவாலயத்தில் சேவை செய்து தன் வாழ்கையை நடத்தி வருகிறார்.

இச்சம்பவம் தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்து பலரையும் இந்திய மத ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் குறித்து பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா நகரத்தில் உள்ளது புனித மேரிஸ் ஜேகோபைட் சிரியன் கிறிஸ்தவ தேவாலயம். இது கடந்த 1980களில் கட்டப்பட்டது முதல் நசர் ஹமீத் என்கிற இஸ்லாமியர் இங்கு சேவை செய்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்டத்தில் கரிகோடு என்கிற ஊரைச் சேர்ந்தவர்.

தேவாலயத்தைச் சுத்தம் செய்வது தொடங்கி மணி அடிப்பது, தேவாலயத்தில் நடக்கும் திருமணங்கள், காலமான கிறிஸ்தவர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடங்குகள், ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாக்கள், கிறிஸ்தவ மத பண்டிகைகள் என எல்லாவற்றிலும் அவரின் பங்கு அளப்பரியது.

"எனக்கு 20 வயது இருக்கும் போது இந்த பள்ளியில் சிறு சிறு பணிகளைச் செய்யத் தொடங்கினேன். பிறகு கை செலவுக்குக் கொஞ்சம் காசு கிடைக்கும், என் தந்தையைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என இப்பள்ளியில் பணியாற்றினேன். ஒருகட்டத்தில் எனக்கு இது பழகிய பணியாகிவிட்டது, குறிப்பாக எனக்கு இது மன அமைதியைக் கொடுத்தது" என்கிறார் நசர் ஹமீத்.

காலம் கடந்தோட நசர் ஹமீத் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர் மனைவி உட்பட எவரும் அவர் தேவாலயத்தில் பணியாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

நசர் ஹமீதின் அர்ப்பணிப்பைப் பார்த்த தேவாலயத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் மற்றும் பாதிரியார்கள், தேவாலயம் முன் ஒரு சிறு தற்காலிக காய்கறி கடையை அமைத்துக் கொள்ளவும் அனுமதி கொடுத்துள்ளார்கள்.

church in kerala
ராஜஸ்தான் கலவரம் : 15 இஸ்லாமியர்களைக் காப்பாற்றிய இந்து பெண்

நசர் ஹமீதுக்கு தேவாலயம் கொடுக்கும் சம்பளம் போக, தன் சொந்த உழைப்பில் கொஞ்சம் கூடுதல் வருமானத்தை ஈட்ட, அந்த கடை உதவுகிறது. தேவாலயத்தினர் போக, ஊர் மக்களும் நசர் ஹமீத்தின் பணியை வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

"நான் பிறப்பால் ஓர் இஸ்லாமியன் என்றாலும், இத்தனை ஆண்டு காலமாக நான் பள்ளியில் தான் பணியாற்றி வருகிறேன். இதுநாள்வரை என்னை யாரும் மத ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. என் சமூகத்தவரோ, கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்தவரோ எவரும் என்னை பணியிலிருந்து வெளியேறுமாறு கூறியதில்லை. நான் இந்த பணியில் மகிழ்வடைகிறேன்" என நம்மைப் பூரிக்க வைக்கிறார் நசர் ஹமீத்.

தற்போது நசர் ஹமீது புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு வைத்து, பள்ளிவாசலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வந்தாலும், தேவாலயத்தில் தன் பணிகளைச் செம்மையாகச் செய்து வருகிறார்.

church in kerala
151 பேர் கொல்லப்பட்ட விமான விபத்திலிருந்து தப்பிய இளம் பெண் - என்ன நடந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com